Wednesday, February 17, 2021

அக்கினி அணைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

வாசிக்க: லேவியராகமம் 5, 6; சங்கீதம் 48; மத்தேயு 24:29-51

வேதவசனம்:லேவியராகமம் 6: 8. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி...சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்...12. பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன். 13. பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.

கவனித்தல்:  தேவனுடன் ஒப்புரவாகவும், தேவன் மீது உள்ள தங்கள் பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் முழுமையான ஒப்புக் கொடுத்தலை வெளிப்படுத்தவும் தன்னார்வத்துடன் தேவனுக்குச் செய்யும் ஆராதனையின் அல்லது தொழுகையின் ஒரு செயலாக தகன பலியை இஸ்ரவேலர்கள் செலுத்தி வந்தனர். தகன பலியாக செலுத்தப்படுவது எதுவாக இருந்தாலும், அது சாம்பலாகுமட்டும் சுட்டெரிக்கப்பட வேண்டும். இதற்கு, பலிபீடத்தில் உள்ள நெருப்பானது இரவும் பகழும் எப்பொழுதும் எரியும்படி வைத்திருப்பது மிகவும் முக்கியமானது ஆகும். பலிபீடத்தில் வைக்கப்பட்ட பலியானது  முழுவதும் எரிந்த பின்பு, அந்த தகனபலியானது  தேவனுக்குப் பிரியமான “சுகந்த வாசனையாக” ஆகிறது. ஆசாரியன் அனுதினமும் எரிகிறதற்கான விறகை பலிபீடத்தில் வைத்து, அதில் உள்ள சாம்பலை அனுதினமும் அகற்ற வேண்டும். தகன பலி கட்டாயம் செலுத்த வேண்டிய பலி அல்ல, அது விருப்பத்துடன் தன்னார்வமாக தேவனுக்கு படைக்கிற ஒரு பலி. ஆயினும், கர்த்தரிடம் எவரேனும் அதைக் கொண்டுவரும்போது, அல்லது அவர்முன் அதைப் படைக்கும்போது, தேவனுக்குப் பிரியமான சுகந்த வாசனையாக செலுத்த சில நடைமுறைகள் உண்டு.

பயன்பாடு:  மனிதனுக்கும் தேவனுக்கும் ஒப்புரவை உண்டாக்குவதற்காக கிறிஸ்து தம்மையே தியாக பலியாக சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். ஆகவே, தேவனுடன் ஒப்புரவாக இயேசுவை நான் என் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு எதையும் செய்யத் தேவை இல்லை. நான் என் வாழ்க்கையையும், என் “சுயத்தையும்” தேவனுக்குப் படைப்பது நானாக விரும்பி தன்னார்வத்துடன் செய்கிற ஆராதனையின் ஒரு செயல் ஆகும்.  ஆயினும், தேவனுடனான என் உறவு நெருக்கமானதாக இருக்க நான் நெருப்பை அணையவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது,  என் வாழ்க்கை தேவனுக்குப் பிரியமான சுகந்த வாசனையாக இருக்கும். நெருப்பு சுடர் விட்டு எரிய தடையாக இருக்கும் எதையும் நான் என்னிடத்தில் இருந்து அகற்றிப் போட தயாராக இருக்க வேண்டும். என் ஆவிக்குரிய வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்க, இது நான் தொடர்ச்சியாக, அனுதினமும் செய்ய வேண்டிய ஒரு  பொறுப்பு ஆகும். 

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, உம் பலிபீடத்தில் உமக்கு முன்பாக, உமக்காக பலியாக நான் என்னை சமர்ப்பிக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்கிறதற்காக உமக்கு நன்றி. உமக்குப் பிரியமான சுகந்த வாசனையாக என் வாழ்க்கை மாற, அனுதினமும் என்னைக் கழுவி, என் சிந்தனைகளையும் என் வாழ்க்கையையும் சுத்திகரியும். ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: