Monday, February 15, 2021

அனுதினமும் அனுகூலமாயிருக்கிற துணை

 வாசிக்க: லேவியராகமம் 1, 2; சங்கீதம் 46; மத்தேயு 23:23-39

வேதவசனம்:சங்கீதம் 46: 1. தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். 2. ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், 3. அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)

கவனித்தல்: தேவனுடைய ஜனங்கள் மத்தியில் ஏன் பயம் என்பது இருக்காது என்பதற்கான காரணத்தை சங்கீதம் 46 கூறுகிறது. இயற்கைப் பேரழிவுகள், ஆபத்துகள் அல்லது பிரச்சனைகள் எதுவும் இருக்காது என வேதாகமம் சொல்லவில்லை. மாறாக, நாம் தடுமாறுகிற அல்லது கஷ்டப்படுகிற அப்படிப்பட்ட கடினமான காலங்களில் நமக்குக் கிடைக்கக் கூடிய அனுகூலமான உதவி பற்றி வேதம் கூறுகிறது. ”தேவனே நம் அடைக்கலம், நம் பெலன்” என்று சங்கீதகாரன் இங்கு நினைவுபடுத்துகிறார். நாம் வாழும் உலகம் உடைந்து தலைகீழாக மாறலாம். ஆயினும், நமக்கு உதவ தேவன் இருக்கிறார். நாம் அவருக்குள் தஞ்சமடைய முடியும், ஏனெனில் அவரே நம் அடைக்கலம். கர்த்தர் நம் பெலனாக இருப்பதால், வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலான அல்லது சோதனையான காலத்தை எதிர் கொள்வதாக நினைக்கும் காலங்களிலும், நாம் உறுதியுடன் இருக்க முடியும். நாம் தேவனை நம்பி, அவர் மீது நம் நம்பிக்கையை வைக்கும் காலமளவும், நாம் எந்தவிதமான பயத்தில் இருந்தும் விடுபட்டவர்களாக இருப்போம். நாம் அவரை எக்காலத்திலும் அழைக்க முடியும். 27/7, எல்லா நேரங்களிலும் அவர் நமக்கு உதவ ஆயத்தமாக இருக்கிறார். நம் சோதனையான நேரங்களில் நாம் பலவீனமாக இருக்கலாம். ஆயினும், நமக்குத் தேவையான பெலனை நாம் தேவனிடத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

பயன்பாடு: எனக்கு உதவக் கூடியவர் என நான் நினைக்கும் மனிதர்கள் எனக்கு உதவ முடியாதபடி அவர்களுக்கு வேலை இருக்கும் என நான் நினைத்து அவர்களை அழைக்கத் தயங்கிய நேரங்கள் உண்டு. சில நேரங்களில், அவர்கள் எனக்கு உதவ ஆயத்தமாக இருந்தாலும் கூட, அவர்கள் சக்திக்கு மிஞ்சினதாக அல்லது அவர்கள் எல்லைக்கு அப்பாற்பட்டதாக என் சூழ்நிலைகள் இருந்ததால் அவர்களால் உதவ முடியாமல் போனதும் உண்டு. இங்கே, சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்கு உதவ தயராக இருக்கிறார். நான் அவரை உதவிக்கு அழைக்கும் நேரங்களில் அவர் எவ்வித பாரபட்சமும் காட்டுவதில்லை. என் உண்மையான பெலனை நான் பெற்றுக்கொள்ள நான் ஒரு நாளின் எந்த நேரத்திலும் அவரிடம் செல்ல முடியும். நான் எந்தளவுக்கு சீக்கிரமாக போகிறேனோ, அந்தளவுக்கு விரைவாக என் உதவியைப் பெற்றுக் கொள்கிறேன். 

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, எக்காலத்திலும் நான் உம் மீது நம்பிக்கை வைக்க என்னை உற்சாகப்படுத்துவதற்காக  உமக்கு நன்றி. நான் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், நீர் எனக்கு உதவ முடியும். என் அன்பின் ஆண்டவரே, இந்த நாளுக்கான சோதனைகளை எதிர்கொள்ள உம் வல்லமையை எனக்குத்  தாரும். நீர் என்னுடன் இருப்பதால், நன் பயப்படமாட்டேன். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்|
+91 9538328573

No comments: