Friday, April 16, 2021

எத்தனை தடவை, ஆண்டவரே!

வாசிக்க:  நியாயாதிபதிகள் 1,2; சங்கீதம் 106;  லூக்கா 9: 37-62

வேதவசனம்: சங்கீதம் 106: 43. அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.
44. அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி,
45. அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு,
46. அவர்களைச் சிறைபிடித்த யாவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.

கவனித்தல்: இஸ்ரவேலர்களின் வரலாற்றில், நம் கவனத்தை ஈர்க்கும் ஒரு விஷயம் என்னவெனில், தேவனுடைய மகத்தான செயல்களைக் கண்டபின்னும் அவர்கள் தொடர்ந்து திரும்பத் திரும்ப அவருக்குக் கீழ்ப்படியாமல் கலகம் செய்வது ஆகும். ஆயினும், தங்கள் கஷ்டத்தில் அவர்கள் தேவனை நோக்கிக் கூப்பிட்ட போது, தன் வாக்குத்தத்த உடன்படிக்கையை நினைத்து தேவன் அவர்களைக் காப்பாற்றினார். எகிப்தில் இருந்து கானானை நோக்கிய விடுதலைப் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் செய்த கீழ்ப்படியாமையின் செயல்களைப் பற்றி நாம் வாசிக்கும்போது, எகிப்தின் பார்வோனுக்கும் அவனுடைய மக்களுக்கும் எதிராக தேவன்  செய்த அற்புதச் செயல்களை அவர்கள் எப்படி அவ்வ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடிந்தது என்று நாம் ஆச்சரியப்படக் கூடும். நாம் இங்கு வாசிப்பது போல, அவர்கள் தேவனுக்கு விரோதமாக கலகம் பண்ணியபோது, ”தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.” தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது ஒரு பாவம் ஆகும். நாம் உதவி வேண்டி தேவனை நோக்கிக் கூப்பிடும்போது அவர் நம்மை காப்பாற்றுகிறார். ஆனால் பாவமானது நம் வாழ்வில் ஊடுருவிச் செல்ல நாம் அனுமதிக்கும்போது, அது நமக்கு ஒரு ஆபத்தை அல்லது அழிவைக் கொண்டு வருகிறது. ஆயினும், நாம் மனம் திரும்பி, தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருந்து நம் மீது வரவழைத்த விரும்பத்தகாத காரியங்களில் இருந்து இரட்சிக்கும்படி அவருடைய உதவியை நாம் கேட்கும்போது, அவர் உடன்படிக்கையை நினைத்து நம் ஜெபங்களுக்குப் பதில் தருகிறார். அவருடைய மிகுந்த கிருபையானது ஆபத்துகளில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது. கர்த்தர் நல்லவர். ஆகையால் அவருடைய அன்பு என்றென்றைக்கும் இருக்கிறது. இஸ்ரவேலர்கள் எத்தனை தடவை தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தார்கள்? தேவன் அவர்களை எத்தனை முறை காப்பாற்றினார்! உண்மையிலேயே, அது அனேகந்தரம்! 

பயன்பாடு: இஸ்ரவேலரின் தொடர்ச்சியான கீழ்ப்படியாமையைப் பற்றி நான் வாசிக்கும்போது, அவர்கள் தேவனுக்கு உண்மையற்றவர்கள், நன்றியறிதல் இல்லாதவர்கள் என்று நான் எளிதில் அவர்களை நியாயந்தீர்க்கக் கூடும். ஆயினும், தேவனுக்குச் சேவை செய்வதில் என்னிடம் உள்ள குறைகள் மற்றும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றைப் பற்றி நான் நினைக்கும்போது,  தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுப்பதில் இஸ்ரவேலர்களை விட மோசமான நிலையில் நான் இருப்பதைக் காணக் கூடும். என் கீழ்ப்படியாமையினால் நான் பாவத்தில் சிக்கிக் கொள்ளும்போது, நான் மனம் திரும்பி தேவன் அருளும் இரட்சிப்புக்காக அவரை நோக்கிக் கூப்பிட வேண்டும். நான் எவ்வளவு சீக்கிரமாக தேவனிடம் வருகிறேனோ, அவ்வளவு சீக்கிரமாக என் வாழ்வில் தேவனுடைய விடுதலையை என் வாழ்வில் நான் காண முடியும். அவருடைய் அன்பு மகா பெரிது. “ அவருடைய அன்புக்கு எல்லை எதுவும் இல்லை, அவருடைய கிருபை அளவில்லாதது.” அவருடைய அன்பு உடன்படிக்கையின் அன்பு ஆகும். நான் தேவனுடைய உடன்படிக்கையை நினைத்து, அவருக்குக் கீழ்ப்படியாமல் இருக்க என்னை நடத்தக் கூடிய எதையும் என் வாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.  அவ்ர் எத்தனை முறை என்னைக் காப்பாற்றி இருக்கிறார்? அவரை எத்தனை முறை நான் துதிப்பேன்! அனேகந்ததரம். 

ஜெபம்: பிதாவாகிய தேவனே, நீர் என் மீது காட்டும் உம் மாபெரும் கிருபைக்காக நன்றி. என் வாழ்க்கையில் பாவங்கள் ஏதேனும் இருந்தால், அதை உணர்ந்து கொள்ள உதவும். காரிருளில் என்னை மறைத்துக் கொள்வதை நான் செய்யாமல், நான் மனந்திரும்பி உம்மிடம் வர எனக்கு உதவும். என் ஜெபங்களுக்குப் பதில் தருவதற்காக நன்றி. என் வாழ்வில் அனேகந்தரம் நீர் செய்த வல்லமையான செயல்கள் எல்லாவற்றிற்காகவும் நான் உம்மைத் துதிக்கிறேன். ” இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்.” ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573


No comments: