Sunday, February 21, 2021

விழித்தெழ ஒரு அழைப்பு

 வாசிக்க: லேவியராகமம் 13, 14; சங்கீதம் 52; மத்தேயு 26:36-75

வேதவசனம்: மத்தேயு 26: 69. அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடே கூட இருந்தாய் என்றாள். 70. அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான்...72. அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான்...74. அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று. 75. அப்பொழுது பேதுரு... இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துகொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.

கவனித்தல்:  இயேசுவை அறியேன் என்று பேதுரு மறுதலித்ததைப் பற்றி நாம் வாசிக்கும்போது,  “நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன்” என்று உறுதியாக அறிக்கை செய்த ஒருவர் இயேசுவை எப்படி முற்றிலும் தெரியாது என்று மறுதலிக்க முடியும் என நாம் ஆச்சரியமடைகிறோம். பேதுரு இயேசுவை மறுதலித்தது, யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்ததை விட மோசமான ஒரு செயல்  என்று சிலர் கருதுகின்றனர். பேதுரு அங்கு முற்றத்தில் அமர்ந்திருந்த போது, படிப்படியாக இயேசுவை எப்படி மறுதலித்தார் என நாம் வாசிக்கிறோம். இயேசுவுக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்க்க அவர் அங்கே போய் இருந்தார். ஆலோசனைச் சங்கத்தில் இயேசுவுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லும்படி பலர் முன்வந்து, இயேசு முன்பு சொன்னவைகளை திரித்து மாற்றி அதை அவருக்கெதிரான சாட்சியமாகக் கூறினர்.  தனக்குத்தானே எதிராக, தன் மனச்சாட்சிக்கு எதிராக பொய் சொன்ன ஒரு நபரை நாம் இங்கு காண்கிறோம்.  இயேசுவைக் கொல்ல வேண்டும் என்ற சங்கத்தின் முடிவை அறிந்த பின், இயேசுவின் சீடராக இருப்பதினால் வரும் தண்டனையைக் குறித்து பேதுரு பயந்திருக்கக் கூடும். ஆயினும், ஒரு சேவல் அவனுக்கு ஒரு விழித்தெழுதலின் அழைப்பைக் கொடுத்தது. அவன் இயேசுவையும் அவர் சொன்ன வார்த்தைகளையும் நினைவுகூர்ந்தான். அதன் பின்பு அவன் அந்த இடத்தில் இருக்கவில்லை. மாறாக, இயேசுவை மறுதலித்த தன் துக்கமான செயலை நினைத்து மனம் திரும்பி, மனங்கசந்து அழுதான். பேதுருவின் இந்த மனந்திரும்புதலின் கண்ணீரைக் குறித்து ஸ்பர்ஜன் சொல்லும்போது, "உண்மையான மனம் திரும்புதல் என்பது எப்பொழுதுமே இறைவனின் பரிசு/ஈவு ஆக இருக்கிறது. அது ஆத்துமாவில் பரிசுத்த ஆவியானவர் உண்டாக்கும்  செயல்” என்கிறார். 

பயன்பாடு:  என் வார்த்தைகள், செயல்கள் மற்றும் சிந்தனைகளில் நான் இயேசுவை எப்பொழுதாவது மறுதலித்திருக்கிறேனா என நான் சிந்தித்துப் பார்க்கிறேன். ஞாயிறு ஆராதனைகளிலும், பாடல்களிலும் நான் கர்த்தருக்கு உண்மையாக இருப்பது அர்ப்பணிப்பு பற்றி பாடுவது எளிதானதாக இருக்கலாம். என் வாழ்க்கை முழுவதும் நான் தேவனுக்கு உண்மையாக இருப்பேன் என்றுகூட நான் பாடலாம். ஆயினும், சோதனையான நேரங்களில், சோதனைகள் கண்முன் இருக்கையில், மற்றும் முற்றிலும் எதிர்ப்பு நிலவுகிற சூழ்நிலைகளில், நான் என்ன செய்கிறேன் என்பது நான் பேசும் வார்த்தைகளை விட மிகவும் சத்தமாக தொனிக்கக் கூடியவை ஆகும். பேதுருவின் மனந்திரும்புதல் அவன் திரும்ப வருவதற்கும், அவன் அழைக்கப்பட்ட நோக்கத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் அவனுக்கு உதவியது. சில நேரங்களில், நான் என் நம்பிக்கை மற்றும் மனச்சாட்சிக்கு எதிராக பேசவேண்டிய சூழ்நிலைகள் எனக்கு வரலாம். அச்சமயங்களில், ஆண்டவரை மறுதலிப்பதற்குப் பதிலாக, அச்சோதனைகளுக்கு நான் எந்த வாய்ப்பையும் தரக் கூடாது. நான் இயேசுவின் உதவியை நாடவேண்டும்.  

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே,  நான் எந்த சூழ்நிலையிலும் உமக்காக உறுதியாகவும், தைரியமாகவும் இருந்து, உம்மைப் பற்றிப் பேச, சாட்சிபகர எனக்கு உதவும். ஆமென்.   

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: