Saturday, February 13, 2021

கடைபிடிக்கவேண்டிய பிரதானமான கற்பனை

 வாசிக்க: யாத்திராகமம் 37, 38; சங்கீதம் 44; மத்தேயு 22:23-46

வேதவசனம்:மத்தேயு 22:34. அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள். 35. அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: 36. போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.

கவனித்தல்: இயேசுவை சிக்க வைப்பதற்காக ஒரு கூட்டு முயற்சி செய்து அதில் தோல்வி கண்ட பரிசேயரும் சதுசேயரும் தங்கள் நம்பிக்கை மற்றும் போதனைகளை நிரூபிப்பதற்காக, தங்கள் காலத்தில் பதிலளிக்கக் கடினமானக் கேள்விகள் என அவர்கள் கருதின கேள்விகளைத் தனித் தனியாக இயேசுவிடம் கேட்க ஆரம்பித்தனர்.சதுசேயர்கள் இயேசுவுக்கு முன் வாயடைத்துப் போனார்கள் என்பதைக் கேள்விப்பட்டதும், சதுசேயர்களை விட நாம் சிறந்தவர்கள் என பரிசேயர்கள் நினைத்திருக்கக் கூடும். ஏனெனில், அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தைத் தீவிரமாகக் கடைபிடித்தவர்கள் மற்றும் நியாயப்பிரமாணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் மிகவும் பெயர்பெற்றவர்களாக நன்கறியப்பட்டவர்களாக இருந்தனர். ஆகவே, அந்தக் காலகட்டத்தில் யூதர்களிடையே மிகவும் பிரபலமானதாக இருந்த ஒரு கேள்வியை அவர்கள் இயேசுவிடம் கேட்டனர். அந்நாட்களில், எது மிக முக்கியமான, பிரதானமான கற்பனை என்பதில் ஜனங்களிடையே பல்வேறு வித்தியாசமான கருத்துக்கள் காணப்பட்டது. அவரவர் தங்கள் பார்வையின் படி, பலிகளைக் குறித்த பிரமாணத்திற்கோ, அல்லது விருத்தசேதனம் பற்றிய பிரமாணத்திற்கோ, அல்லது ஓய்வுநாளைப் பற்றியப் பிரமாணத்திற்கோ என்பன போன்ற பல பிரமாணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். இயேசுவோ, முழு நியாயப்பிரமாணத்தையும் இரண்டே வாக்கியங்களில்  துல்லியமாக சுருக்கிக் கூறினதைப் பார்க்கிறோம். தேவனிடம் அன்பாக இருப்பது எப்பொழுதுமே முதலாவதும் மற்றும் பிரதானதுமான கற்பனை ஆகும்.  இதற்கு அடுத்ததாக, ஒரு நபர் தன்னை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிப்பது இரண்டாவது பெரிய கற்பனை ஆகும். நாம் இந்த வரிசையை மாற்றக் கூடாது. நிபந்தனைகள் அல்லது சட்டங்கள் மூலமாக அல்ல, அன்பு செய்வதன் மூலமாக மட்டுமே நாம் தேவனுடைய கற்பனையை, பிரமாணங்களை நிறைவேற்றவோ அல்லது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தவோ முடியும். தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் நம்மை நேசிப்பதுடன், நாமும் முதலாவது அவரையும் பின்பு மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

பயன்பாடு: என்னிடம் அன்பு இல்லை எனில், என் கல்வி, சமுதாய அந்தஸ்து, வேதாகம மற்றும் இறையியல் அறிவு, என் நீண்ட அனுபவம் போன்றவைகளுக்கு எந்த விதமான மதிப்பும் இராது. நான் முதலாவதாக தேவனை அன்பு செய்ய வேண்டும். மேலும், தேவனுக்கு கொடுத்திருக்கும் இடத்தில் வேறெந்த மனிதனையும் நான் வைக்கக் கூடாது.  நான் தேவனையும், மற்ற மனிதர்களையும் நேசிக்கும்போது, நான் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், மற்றும் முழு மனதோடும் அதைச் செய்ய வேண்டும். 

ஜெபம்: நியாயப் பிரமாணம் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை எனக்குத் தருகிற உம் வார்த்தைகளுக்காக, இயேசுவே உமக்கு நன்றி! நான் முதலாவதாக தேவனைத் தேடவும் நேசிக்கவும், அதன் பின்னர் மற்றவர்களையும் நேசிக்க எனக்கு உதவும். நான் இதை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், மற்றும் முழு மனதோடும் செய்ய உம் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவுவாராக. ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்|
+91 9538328573

No comments: