Monday, March 1, 2021

ஓய்வுநாளின் ஆண்டவர்

 வாசிக்க: எண்ணாகமம் 3, 4; சங்கீதம் 60;  மாற்கு 2:18-28

வேதவசனம்: மாற்கு 2: 23. பின்பு, அவர் (இயேசு) ஓய்வுநாளில் பயிர் வழியே போனார்; அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள்.
24. பரிசேயர் அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள்...
27. பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;
28. ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

கவனித்தல்: மோசேயின் நியாயப்பிரமாணத்தின் பாதுகாவலர்கள் என தங்களைக் குறித்து பரிசேயர்கள் கருதினர். மோசே மூலமாகக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை கைக்கொள்வது அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர். ஆகவே அவர்கள் கடுமையான பாரம்பரியங்களைப் பின்பற்றி, ஒவ்வொரு யூதனும் அதைப் பின்பற்ற வேண்டும் என போதித்து வந்தனர். அந்த யூதப் பாரம்பரியங்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதை மிகக் கடினமானதாக்கின. ஏனெனில் அவை மக்களுக்கு சுமையாக தோன்றின சட்ட திட்டங்களையும் ஒழுங்குகளையும் கடைபிடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தின. இங்கே, ஒரு ஓய்வு நாளில் இயேசுவின் சீடர்கள் செய்ததை வைத்து அவரிடம் பரிசேயர்கள் கேள்வி எழுப்பினர். நற்செய்தி நூலின்படி, ஓய்வு நாள் மீறுதல் குறித்து பரிசேயர்கள் இயேசுவிடம்  திரும்பத் திரும்பக் கேள்விகேட்பதைக் காணலாம். அந்நாட்களில், பாரம்பரியத்தின்படி நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவது என்பது மக்களுக்கு எந்த நோக்கத்திற்காக அது வழங்கப்பட்டதோ அதைக் காட்டிலும்  முக்கியமானதாக இருந்தது. இந்த இடத்தில்,  இஸ்ரவேலர்கள் ஒரு நாளில் இளைப்பாறி தங்கள் சரீர, ஆன்மீக மற்றும் மன வலிமையைப் பெற்றுக் கொள்வதற்காக மோசே மூலமாகக் கொடுக்கப்பட்ட  ஓய்வு நாளைப் பற்றிய பிரமாணத்தைப் பற்றி இயேசு பேசுகிறதை நாம் பார்க்கிறோம்.  “மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது” என்று இயேசு பரிசேயர்களுக்கு நினைவுபடுத்தினார். ஓய்வு நாளுக்கும் தான் ஆண்டவராக இருப்பதை அவர்களுக்கு அறிவித்தார். அவர்களுடைய நியாயப்பிரமாணம் பற்றிய வியாக்கியானங்களையும்,  அதைப் பின்பற்றுவதற்கு அவர்கள் வகுத்திருந்த பழக்க வழக்கங்கள், ஒழுங்குகளையும் இயேசு எதிர்த்தார். ஓய்வு நாள் கொடுக்கப்பட்ட உண்மையான நோக்கத்தை இயேசு வலியுறுத்தினார். அது ஓய்வு எடுத்து இளைப்பாறவும், தேவனை ஆராதிப்பதற்குமான ஒரு நாள். 

பயன்பாடு:  பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்கள் போன்ற கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகளில் விழுந்து விடாமல் இருக்கும்படி நான் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில், பாரம்பரியமான பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் நமக்கு உதவியாயிருப்பதற்குப் பதிலாக, நமக்கு சுமைகளாக மாறி, மக்களிடையே ஒரு குற்ற உணர்ச்சியை உண்டாக்கக் கூடும். மேலும், அது தேவனை விட்டு நம்மை விலக்கிவிடக் கூடும். ஒரு குறிப்பிட்ட நாளை வலியுறுத்தாமல், ஒரு மனிதனுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் ஓய்வை வலியுறுத்துவதுதான் ஓய்வு நாளின் நோக்கம் ஆகும். ஒரு மனிதனின் நோக்கம் கர்த்தரில் இளைப்பாறுவதாக இருக்க வேண்டும். ஏனெனில், அவர் ஓய்வுநாளின் ஆண்டவராக இருக்கிறார். 

ஜெபம்:  பிதாவாகிய தேவனே, என் ஆரோக்கியம் மற்றும் ஆவிக்குரிய புத்துணர்ச்சி பற்றி நீர் கரிசனையுள்ளவராக இருப்பதற்காக நன்றி. என் உலக வாழ்க்கைக்குத் தேவையானவைகளைப் பெற்றுக் கொள்ள முழு மனதோடு நான் என் நேரத்தைச் செலவழிக்கையில், என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், என் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்துக்குத் தேவையான இளைப்பாறுதலைப் பெறவும் எனக்கு உதவும். பரிசுத்த அகஸ்டின் ஜெபித்தது போல,  “ஆண்டவரே, எங்களை உமக்கென்று உண்டாக்கி இருக்கிறீர்.  உம்மில் இளைப்பாறுதலைக் கண்டடைகிறவரைக்கும் எங்கள் இருதயமானது இளைப்பாறுதல், அமைதி அடைவதில்லை.” ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: