Thursday, April 1, 2021

கர்த்தர் என் அடைக்கலம்

வாசிக்க: உபாகமம் 29, 30; சங்கீதம் 91, லூக்கா 2:1-24

வேதவசனம்: சங்கீதம் 91: 9. எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய் (தங்கும் இடமாக ஆக்கிக் கொண்டாய்). 
10. ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

கவனித்தல்: தேவனை நம்புகிற, தேவனுடைய பாதுகாப்பைத் தேடுகிற ஒரு விசுவாசியால் அதிகம் பயன்படுத்தப்படும் சங்கீதங்களில் ஒன்றாக சங்கீதம் 91 இருக்கின்றது. தேவன் இருக்கின்ற இடம் ஒரு பாதுகாப்பான புகலிடம் ஆகும். ஆயினும், ஒருவர் வெளிப்படையாக தேவன் மேல் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும்போது, அவர் தேவனுடைய பாதுகாப்பை பெற்றனுபவிக்க ஆரம்பிக்கிறார். தேவனைத் தங்கள் புகலிடமாக்கிக் கொண்டு வாழ்பவர்கள் எதிரிகளின் மற்றும் (கொள்ளை)நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். அது பகலாயிருந்தாலும் சரி, இரவு நேரமாக இருந்தாலும் சரி, தேவனால் பாதுகாக்கப்படுகிற ஒருவர் துன்மார்க்கரைப் போல எதிரிகளாலும், நோய்களாலும் பாதிக்கப்பட மாட்டார். தேவனே நீரே எங்கள் புகலிடம், தஞ்சம் என்று நாம் சொல்லும்போது நாம் ஆன்மீக மற்றும் சரீர பாதுகாப்பு என இரண்டையுமே பெற்றனுபவிக்கிறோம். நாம் எந்தளவுக்கு பாதுகாக்கப்பட்டவர்களாக இருக்கிறோம் பாருங்கள்! தேவனுடைய பாதுகாப்பைத் தேடுதல், மற்றும் தேவன் நமக்குத் தரும் பாதுகாப்பு, இவை இரண்டுமே அன்பின் செயல்கள் ஆகும்.
 
பயன்பாடு: நான் தேவனை நம்புகிறேன் என்று சொல்லும்போது, அது என் பலவீனங்களின் வெளிப்பாடோ அல்லது திறமையின்மையின் வெளிப்பாடோ அல்ல. மாறாக, நான் தேவன் மேல் கொண்டிருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு செயல் ஆகும். உன்னதமான தேவன் தான் தங்கும் இடத்தை எனக்கு புகலிடமாகக் கொடுக்க தயாராக இருக்கும்போது, அதை விட சிறந்த இடத்தை வாழ்வதற்கு என்னால் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில், அவர் மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்ட மிகச் சிறந்த பாதுகாப்பை எனக்குத் தருகிறார். சில நேரங்களில், அவர் என்னை எவ்விதம் பாதுகாக்கிறார் என்பதை என்னால் விளக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், அவர் தரும் சமாதானத்துடன் நான் அவருடைய பாதுகாப்பை அனுதினமும் அனுபவிக்க முடியும்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, நீர் என் புகலிடமாகவும், என்னைப் பாதுகாக்கும் கோட்டையாகவும் இருப்பதற்காக நன்றி. நான் உம் பாதுகாப்பின் கீழ் இருக்கும்போது எதுவும் என்னைச் சேதப்படுத்த முடியாது. நான் ஏதேனும் கடினமான தருணங்களைக் கடந்து செல்ல வேண்டியதாயிருந்தாலும், நான் வெற்றி பெற்று அதிலிருந்து வெளிவர நீர் உதவி செய்வீர். ஏனெனில், நீர் என்னை நேசிக்கிறீர். ஒவ்வொரு நாளும் உம் மீது கொண்ட அன்பிலும், நம்பிக்கையிலும் பெருக எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: