Saturday, February 27, 2021

இயேசு யார்!

 வாசிக்க: லேவியராகமம் 25-27; சங்கீதம் 58;  மாற்கு 1:21-45

வேதவசனம்: மாற்கு 1:23. அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
24. அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.
25. அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்.
26. உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனை விட்டுப் போய்விட்டது...
32. சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
33. பட்டணத்தார் எல்லாரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
34. பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.

கவனித்தல்: இயேசுவின் குணமாக்கும் வல்லமை மற்றும் பிசாசுகள் மீதான அவருடைய அதிகாரம் குறித்து  மாற்கு 1 ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். இயேசு யார் என்பதைக் குறித்து பேசாதபடிக்கு, அவர் பொல்லாத ஆவிகளையும், பிசாசுகளையும் தடுத்து அதட்டியதை நாம் வாசிக்கிறோம். சில கிறிஸ்தவர்கள் பொல்லாத ஆவிகளைப் பேசுவதற்கு அனுமதிக்கிறார்கள். பொல்லாத ஆவிகளின் வார்த்தைகள் இயேசுவின் பெயரில் இருக்கிற வல்லமையை ஜனங்கள் அறிந்து கொள்ள உதவும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு பொல்லாத ஆவி அல்லது பிசாசு தேவனைப் பற்றியோ அல்லது தேவ ஜனங்களைப் பற்றியோ எதாகிலும் நல்லவிதமாகப் பேசுகிறது எனில், அது நல்ல ஒரு நோக்கத்திற்காக இருக்காது. மாறாக, கேட்பவர்களை தவறாக வழிநடத்துவதே அதன் நோக்கமாக இருக்கும். அந்த அசுத்த ஆவியானது இயேசுவைக் குறித்துச் சொன்னது உண்மைதான். ஆனால் இயேசு தன்னைப் பற்றிய ஒரு பொல்லாத ஆவியின் சாட்சியைக் கேட்க விரும்புவதில்லை. யூதர்கள் இயேசுவின் வருகையின் நோக்கத்தைக் குறித்து அறியாதிருந்தார்கள், ஆனால் அந்த ஆவிகள் இயேசுவின் மனு அவதாரத்தின் நோக்கத்தை நன்கறிந்திருந்தன, மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி மிகவும் பயப்பட்டன.   மேசியாவாகிய இயேசுவின் மூலம் தேவன் தம் ஜனங்களை விடுவிக்க வைத்திருந்த மீட்பின் திட்டத்திற்கு அந்தப் பொல்லாத ஆவிகள் தடையாக இருக்க, பேச இயேசு அனுமதிக்கவில்லை. ஜனங்களின் மீது அந்த பொல்லாத ஆவிகள் எந்த அதிகாரம் செலுத்தவும் இயேசு அனுமதிக்கவில்லை. ஆகவே அவர் அந்த அசுத்த ஆவிகளை பேசுவதற்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் ஜனங்களை விட்டு துரத்தினார். ஆயினும், இயேசுவின் வார்த்தைகள் மற்றும் கிரியைகள் குறித்து ஜனங்கள் ஆச்சரியமடைந்து பேசியபோது, அவர் அவர்களைத் தடுக்கவில்லை.

பயன்பாடு: இயேசுவால் எந்த வியாதியையும், நோயையும் குணமாக்க முடியும். அவர் சிறந்த மருத்துவர்! என் தேவை என்ன என்பதையறிந்து, அதற்கேற்ப அவர் இடைபடுகிறார். மேலும், பொல்லாத ஆவிகள் எதைக் குறித்தும் பேசுவதற்கு நான் ஒருபோதும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது. தம் ஜனங்கள் விடுதலையடையவும், பிசாசுகளிடம் இருந்து விடுபடவும் வேண்டும் என இயேசு விரும்புகிறார் என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும். வியாதிப்பட்டும் பொல்லாத ஆவிகளினால் பாதிக்கப்பட்டும் இருக்கிற ஜனங்களுடைய வாழ்வில் நான் இயேசுவைக் கொண்டு வரும்போது, அவர்கள் விடுதலையைப் பெற்று அனுபவிப்பார்கள். அப்போது, அவர்கள் இயேசு யார் என்பதை அறிந்து கொள்வார்கள். நான் இயேசுவைப் பற்றி பேச வேண்டும். மேலும் தம் ஜனங்களை இரட்சிக்க அவர் நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அதைச் செய்ய வேண்டும்.

ஜெபம்:   இயேசுவே, என் வாழ்வில் அனுதினமும் தேவனோடு வாழும்படி என்னை இரட்சித்ததற்காக உமக்கு நன்றி. நீர் ஜனங்களை குணமாக்கவும், பிசாசுகளின் பிடியில் இருந்து விடுவிக்கவும் வல்லமையுள்ளவராக இருக்கிறீர். இன்றும் கூட நீர் மக்களின் வாழ்க்கையைத் தொட வல்லவராக இருக்கிறீர். ஜனங்கள் விடுதலை வாழ்வின் மகிழ்ச்சியைப் பெற்றனுபவிக்கவும், இயேசு உண்மையில் யார் என்பதை அறிந்து கொள்ளவும், அவர்களை உம்மிடத்தில் கொண்டு வர எனக்கு உம் பலத்தையும் ஞானத்தையும் தாரும். ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: