Friday, February 26, 2021

அல்தஷ்கேத் - அழித்துப் போடாதிரும்

வாசிக்க: லேவியராகமம் 23, 24; சங்கீதம் 57; மாற்கு 1:1-20

வேதவசனம்: சங்கீதம் 57: (தான் கெட்டுப்போகாதபடிக்கு அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கத் தாவீது பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம்) 1. எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.

கவனித்தல்: சங்கீதம் 57 க்குக் கொடுக்கப்பட்டிருக்கிற தலைப்பு இன்று நம் கவனத்தைப் பெறுகிறது. இந்த சங்கீதமானது “அல்தஷ்கேத்” எனும் எபிரேய மொழிப் பாடலின் இராகத்தில் பாட எழுதப்பட்டது ஆகும். “அல்தஷ்கேத்” என்றால் எபிரேய மொழியில் “அழித்து விடாதே” என்று அர்த்தம். சங்கீத புத்தகத்தில் நான்கு சங்கீதங்களின் தலைப்பில் “அல்தஷ்கேத்” என்ற வார்த்தையும் (சங்.57-59, 75), ஆறு சங்கீதங்களின் தலைப்பில் மிக்தாம் என்ற வார்த்தையும் (சங்.16, 56-60) வருகிறது. மிக்தாம் என்ற வார்த்தையின் பொருள் இன்னதென்று இன்னமும் கண்டறியப்படவில்லை. ஆயினும், இச்சங்கீதங்களில் பெரும்பாலானவை, தாவீது தன் எதிரிகளிடம் இருந்து பிரச்சனைகளை சந்தித்த நேரங்களில் எழுதப்பட்டவை. சங்கீதக்காரன் தன் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்காக எவ்வளவு தீவிரமாக தேவனை நாடி, அவருடைய உதவியைக் கேட்கிறார் என்பதை இச்சங்கீதங்கள் வெளிப்படுத்துகிறது.

இந்த சங்கீதம் எழுதப்பட்ட சூழலைக் கவனிக்கும்போது, இஸ்ரவேலரில் வலிமையில் சிறந்த 3000 வீரர்களுடன் தாவீதையும் அவனுடன் கூட இருந்த மனிதர்களையும் முற்றுகையிட்டு, கொல்ல சவுல் சென்றதை நாம் அறிந்து கொள்கிறோம் (1 சாமுவேல் 24:2). உதவி வேண்டி, தாவீது தேவனை நோக்கிக் கூப்பிடுகிறார். தேவனைத் துதிக்க தன் இருதயத்தை ஆயத்தப்படுத்துகிறார். அவருடைய எதிரிகள் சிங்கங்களைப் போலவும், கொடிய காட்டு மிருகங்களைப் போலவும் ஆபத்தானவர்களாக இருந்தார்கள் என்பது உண்மைதான். எனினும், தேவனுடைய அன்பும், அவருடைய உண்மையும் ஒப்பிட முடியாதவை, விவரிக்க இயலாதவை என்பதில் தாவீது உறுதியாக இருந்தார். ஆகவேதான் அவரால் “அழித்து விடாதிரும் - அல்தஷ்கேத்” எனும் பாடலை பாட முடிந்தது. முடிவில், தாவீதும் அவனுடன் இருந்தவர்களும் ஒளிந்திருந்த அதே குகைக்கு எந்த ஆயுதங்களும் இன்றி சவுல் செல்வதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அப்பொழுது, தாவீதுதான் சவுலைக் கொல்லாமல் பிழைத்துப் போக விடுகிறார். தாங்கமுடியாத பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போதும், சமாளிக்கமுடியாத எதிரிகளை எதிர்கொள்ள நேரிடும்போது, தேவனுடைய அன்பின் மற்றும் நம்மை விடுவிக்க அவருக்கு உள்ள வல்லமையை மீது உள்ள நம்பிக்கையில் நாமும் கூட இது போன்ற ஒரு பாடலைப் பாடமுடியும்.

பயன்பாடு: என் வாழ்க்கையில் சூழ்நிலைகள் மற்றும் போராட்டங்கள் என்னதான் இருந்தாலும், நான் துதிப்பாடல்களையும், நம்பிக்கையின் பாடல்கலையும் நான் எக்காலத்திலும் பாட முடியும். நான் பெரிய மலைகளை எதிர்கொள்ளும் தருணங்களில், “விக்கினங்கள் கடந்துபோகுமட்டும்” தஞ்சமடையும்படி ஒரு குகையை நான் கண்டடையலாம். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நிழலின் கீழ், அவருடைய அனுமதியின்றி எவரும் தேவனுடைய பிள்ளையை தொடக் கூட முடியாது. என் எதிரிகள் என் “கால்களுக்குக் கண்ணியையும்” எனக்கு முன்பாக “குழியையும்” தோண்டும்போது, நான் தேவன் மீது என் கண்களை பதியவைத்து, அவரைத் துதிக்க என் இதயத்தை ஆயத்தப்படுத்த வேண்டும். அவருடைய அன்பு அளவற்றது, அவருடைய உண்மை, சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது. இதைவிட அதிகமாக வேறென்ன எனக்கு வேண்டும்!

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் பிரச்சனைகளில் இருந்தும், என் எதிரிகளிடம் இருந்தும், மற்றும் என் வாழ்க்கையின் கஷ்டங்களில் இருந்தும் என்னைப் பாதுகாக்கும் புகலிடமாக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி. உம் அன்பையும் வல்லமையும் வெளிக்காட்டும் உம் உதவியை நீர் உண்மையுடன் தொடர்ந்து எனக்கு அனுப்பிக் கொண்டிருப்பதற்காக உமக்கு நன்றி. உம்மை எக்காலத்திலும் அன்புடன் தேடவும், உமக்கு உண்மையுள்ளவனா(ளா)க வாழவும் எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: