Monday, February 8, 2021

வாழ்க்கையின் குறுகின தன்மை

 வாசிக்க: யாத்திராகமம் 27, 28; சங்கீதம் 39; மத்தேயு 20:1-16

வேதவசனம்: சங்கீதம் 39: 4. கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். 5. இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)

கவனித்தல்: துன்மார்க்கருக்கு முன்பாக அமைதியாகவும் மவுனமாகவும் இருக்க வேண்டும் என தாவீது தீர்மானித்திருந்தார், அப்படியே செய்யவும் செய்தார். ஆயினும், தேவனுக்கு முன்பாக தாவீது வந்தபோது அவ்வாறு செய்ய முடியவில்லை. அவர் தியானித்தபோது, அவருக்குள் அக்கினி மூண்டது (வ.3). அதன் பின்பு அவர் தேவனிடம் ஜெபிக்கையில், “நான் எவ்வளவாய் நிலையற்றவன்?” என்ற ஒரு கேள்வியைக் கேட்கிறார். இதற்கான பதிலையும் அவரே சொல்கிறார். வாழ்க்கை மிகவும் குறுகியது, மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றவர்கள் கூட நீண்டநாட்கள் வாழ முடியாது. எல்லோருக்கும் ஒரு முடிவு உண்டு. இது உண்மை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனாலும், நாம் எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்கிறோம். இந்த உலகத்தில் ஆயிரம் ஆண்டுகள் வாழ்பவர்கள் போல சிலர் நினைக்கவும் செயல்படவும் செய்கின்றனர். தங்கள் முடிவைப் பற்றி நினைக்காமல், கரிசனை உள்ளவர்களாக இராமல், தங்கள் சக்தி, நேரம் ஆகியவற்றை சொத்துக்கள் சேர்ப்பதிலும் பொருட்கள் சேர்ப்பதிலும் செலவழிக்கின்றனர். வலிமை வாய்ந்த, பெரும் பணக்காரர்கள், அதிகாரம் நிறைந்தவர்களின் வீழ்ச்சி மற்றும் மறைவு பற்றி அடிக்கடி நாம் கேள்விப்படவும் வாசிக்கவும் செய்கிறோம் அல்லவா! நாம் எந்தளவுக்கு அதிகமாக நம் வாழ்க்கையின் குறுகிய தன்மையைப் பற்றி உணர்ந்து கொள்கிறோமோ, அந்தளவுக்கு அதிகமாக நாம் நம் வாழ்க்கையின் மூலமாக நீண்டகால விளைவுகளை ஏற்ப்படுத்துவது எப்படி என்பதைப் பற்றித் திட்டமிட வேண்டும்.

பயன்பாடு: இந்த உலகத்தில் என் வாழ்க்கைக் காலம் மிகவும் குறுகியது. ஆனால், இயேசு என் வாழ்க்கையை இனிமையானதாகவும் மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகவும் மாற்றுகிறார். எனக்கெதிராக, என் வாழ்வில் என்ன வந்தாலும் தேவனே என் நம்பிக்கை. ஏனெனில் அவர் நித்தியமானவர். எனக்காக தாம் வைத்திருக்கிற நித்திய வாழ்க்கைக்காக ஆயத்தப்படவும், அதற்காக வாழவும் இயேசு என்னை அழைத்திருக்கிறார். தேவனுடைய திட்டம் மற்றும் சித்தத்தின்படி வாழ்வதன் மூலம்,  என் குறுகின வாழ்க்கையானது, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பிரயோஜனமானதாக மாற முடியும். தற்காலிகமான, நிரந்தரமற்ற காரியங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, நித்தியத்தின் மீது என் கண்களை வைப்பேன்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, மனித வாழ்க்கையின் உண்மைத் தன்மையையும் கால அளவையும் குறித்த உண்மையைப் புரிந்து கொள்ள எனக்கு உதவுவதற்காக நன்றி. ஆண்டவரே, நீரே அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறீர். நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர். உம் நன்மையையும், புகழையும் பரப்புகிற நறுமணமாக என் வாழ்க்கை இருக்கட்டும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573



No comments: