Sunday, February 7, 2021

"அப்படியானால் யார் ரட்சிக்கப்படக்கூடும்?"

வாசிக்க: யாத்திராகமம் 25, 26; சங்கீதம் 38; மத்தேயு 19:16-30

வேதவசனம்: மத்தேயு 19 :25. அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். 26. இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.  

கவனித்தல்: இயேசுவுக்கும் அந்த ஐசுவரியவானாகிய வாலிபனுக்கும் இடையே நடந்த உரையாடலைக் கேட்ட சீடர்கள், இயேசு அந்த வாலிபனுக்குக் கொடுத்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்திருக்கக் கூடும். இங்கே, நித்திய ஜீவனைப் பெற என்ன செய்ய வேண்டும்  என்று அறிந்து கொள்ள விரும்புகிற ஒரு மனிதனை நாம் காண்கிறோம். இயேசுவின் பதிலைக் கேட்டு அவன் துக்கமடைந்தவனாய் தன் வழியில் அவன் திரும்பிச் சென்றுவிட்டான். நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க அவனுக்குத் தடையாக இருந்தது என்ன என்பதை இயேசு அந்த வாலிபனுக்குச் சுட்டிக் காட்டினார். அவன் தேவனுடைய ஈவாக அல்லது பரிசாக அதைப் பெற்றுக் கொள்ளாமல், தன் கிரியைகளின் மூலமாகச் சம்பாதித்துக் கொள்ள விரும்பினான். ஆயினும், இயேசுவின் சீடர்கள் அவரின் பதிலைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது போல காணப்படுகிறது. ஆகவே அவர்கள், “யார் ரட்சிக்கப்படக்கூடும்?” என்று கேட்டார்கள். சில நேரங்களில், நாமும் கூட இயேசுவின் சீடர்களைப் போல யோசிக்கிறோம். நம் உறவினர்கள், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் இரட்சிப்பு பற்றி நாம் நினைக்கும் போது, இன்றும் கூட இயேசு நமக்கும் சீடர்களுக்குக் கொடுத்த அதே பதிலையே கொடுப்பார்:  “மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும்.”
 
பயன்பாடு:  நான் என் கிரியைகளினால் அல்ல, தேவனுடைய கிருபையினாலேயே இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என் வாழ்வின் மையப்பகுதியில் நான் தேவனை வைக்கவேண்டும் என்றும், அனுதினமும் அவரைப் பின்பற்ற வேண்டும் என தேவன் விரும்புகிறார். மேலும், தேவன் எவரையும் இரட்சிக்க முடியும், அவரால் முடியாதது என்று எதுவும் இல்லை. ஒரு நபர் இரட்சிக்கப்பட தடையாக இருக்கிறவைகளை, அதில் உள்ள கஷ்டங்களை நான் பார்த்துக் கொண்டிருக்காமல், எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டும் என்று விரும்புகிற சர்வ வல்லமையுள்ள தேவனை நான் நோக்கிப் பார்க்கவேண்டும். தேவனால் எல்லாம் கூடும்!

ஜெபம்: இயேசுவே, நான் இன்று உம்மிடம் வருகிறேன், அனுதினமும் நான் உம்மைப் பின்பற்றி வாழ விரும்புறேன். என்னை உம் அருகில் வைத்துக் கொள்ளும். உம்மை நேசிக்கவும் நம்பவும் தடையாக இருக்கிற என் சுய நீதிக்கு நான் இடம் கொடுக்காமல், உமக்கு முதலிடம் கொடுக்க எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573



No comments: