Saturday, April 10, 2021

தேவனை துதிக்க ஒரு அழைப்பு

வாசிக்க: யோசுவா 13, 14; சங்கீதம் 100 ; லூக்கா 6:20-49

வேதவசனம்: சங்கீதம் 100: 4. அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
5. கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

கவனித்தல்: பூமியில் வசிக்கும் அனைவரும் வந்து தேவனை துதிக்க வேண்டும் என சங்கீதம் 100 அழைப்பு விடுக்கிறது. நாம் ஏன் தேவனைத் துதிக்கவேண்டும் என சிலர் நினைக்கக் கூடும். இந்த சிறிய சங்கீதமானது, தேவனைத் துதிப்பதற்கான காரணங்களில் சிலவற்றை சுருக்கமாக குறிப்பிடுகிறது. முதலாவதாக, கர்த்தரே தேவன், அவரைப் போல வேறு எவரும் இல்லை. நாம் அவரை தேவன் என்று அறிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, அவரே நம்மை உருவாக்கின சிருஷ்டிகர். “நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம் (வ.3). தேவனை துதிக்க இது போதுமானதல்லவா! இந்த சங்கீதமானது கர்த்தரைத் துதிக்க இன்னும் சில காரணங்களையும் பட்டியலிடுகிறது. கர்த்தர் நல்ல தேவனாக இருக்கிறார். அவருடைய கிருபை என்றென்றைக்கும் நிலைத்து நிற்கிற அன்பின் கிருபையாக இருக்கிறது. அவருடைய உண்மையைக் கவனித்துப் பாருங்கள்! அது நம்முடன் முடிந்து போவதில்லை. அவருடைய உண்மை தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. தேவன் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து உண்மையுள்ளவராக இருப்பதைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் நாம் வாசிக்கிறோம். தேவனைத் துதிக்க நமக்கு இன்னும் என்ன காரணம் தேவை!  நன்றியோடும், துதிப் பாடல்களுடனும் நாம் (இந்த நாளில்) அவருடைய வாசல்களில் பிரவேசிப்போமா? 

பயன்பாடு: எல்லாம் சுமூகமாகப் போகும்போது தேவனைத் துதிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இருப்பதில்லை. ஆயினும், நான் தோல்விகள், குழப்பங்கள், ஏமாற்றங்கள் போன்றவற்றினூடாகச் செல்லும்போது, மற்றும் நான் விரும்புகிறதைப் பெறாமலிருக்கும்போது தேவனைத் துதிக்க எந்த காரணங்களும் இல்லையோ என்பது போல நான் நினைக்கிறேன். நான் என்னுடைய சூழ்நிலையைப் பார்க்கும்போது மட்டுமே இப்படி நடக்கிறது. அப்படிப்பட்ட தருணங்களில், நான் என் சிருஷ்டிகராகிய தேவனை நோக்கிப் பார்த்து, அவர் என்னை கருத்தாய் விசாரிக்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நான் அவருடையவன்(ள்). அவர் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் அன்பு நிறைந்த நல்ல தேவன். கர்த்தர் எப்பொழுதும் நல்லவர். என் தற்போதைய சூழ்நிலைக்கான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால், தேவனைத் துதிப்பதற்கு அது தடையாக இருக்கக் கூடாது. என்னுடைய தற்போதைய சூழ்நிலையானது நான் தேவனைத் துதிப்பதற்கு உற்சாகப்படுத்துகிறதாக இல்லை எனில், என் வாழ்வில் கடந்த நூறு நாட்களில் தேவன் எந்தளவுக்கு உண்மையுள்ளவராக இருந்திருக்கிறார் என்பதை நான் நினைத்துப் பார்க்கலாம். இந்த காலகட்டத்தில், அவர் எனக்கு எவ்வளவு ஆச்சரியமான காரியங்களைச் செய்திருக்கிறார்! நான் தேவனைத் துதிப்பதை எது தான் தடுக்க முடியும்! 

ஜெபம்: நல்ல தேவனே, நீர் என் மீது காட்டுகிற கிருபைக்காக நன்றி. நித்தியமான உம் உண்மை குறித்த வாக்குத்தத்தத்திற்காக நன்றி. கர்த்தராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் நான் உம்மைத் துதிக்கிறேன். உம்மைத் துதிக்கும் என் இருதயத்தை எந்த வார்த்தைகளும் வெளிக்காட்ட முடியாது! என் இருதயத்தில் நன்றியுடனும் துதியுடனும் உம் சமூகத்தில் பிரவேசிக்க இன்று எனக்கு உதவும். அல்லேலூயா, தேவனே உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: