Tuesday, April 6, 2021

தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும்?

 வாசிக்க: யோசுவா 5, 6; சங்கீதம் 96, லூக்கா 4:31-44

வேதவசனம்: சங்கீதம் 96: 9. பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.

கவனித்தல்: சங்கீதம் 96 ல் உள்ள வசனங்கள் 1 நாளாகமம் 16:23-33க்கு ஒத்திருப்பதால், இதை எழுதியவர் தாவீது என சிலர் கூறுகின்றனர். இந்த சங்கீதமானது, இதைக் கேட்பவர்களும் வாசிப்பவர்களும் தேவனை துதித்துப் பாடவேண்டும் என முதலாவதாக உற்சாகப்படுத்துகிறது. இரண்டாவதாக, தேவனை ஆராதித்து துதிப்பதற்கான காரணங்களை நாம் இச்சங்கீதத்தில் பார்க்கிறோம். மூன்றாவதாக, தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு தனித்துவமான காட்சியைப் பற்றி நாம் வாசிக்கிறோம். இது யெகோவா தேவனை ஆராதிப்பதற்கும் விக்கிரக ஆராதனைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. எபிரேய மொழியில்,  “பரிசுத்த அலங்காரத்துடனே” என்ற சொற்றொடர் ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்களைக் குறிப்பிடக் கூடும். இது தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிச் சொல்கிறதா அல்லது தேவனை ஆராதிக்கிறவரின் பரிசுத்த உடை பற்றி சொல்கிறதா என்று சிலர் யோசிக்கக் கூடும். தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. அவர் பரிசுத்தமுள்ள தேவன். இது மற்ற எல்லா தேவர்களை விடவும் தேவனை தனித்துவமிக்கவராக காட்டுகிறது. அவருடைய தனித்துவத்தை இன்னும் அதிக சிறப்பானதாகக் காட்டுவது என்னவெனில், நாம் அவரை பரிசுத்த அலங்காரத்துடனே”  ஆராதித்து தொழுது கொள்ள வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். பரிசுத்த தேவன் பரிசுத்தமான ஒரு ஆராதனையை எதிர்பார்க்கிறார்! நாம் தேவனுக்கு முன்பாக எப்படி வருகிறோம் என்பதை அவர் முக்கியமானதாகப் பார்க்கிறார். அப்படியென்றால், நாம் பரிசுத்தமாக இல்லை எனில், தேவனை ஆராதிக்க முடியாது என்பதை இது குறிக்கிறதா? இல்லை. ”நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்” என்று திரும்பத் திரும்ப தேவன் சொல்கிறார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். நாம் செய்யவேண்டியதெல்லாம் என்னெவெனில், அவர் முன்பாக நம் உண்மையான நிலையை ஒப்புக்கொண்டு, உண்மையான மனந்திரும்புதலுடன் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்போது நாம் தேவனை ஆராதிக்கும்படியாக அவர் நம்மைச் சுத்திகரிக்கிறார். தேவனை ஆராதிப்பதற்கு நாம் எப்படி வருகிறோம்?
 
பயன்பாடு: சர்வ வல்ல தேவனை துதித்துப் பாட உதவும் அனேக கிறிஸ்தவப் பாடல்களை நான் கேட்கிறேன். துதிப்பதும், பாடுவதும் தேவனை ஆராதிப்பதை ஆரம்பிக்க மிகவும் உதவிகரமானவை.  ஆயினும், பரிசுத்த அலங்காரத்துடனே” செய்யப்படும் ஆராதனையில் தேவன் பிரியமாயிருக்கிறார். ஒரு பரிசுத்த ஆராதனையைப் பார்க்கிலும் அதிகமாக  அலங்காரம் அல்லது உடைகள் என வேறு எதுவும் தேவனைப் பிரியப்படுத்துவது இல்லை.  நான் பரிசுத்தமானவர் அல்ல, ஆகவே நான் தேவனை ஆராதிக்க மாட்டேன் என நான் சொல்லக் கூடாது. நான் தேவ பக்தியுடன் அவர் முன் வரும்போது, அவ்ர் என் பயங்களை நீக்கி, அவர் முன்பாக பரிசுத்தமுள்ளவனாகும்படி என்னை மாற்றுகிறார். அவரால் இதைச் செய்ய முடியும்! 
 
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் இஸ்ரவேலின் பரிசுத்தர்! நானும் உம்மைப் போல பரிசுத்தமுள்ளவனாக இருக்க வேண்டும் என நீர் விரும்புகிறீர். பரிசுத்த தேவனே, உம் பரிசுத்தத்தில் பங்குபெறும்படிக்கு என்னை சிட்சித்தருளும். நான் உம் முன்பாக வரும்போது மட்டுமல்ல,  எப்பொழுதும் பரிசுத்தமான ஒரு வாழ்க்கையை வாழ எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: