Thursday, February 25, 2021

சீடராக இருங்கள், சீடர்களை உருவாக்குங்கள்

 வாசிக்க: லேவியராகமம் 21, 22; சங்கீதம் 56; மத்தேயு 28:11-20

வேதவசனம்: மத்தேயு 28: 8. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை (சீடர்களை) நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

கவனித்தல்: மத்தேயு நற்செய்தி நூலில் உள்ள இயேசுவின் இறுதி வார்த்தைகள் அவர் தன் சீடர்களுக்குக் கொடுத்த “மாபெரும் கட்டளை” (The Great Commission) என்று சொல்லப்படுகிறது. இயேசுவின் இந்த மாபெரும் கட்டளை குறித்த பல கிறிஸ்தவர்களின் புரிதலானது மிகவும் தெளிவற்றதாக இருக்கிறது அல்லது அதன் உட்பொருளை அவர்கள் முழுவதுமாக புரிந்து கொள்ள வில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது ஆகும். மாபெரும் கட்டளை என்றால் செய்து முடிக்கக் கூடிய எளிதான காரியம் அல்ல, மிகவும் கடினமான ஒரு வேலை என சிலர் நினைக்கின்றனர். முதலாவதாக, நாம் மத சம்பந்தமான சடங்குகளையோ அல்லது மதச் சட்டங்களையோ பின்பற்றும்படி அழைக்கப்படவில்லை. மாறாக, நாம் இயேசுவின் சீடராக இருக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார். ஒரு உண்மையான சீடர் தன் குருவை அல்லது ஆசிரியரை தன்னால் இயன்ற மட்டும் எல்லா விதத்திலும் பின்பற்ற முயற்சி செய்வார். இயேசுவின் சீடரானவர் சீடர்களை உருவாக்குகிறவராக இருக்க வேண்டும். இயேசுவின்  “போ” என்ற கட்டளையானது,  ஒரு வசதியான இடத்தைக் கண்டுபிடித்து, அங்கேயே போய் நிரந்தரமாக இருப்பதைக் குறிக்கவில்லை. அது புறப்பட்டுச் சென்று, சீடர்களை உருவாக்கவும், அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும், மற்றும் இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய கற்றுக் கொடுப்பதற்குமான ஒரு அழைப்பு ஆகும். இங்கே கொடுக்கப்பட்ட வரிசையைக் கவனித்துப் பாருங்கள். இதை நான் எப்படி செய்து முடிக்க முடியும் என ஒருவர் நினைக்கக் கூடும். இயேசு இந்த உலகத்தின் முடிவு பரியந்தமும் நம்முடனே எப்பொழுதும் கூட இருப்பதாக வாக்குப்பண்ணி, உறுதி அளித்திருக்கிறார். வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருகிறது. அவர் நம்முடன் இருந்து, நம் வாழ்நாளில் அவருடைய மாபெரும் கட்டளையை நாம் செய்ய நமக்குப் பெலனளிக்கிறார். 

பயன்பாடு:  சீடர்களை உருவாக்குபவராக இருப்பதற்கான முக்கியமான ஒரு தகுதி என்னவெனில், இயேசுவின் சீடராக இருப்பது ஆகும். சீடர்களை உருவாக்குபவர் என்ற பதம் ஒரு அலுவலகப் பணியையோ அல்லது நிறுவனப் பொறுப்பையோ குறிக்கும் ஒரு வார்த்தை அல்ல. அது இயேசுவைப் பின்பற்றுவதற்காக ஒருவரின் வாழ்நாள் அர்ப்பணிப்பையும், மற்றவர்களை உருவாக்குவதில் உள்ள அர்ப்பணிப்பையும் குறிப்பது ஆகும். உண்மையான ஒரு சீடரின் பொறுப்பு என்னவெனில், தன் குருவின் போதனைகளை எல்லாரும் அறியச் செய்வது ஆகும். இயேசு என்னோடு இருக்கிறபடியால், நான் புறப்பட்டுச் சென்று, அவர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிற அனைத்தையும் என்னால் செய்து முடிக்க முடியும்.

ஜெபம்: இயேசுவே, “நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்ற உம் வாக்குத்தத்ததிற்காக நன்றி. நான் எங்கு வாழ்ந்தாலும், எங்கு சென்றாலும் உம் பிரசன்னத்தை நான் உணர்ந்து கொள்ள முடியும்.  மாபெரும் கட்டளையில் உள்ள சவால்களை நான் பார்த்துக் கொண்டிராமல், உம் வாக்குத்தத்ததை உறுதியாக நம்பவும், என் பொறுப்பை நிறைவேற்றவும் எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: