Tuesday, February 9, 2021

”உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது”

வாசிக்க: யாத்திராகமம் 29, 30; சங்கீதம் 40; மத்தேயு 20:17-34

வேதவசனம்: மத்தேயு 20:24. மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள். 25. அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 26. உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். 27. உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 28. அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.

கவனித்தல்: "உனக்கு என்ன வேண்டும்" என்ற கேள்வியை இயேசு நம்மிடம் கேட்டால், யாக்கோபு மற்றும் யோவானின் தாயார் சொன்ன பதிலைப் போன்றே நம்மில் பலர் சொல்லி இருப்போம். இயேசுவோடு அங்கிருந்த மற்றச் சீடர்களும் அப்படிப்பட்ட ஒரு பதிலையே சொல்லி இருப்பார்கள். அந்த இருசீடர்களுக்கு எதிராக மற்ற சீடர்கள் எரிச்சலடையக் காரணம் என்னவெனில், எல்லோரும் அடைய விரும்புகிற ஒரு விரும்பத்தக்க நிலையை அவர்களின் தாயார் அவர்களுக்காக கேட்டு விட்டார் என்பதே. ஆனால், இயேசுவோ அவர்களை ஒன்றாக வரவழைத்து, தலைமைத்துவம் பற்றிய ஒரு முக்கியமான பாடத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த உலகத்தில் உள்ள ஆட்சியாளர்களைப் போல இராமல், மனித குலத்திற்கு மனத்தாழ்மையுடன் தன்னைப் போல சேவை செய்ய வேண்டும் என உறுதியாக அவர்களை எச்சரித்தார். இந்த உலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், அவர்கள் மேல் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தி ஆளுகை செய்கின்றனர். ஆனால், இயேசுவைப் பின்பற்றும் ஒருவருக்கு அவரின் செய்தி என்னவெனில், ”உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது.” இந்த உலகம் செயல்படும் விதத்தில் அல்லாது, இயேசு தன் தியாக வாழ்க்கையின் வழியாகக் காண்பித்த மாதிரியின்படி ஒரு தலைவராக இருக்கும்படி ஒவ்வொரு கிறிஸ்தவரும் எதிர்பார்க்கப்படுகிறார். நினைவில் இருக்கட்டும். இது நம் வசதிக்கேற்ப நாம் தேர்ந்தெடுக்கவோ அல்லது நிராகரிக்கக் கூடியதோ அல்ல.


பயன்பாடு: தலைமைத்துவம் பற்றி நான் யோசிக்கும்போது, இந்த உலகத்தில், குறிப்பாக பெருநிறுவனங்களில் நடைமுறையில் இருக்கும் மாதிரிகளை அல்லது தலைவர்களைப் பார்க்க என் மனம் வெளியே கிளம்பிவிடுகிறது. உலகத்தில் இருக்கும் நிறுவன அமைப்பு முறைகள், திட்டங்களைச் செயல்படுத்தும் விதங்கள், மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வெளிக்காட்டும் வழிமுறைகள் ஆகியன எனக்கு மிகவும் ஈர்ப்பானதாக இருக்கிறது. ஆயினும்,ஆகச் சிறந்த உலகத் தலைவர்களும் கூட அல்லது பெரும் நிறுவனங்கள் கூட விழுந்து போக தோல்வியடைய வாய்ப்புள்ளவை என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். உண்மையைச் சொல்வதெனில், பல நிறுவனங்கள், தலைவர்கள் ஒரு புதிய எழுச்சி வரும்போது, புதிய கருத்து உருப்பெறும்போது, காணாமல் போயிருக்கின்றனர். ஆனால், இயேசு தன் சீடர்களுக்குக் காண்பித்த தலைமைத்துவ மாதிரியானது எந்தக் காலத்திற்கும் பொருத்தமானதாகவும், மனித சமுதாயத்திற்கு நலம் தருவதாகவும் இருக்கிறது. இயேசுவின் “பணிவிடை தலைமைத்துவம்” (Servant-leadership) இயேசுவைப் பின்பற்ற விரும்பும் மற்றும் மனிதர்களுக்கு மனத் தாழ்மையுடன் ஊழியம் செய்ய விரும்பும் ஒவ்வொரு கிறிஸ்தவர் மூலமாகவும் இன்றும் தாக்கம் ஏற்ப்படுத்துவதாக இருக்கின்றது. நான் பின்பற்றுவதற்கு ஒரு மகத்தான தலைமைத்துவ மாதிரி எனக்கு முன்பாக இருக்கிறது. என் சிறந்த தலைவரான இயேசு சிலுவையில் தன் கடைசி மூச்சொடுங்கும் வரையிலும் கூட வெற்றிகரமாக இந்த மாதிரியை வெற்றிகரமாகப் பின்பற்றினார்.

ஜெபம்: இயேசுவே, என்றும் பசுமையாக இருக்கும் உம் சத்தியத்திற்காகவும், தலைமைத்துவ மாதிரிக்காகவும் நன்றி. ஒரு பணிவிடை (சேவை செய்யும்) தலைவராக என் ஜனங்களுக்கு நான் ஊழியம் செய்ய எனக்கு உதவும். ஆமென்.


- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573




No comments: