Tuesday, March 9, 2021

தேவனைப் புரிந்து கொள்கிற இருதயம்

 வாசிக்க: எண்ணாகமம் 19, 20; சங்கீதம் 68;  மாற்கு 6:30-56

வேதவசனம்: மாற்கு 6: 47. சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார். 48. அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார். 49. அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள். 50. அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி,  51. அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். 52. அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமற்போனார்கள்.

கவனித்தல்:  இயேசு தம்முடைய சீஷர்களை ஓய்வுக்காக ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் ஏற்றிச் சென்ற படகு அந்த இடத்தை அடைவதற்கு முன்பே ஒரு பெரிய கூட்டம்  ஜனங்கள் கால்நடையாக நடந்து அந்த இடத்தை அடைய முடிந்தது (வச. 32,33). ஒரு வலுவான காற்று படகின் பயணத்தை தாமதப்படுத்தியிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். அற்புதமாக உணவளித்த பின்பு, இயேசு தனிமையாக ஜெபிக்கச் சென்றார்,  தம்முடைய சீடர்களை பெத்சாயிதாவுக்கு அனுப்பினார். ஜெபித்து முடித்த பின், இரவு நேரத்தில் அவர் கரையில் இருந்தபடியே, நடுக்கடலில் தம் சீடர்கள் பெருங்காற்றில் கஷ்டப்பட்டு படகில் செல்வதை அவர் பார்த்தார். அதன் பின்னர், இயேசு கடலில் நடப்பதையும், கடலில் நடந்து அவர்களின் படகைக் கடந்து செல்வது போல சென்றார். இயேசுவைப் பார்த்ததும், அவர்கள் பயந்து அலறினார்கள், ஏதோ ஆவி என்று அச்சமடைந்தார்கள். ஆனால் இயேசு அவர்களைப் பார்த்து, “திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள்” என்று கூறி அவர்களை ஆறுதல்படுத்தினார். இயேசு படவில் ஏறினவுடனே, காற்று அமர்ந்தது. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க ஆர்வமாயிருந்த காரணத்தினால் ஜனங்கள் படகு செல்வதற்கு முன்னமே அந்த இடத்திற்கு நடந்து சென்றனர். ஆனால், காற்றுக்கு எதிராக அவர்கள் படகை செலுத்துவதற்கு பட்ட கஷ்டத்தைக் கண்ட இயேசு, கடல் மீது நடந்து சென்று அவர்கள் படகைக் கடந்து செல்வது போல அதினருகேச் சென்றார்.  இயேசு தன் சீடர்களுக்கு உதவுவதற்காகவே வந்தார். சீடர்கள் ஆச்சரியமடைந்தது உண்மைதான் எனினும், அவர்கள் “அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமற்போனார்கள்.”  அவர்கள் இயேசுவின் அற்புத வல்லமையை மறந்து போயிருந்தார்கள். அதாவது, ஒரு பெருங்கூட்ட ஜனங்களுக்கு அற்புதமாக உணவளித்த இயேசுவானவரால் நீர்  மீது நடக்கவும் முடியும் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். 

பயன்பாடு: சில நேரங்களில், என் வாழ்வின் கடினமான தருணங்களினூடாக நான் செல்கிற வேளைகளில், என்னை விடுவிப்பதற்காக இயேசு இருப்பதையும், அவரின் உதவியையும் நான் கவனிக்காமல் போகக் கூடும். இயேசு என்மீது கரிசனை உள்ளவராக இருக்கிறார், அவர் ஒரு போதும் என்னைக் கைவிட மாட்டார் என்று நான் நினைவுபடுத்தவேண்டும். கடந்த நாட்களில் அவர் அனேக பெரிய காரியங்களை என் வாழ்வில் செய்திருக்கிறார். இது உண்மை எனில் வேண்டும், எங்கும் எப்பொழுதும் அவரால் எனக்கு உதவ முடியும். கர்த்தர் எனக்கு செய்தவைகளை நான் மறக்கக் கூடாது. அவரால் 5000 பேருக்கு உணவளிக்க முடியும் எனில், கடலில் நடப்பதும் அவருக்கு லேசானதாகவே இருக்கும். கடந்த காலத்தில் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார் எனில், இப்போதும், இனி வரும் காலங்களிலும் அவர் எனக்கு உதவி செய்ய வல்லவராக இருக்கிறார். இது மிக எளிமையான உண்மையாக இருந்தாலும், அனேகர் தங்கள் கடின இருதயத்தினால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருக்கக் கூடாது. 

ஜெபம்:   இயேசுவே, என் மீது நீர் வைத்திருக்கிற உம் அன்புக்காக, கரிசனைக்காக நன்றி. நீர் எப்பொழுதும் என்னுடன் நடக்கிறீர். நான் நடக்க முடியாத நேரங்களில், என்னை உம் கரங்களில் நீர் ஏந்திக் கொள்கிறீர்/சுமக்கிறீர். உம் அன்பையும், வல்லமையையும் புரிந்து கொள்ள எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: