Wednesday, February 3, 2021

பயம் நீக்கும் ஜெபம்

வாசிக்க: யாத்திராகமம் 17, 18; சங்கீதம் 34; மத்தேயு 17:14-27

வேதவசனம்: சங்கீதம் 34:4. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். 5. அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.

கவனித்தல்:  சங்கீதம் 34 ன் தலைப்பை நாம் வாசிக்கும்போது, தாவீது தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு கஷ்டமான காலத்தில் இருந்தார் என்று அறிய முடிகிறது.  வலிமையான மற்றும் துணிச்சல் நிறைந்த போர்வீரனான தாவீது தன்னுடைய உயிரைக் காப்பாற்ற தான் பித்தங்கொண்டவன் போல அல்லது பைத்தியக்காரன் போல நடிக்கவேண்டியிருக்கும் என கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார். அங்கிருந்தவர்கள் தங்கள் அரசனிடம் தாவீதின் யுத்த பெருமையைப் பற்றிச் சொல்லும்போது தாவீது இப்படி செய்தார் என நாம் வாசிக்கிறோம். 1 சாமுவேல் 21:10-15 ஐ நாம் வாசிக்கும்போது, அவன் மிகவும் பயப்பட்டபடியால் அப்படிச் செய்ததாக நாம் வாசிக்கிறோம். வெளிப்படையாக அல்லது சத்தமிட்டு ஜெபிக்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் அவர் இருக்கவில்லை. எதிர்பாராத அப்படிப்பட்ட ஒரு சமயத்தில், தாவீது அமைதியாக தன் இருதயத்தில் ஜெபித்திருக்க வேண்டும். சங்கீதம் 34ல், தன் அமைதியான ஜெபத்தின் பதில் என்ன என்று தாவீது சொல்வதை நாம் வாசிக்கிறோம். தேவன் தன் ஜெபங்களுக்கு பதிலையும், எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கி மீட்டதையும், மகிழ்ச்சியைத் தந்ததையும் பாடுகிறார். தம்மைத் தேடுகிற அனைவரின் ஜெபங்களுக்கும் தேவன் பதில் கொடுக்கிறார். 

பயன்பாடு:  தேவனைத் தேடி, அவரை நோக்கி ஜெபம் செய்ய எந்தச் சூழ்நிலையும் தடையாக இருக்கமுடியாது. மற்றவர்களின் உதவியை பெறமுடியாத எதிர்பாராத சூழ்நிலைகள் மற்றும் ஆபத்துகளை நான் எதிர்கொள்ளும்போது, நான் தேவனை உதவிக்கு அழைக்க முடியும். என் இதயத்தின் குரலைக் கூட தேவன் கேட்டு, எல்லா பிரச்சனைகளில் இருந்தும் என்னை அவர் விடுவிக்கிறார். தேவன் பதில் கொடுக்கிறார், விடுவிக்கிறார், மகிழ்ச்சியினால் என்னை நிரப்புகிறார். நான் அவரை எந்த நேரத்திலும் கூப்பிட முடியும். என் ஜெபங்களை நான் அவரிடம் ஏறெடுக்கும்போது, அவர் என் ஜெபங்களைக் கேட்டு பதில் கொடுக்கிறார். என் ஜெபங்கள் ஒரு வழிப்பாதை அல்ல. நான் ஜெபிக்கும் எல்லா நேரங்களிலும், என் பயங்களை மேற்கொள்ள நான் தேவனுடைய சக்தியையும், என் வாழ்வில் அவருடைய சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றனுபவிக்கிறேன். தேவை உள்ள நேரங்களில் மட்டுமல்ல, நான் எப்பொழுதும் அவரைத் தேட வேண்டும். அதுவே அவரின் விருப்பமும் கூட.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் ஜெபங்களைக் கேட்டு, பதில் கொடுப்பதற்காக நன்றி. நான் இரகசியமாக அல்லது அந்தரங்கத்தில் செய்யும் ஜெபங்களுக்குக் கூட நீர் வெளிப்படையான பதிலைத் தருகிறீர்.  உம் முகத்தை நான் அனுதினமும் தேடவும், எப்பொழுதும் ஜெபிக்கவும் எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
3 பிப்ரவரி 2021


No comments: