Sunday, February 28, 2021

எது எளிது?

வாசிக்க: எண்ணாகமம் 1, 2; சங்கீதம் 59;  மாற்கு 2:1-17

வேதவசனம்: மாற்கு 2: 6. அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:
7. இவன் இப்படி தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
8. அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன?
9. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?

கவனித்தல்: இயேசு திமிர்வாதக்காரனை (பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை) குணமாக்கிய போது, தனக்கு முன்பாக அந்த வியாதிப்பட்ட மனிதனை மிகுந்த பிரயாசத்துடன் கொண்டு வந்த மனிதர்களின் விசுவாசத்தைக் கண்டார். அந்த மனிதர்களோ அல்லது திமிர்வாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த மனிதனோ இயேசு சுகப்படுத்தவேண்டும் என எதுவும் கேட்டதாக நற்செய்தி நூலில் இல்லை என்பது மிகவும் ஆச்சரியமளிக்கிறது. ஆயினும்,  “இயேசு அவர்கள் விசுவாசத்தைக்” கண்டார் என நாம் வாசிக்கிறோம். அவர்கள் விசுவாசத்தை மட்டுமல்ல, அங்கே இருந்த மனிதர்களின் சிந்தனைகளையும் அவர் அறிந்து கொண்டார். அந்த திமிர்வாதக்காரனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொன்னதன் மூலம் இயேசு தேவ தூஷணம் செய்து விட்டதாக வேதபாரகர்கள் நினைத்தனர்.  இயேசுவோ அந்த மனிதனின் நோய்க்கான மூல காரணம் என்ன என்பதை அறிந்து,  “மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்று சொன்னார். எல்லா நோய்களுக்கும் காரணம் பாவங்கள் அல்ல. ஆயினும், இந்த திமிர்வாதக்காரனின் சம்பவத்தில் நாம் பார்ப்பது போல, பாவங்கள் வியாதிக்கு காரணமாக இருக்கக் கூடும். மனிதனின் நோய்க்கான மூல காரணத்தை புரிந்துகொள்கிற சிறந்த மருத்துவர் இயேசுகிறிஸ்து. அது சரீரப்பிரகாரமானதாக இருந்தாலும் சரி, ஆவிக்குரியப் பிரகாரமானதாக இருந்தாலும் சரி, ஒருவர் சுகமடைய (அ) குணமாகுதலுக்கு ஒரு நபருக்கு என்ன தேவையோ அதை இயேசு செய்கிறார். தன் கேள்வியின் மூலம், வேதபாரகர்களுக்கு இயேசு தன் தெய்வீகத்தைப் பற்றி சொன்னார். அதாவது, அற்புதம் செய்கிற ஒரு ஊழியரை விட மேலானவர் என்று சொல்லி தன் தெய்வீகத்தை அவர்களுக்குப் பறைசாற்றினார். 

பயன்பாடு:  இயேசுவின் தொடுதல் தேவைப்படுகிறவர்களுக்காக நான் எடுக்கும் முயற்சிகளை இயேசு காண்கிறார். என் சிந்தனைகளையும் கூட அவர் அறிந்திருக்கிறார். இயேசுவுக்கு முன்பாக மற்றவர்களைக் கொண்டுவருவதில் உள்ள தடைகளைப் பற்றி நான் யோசிக்கையில், அந்த திமிர்வாதக்காரனின் நண்பர்கள் என்ன செய்தார்கள் என்பதை நான் நினைத்துப் பார்க்க வேண்டும். அசாதரணமான ஒன்றை செய்து அவர்கள் திறப்பை உண்டாக்கினர், இயேசுவின் முன் அவனைக் கொண்டுவர வழி செய்தனர். ஒரு மனிதரின் சரீர குணமாகுதலைக் காட்டிலும், அவருடைய ஆன்மீக நலம் குறித்து இயேசு அதிக கரிசனை உள்ளவராக இருக்கிறார் என்பதை நான் அறிந்து கொள்ள  வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் என இயேசு விரும்புகிறாரோ அதை நான் செய்ய வேண்டும். அது மற்ற எதையும் விட செய்வதற்கு எளிதானதாக இருக்கும். என் மூலமாக தேவன் மகிமைப்படுவார். 

ஜெபம்:   இயேசுவே, உம் வல்லமையையும், உம் சித்தத்தையும் அறிந்து கொள்ள எனக்கு உதவுவதற்காக உமக்கு நன்றி. நீர் குணமாக்கவும், பாவங்களை மன்னிக்கவும் வல்லமை உடையவராக இருக்கிறீர்.  உம் முன்பாக வரவும், மற்றவர்களை உம்முன் கொண்டு வரவும் எனக்கு தடையாக இருக்கக் கூடிய எந்த மனத்தடைகள் மீதும் வெற்றி பெற எனக்கு உதவும். உமக்கு அது மிகவும் இலேசான காரியம்! ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: