Monday, February 22, 2021

இறைவன் எங்கில்லை!

வாசிக்க: லேவியராகமம் 15, 16; சங்கீதம் 53; மத்தேயு 27:1-31

வேதவசனம்: சங்கீதம் 53:1. தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 2. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

கவனித்தல்:  கடவுளை நம்பும் ஆத்திகருக்கும், கடவுளை நம்பாத நாத்திகருக்கும் உள்ள வித்தியாசமானது, அவர்கள் காரியங்கள்/வார்த்தைகள் இடையே காணப்படும் இடைவெளியை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பதின் அடிப்படையிலேயே பெரும்பாலும் அமைகிறது. கடவுளை நம்புகிறவர், புரிந்து கொள்ள முடியாத இடைவெளியில் இறைவனைக் காண்கிறார். கடவுளை நம்பாதவர் இறைவனைக் காண மறுக்கிறார். உதாரணமாக, இன்றைய தியான தலைப்பை நீங்கள் எப்படி வாசித்துப் புரிந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது ஒன்றுக்கொன்று முரணான இரண்டு வித்தியாசமான வாக்கியங்களைத் தரும்: கடவுளை நம்புகிறவர், “இறைவன் எங்குதான் இல்லை” என்றும்; கடவுளை நம்பாதவர் “இறைவன் எங்கும் இல்லை” என்றும் வாசிப்பார். ஒருவரின் இறை நம்பிக்கையானது அவர் கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஒருவரின் செயல்பாடுகள் அவருடைய கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கும். கடவுள் இல்லை என எவரேனும் நினைத்தால் அல்லது சொல்வார் எனில், வேத வசனம் சொல்வது போல, அவர் ஒரு மதிகேடர். நாம் வாசிக்கிறபடி, 53 ஆம் சங்கீதமானது அப்படியே சங்கீதம் 14 ன் பிரதியாக சிலச் சிறிய மாற்றங்களுடன் திரும்பவும் வருகிறதைப் பார்க்கிறோம். இப்படியாக திரும்பத் திரும்ப வருதல் இந்த இரு சங்கீதங்கள் சொல்லும் செய்தியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருக்கிறது. தேவன் மனிதர்களைப் பார்க்கும்போது,  பாரபட்சமின்றி, பட்சபாதமின்றி அனைவரையும் பார்க்கிறார். தேவன் இந்த உலகத்தைப் பார்க்கும்போது, அவரைப் புரிந்துகொண்டு அவரைத் தேடுபவர்களை கண்ணோக்குகிறார். 

பயன்பாடு:   சில நேரங்களில்,  தாங்கள் நம்புகிறதற்கு சம்பந்தமில்லாத அல்லது முரணான ஒன்றை கட்டாயத்தின் நிமித்தம் செய்பவர்களை நாம் பார்க்கிறோம். ஆயினும், கடவுளைப் பொறுத்தவரையில், எனது நம்பிக்கையும் என் செயல்களும் ஒரு இரயில்வே பாதையில் உள்ள இரண்டு இணையான தண்டவாளங்கள் போன்றவை. இது வெவ்வேறு திசைகளில் செல்ல (பயணம் செய்ய) முடியாது. தேவன் என்னை மேலிருந்து கவனிக்கிறார் என்ற உணர்வுடன் நான் வாழ வேண்டும்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, உம்மை நம்பும், விசுவாசிக்கும் ஒரு இருதயத்தை எனக்குத்  தந்ததற்காக உமக்கு நன்றி. நீர் என்னை பரலோகத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறபடியால், நான் உம் பாதுகாப்பில் இருக்கிறேன். என் தேவனே, நான் உம்மைப் புரிந்துகொண்டு அதன்படி வாழவும், என் வாழ்வில் முதலாவதாக உம்மைத் தேடவும் எனக்கு உதவும். ஆமென்.   

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: