Monday, March 15, 2021

நீங்கள் தான் அந்த உப்பு!

  வேதவசனம்: மாற்கு 9: 50 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.

கவனித்தல்:  நாம் அனைவரும் அறிந்திருக்கிறபடி,  கெட்டுப்போகாமல் பாதுகாத்தல், சுவைசேர்த்தல், மற்றும் அழகு சாதன பொருட்கள் என பலவிதமான காரியங்களுக்கு உப்பு பயன்படுத்தப்படுகிறது. நமக்கு உப்பு மிகவும் முக்கியமான ஒரு பொருள் ஆகும். எல்லா வீடுகளிலும் சமையலறையில் அல்லது/மற்றும் சாப்பாட்டு மேசையில் உப்பு இருக்கும். உப்புடன் அசுத்தமான பொருட்கள் ஏதேனும் கலந்துவிடின், அதை எளிதில் பிரித்துவிடலாம். அதன் பழைய நிலைக்கு, உப்புத்தன்மைக்கு நாம் கொண்டு வரமுடியும். ஆனால், உப்பானது அதன் உப்புத்தன்மையை இழந்து போகும் எனில், அதனால் என்ன பிரயோஜனம்? உப்பில் உப்புதன்மை இல்லையெனில், ஒரு உணவில் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக நீங்கள் எவ்வளவுதான் உப்பை சேர்த்தாலும் அதினால் எந்த  பலனும், மாற்றமும் உண்டாகாது. இயேசு இங்கே உப்பு மற்றும் உப்புதன்மை பற்றி சொன்ன சூழ்நிலையை நாம் கவனித்துப் பார்ப்போமாக. மேலும், தன் மலைப்பிரசங்கத்தில்,  “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்று இயேசு சொன்னார் (மத்தேயு 5:13). இயேசுவின் சீடராக இருக்கும் ஒருவர் இந்த உலகத்திற்கு உப்பாக இருந்து, அனேகரின் வாழ்க்கையை வளப்படுத்துகிறவராகவும், சுவை சேர்க்கிறவராகவும் இருக்கிறார். ஒரு உண்மையான உப்பு தன் உப்புத்தன்மையை இழந்து போவதில்லை. அது போல இயேசுவின் சீடராக இருப்பவர் இந்த உலகத்திற்கு பயனுள்ளவராக இருப்பதை ஒருபோதும் இழந்து போவதில்லை. உப்பில் கலந்திருக்கிற அசுத்தமான அல்லது வேறு காரியங்கள் அதன் உப்புத்தன்மையை பாதிக்கிறதாக இருக்கும். இயேசுவின் சீடருக்கும் அப்படியே. இங்கே இயேசு தன் சீடர்கள் முன் ஒரு அழைப்பை வைக்கிறார், “உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.” இயேசுவின் சீடரிடம் இருக்கிற உப்புதன்மை அவர் ஒருவரோடொருவர் சமாதானமாக இருக்க உதவுகிறது.

பயன்பாடு: இயேசுவின் ஒரு சீடராக, நான் இந்த உலகத்திற்கு உப்பாக இருக்கிறேன். நான் மனிதர்களின் வாழ்க்கையில் சுவை சேர்ப்பவராகவும், அசுத்தமான காரியங்களினால் அவர்கள் கறைபடாமல் பாதுகாக்கிறவராகவும் இருப்பதுதான் என் இயல்பு. இந்த உலகத்திற்கு உப்பாக இருப்பது என்பது நானாக தெரிந்து கொண்ட ஒரு காரியம் அல்ல. அது தேவனுடைய ஈவு. என் வாழ்க்கையும் நான் அனுபவிக்கிற, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிற சமாதானமும் இந்த உலகத்திற்கு நன்மையளிப்பதாக இருக்கும். இந்த நோக்கத்திற்காகவே இயேசு என்னை அவருடைய சீடராக இருக்க அழைத்திருக்கிறார். 

ஜெபம்:   இயேசுவே, என்னைச் சுற்றிலும் இருக்கிற மனிதர்களின் வாழ்க்கையை வளப்படுத்த நீர் என்னை அழைத்திருக்கிறதற்காக உமக்கு நன்றி. என் இரட்சகரே, உமது மகிமைக்காக எல்லோருடனும் சமாதானமாக இருக்கவும், என்னை சேதப்படுத்தக் கூடிய எவ்வித கறைகளிலும் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: