Wednesday, March 31, 2021

ஆசீர்வாதம் அல்லது சாபம் - உங்கள் விருப்பம்!

வாசிக்க: உபாகமம் 27, 28; சங்கீதம் 90, லூக்கா 1:39-80

வேதவசனம்: உபாகமம் 27:9. பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும்கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.
10. ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.

கவனித்தல்: உபாகமம் 27, 28ம் அதிகாரங்களில் தேவனுக்கும், அவருடைய கற்பனைகளுக்கும் கீழ்ப்படிதலின் அடிப்படையில் இஸ்ரவேலர்கள் மேல் வரும் ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்கள் பற்றிய ஒரு பட்டியலை நாம் காண்கிறோம். இந்த இரண்டு அத்தியாயத்திலும் தேவனுடைய ஆசீர்வாதங்களை விட சாபங்களைப் பற்றிய வசனங்களே மிக அதிகமாக இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். இந்த அத்தியாயங்களைப் படிக்கும்போது,  இங்கு சொல்லப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள் முறையே கீழ்ப்படிதல் அல்லது கீழ்ப்படியாமையின் விளைவாக வருபவையாக இருக்கும் என்பதை புரிந்துகொள்கிறோம். இந்த அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்கள் அனைத்தும் உபாகமம் 27:10 ல் சொல்லப்பட்டிருக்கிற கீழ்ப்படிதலுடன் தொடர்புடையது என்பதை நாம் கண்டறிய முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பே, இஸ்ரவேலர்கள் தேவனுடைய ஜனங்களாகி விட்டனர் என்பது உண்மைதான் என்றாலும்,  “இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்” என்றும், ”இன்று ....அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக” என்றும் வருகிறதை நாம் காண்கிறோம். இந்த நிகழ்வு உடன்படிக்கையின் புதுப்பித்த மற்றும் இஸ்ரவேலர்கள் தேவன் மீது கொண்டிருந்த அர்ப்பணிப்பை திரும்பவும் உறுதிப்படுத்திக் கொண்ட ஒரு நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். இந்த உலகத்தின் இரைச்சலான சூழலில், ஆண்டவர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நாம் கேட்க முடியாமல் போகலாம். என் ஆத்துமாவே, அமைதலாக அமர்ந்திருந்து, ஆண்டவர் இன்று உன்னிடம் என்ன பேசுகிறார் என்பதைக் கவனித்துக் கேள். 
 
பயன்பாடு: கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் மற்றும் அவருடைய கற்பனைகளின் படி வாழ்தல் ஆகியவை எப்பொழுதுமே பரலோக மற்றும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களை கொண்டுவருகிறது. நான் என்ன செய்கிறேன் என்பது தான் என் வாழ்வின் நான் எதைப் பெற்றுக்கொள்வேன் என்பதை தீர்மானிக்கிறது. நான் தேவனுக்குக் கீழ்ப்படிந்தால், நான் என் வாழ்வில் எல்லா ஆசீர்வாதங்களையும் காண்பேன். ஆயினும், நான் தேவனுக்குச் சொந்தமானவன் என்பதே மிகப்பெரிய ஆசீர்வாதம் ஆகும். என் தேவனுடைய ஜனங்களில் ஒருவராக நான் இருக்கிறேன். அனுதினமும் நான் இதை எனக்கு நினைவுபடுத்திக் கொண்டு, இன்று நான் எந்தெந்த பகுதிகளில் கீழ்ப்படிதலுள்ளவராக இருக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்ள நான் அவரை நோக்கிப் பார்க்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளில் ஒருவராகிய நான் அவருக்குக் கீழ்ப்படிந்து, என் வாழ்வில் அனுதினமும் அவருடைய கற்பனைகளைப் பின்பற்றுவேன். இதுவே என் விருப்பம்! 
 
ஜெபம்:  பிதாவாகிய தேவனே, என்னை நினைவுகூர்ந்து, அனுதினமும் உம் அன்பின் உறவை புதுப்பித்துக் கொண்டிருப்பதற்காக நன்றி. என் அனுதின வாழ்வில் அக்கறை உள்ளவராக நீர் இருக்கிறீர். இன்று நான் உமக்குக் கீழ்ப்படியவும், உம் கற்பனைகளைப் பின்பற்றவும் உதவி செய்யும். ஆமென். 


- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: