Thursday, April 8, 2021

இயேசுவின் புதிய வழி

வாசிக்க: யோசுவா 9, 10; சங்கீதம் 98, லூக்கா 5: 17-39

வேதவசனம்: லூக்கா 5: 38. புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
39. அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.


கவனித்தல்: லூக்கா 5: 38,30 வசனங்கள் சொல்லப்பட்ட சூழ்நிலையை நாம் பார்க்கும்போது, இயேசு மற்றும் அவருடைய சீடர்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட சந்தேகக் கேள்விகளை நாம் காண்கிறோம். அக்கால யூத நடைமுறைகளுக்கு எதிராக, இயேசு பாவிகளுடனும் வரிவசூலிக்கும் ஆயக்காரர்களுடனும் உணவருந்தினார். இயேசுவை பாவிகளின் சினேகிதர் என்று பரிசேயர்கள் அழைத்தனர். யோவான் மற்றும் பரிசேயர்களின் சீடர்களுடன் ஒப்பிடுகையில், இயேசுவின் சீடர்களுடைய உபவாசம் மற்றும் ஜெபம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர். யோவான் எளிய உணவுடனான ஒரு துறவற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் (மத்.3: 4). மனம் திரும்புதலின் ஒரு செயலாக, உபவாசத்தைப் பற்றி யோவானுடைய சீடர்கள் அவனிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கக் கூடும். மேலும், யோவான் அந்த சமயத்தில் சிறைச்சாலையில் இருந்தபடியால், அவருடைய விடுதலைக்காக அவர்கள் உபவாசம் செய்து ஜெபித்திருக்கக் கூடும். பரிசேயர்கள் செய்யத்தக்கவை மற்றும் செய்யத்தகாதவைகள் என பல காரியங்களை உள்ளடக்கிய ஒரு பட்டியலுடன் ஒரு கடுமையான மதச் சடங்காச்சாரத்தைப் பின்பற்றி வந்தனர். அதில் உபவாசமும் அடங்கும் (லூக்கா 18: 12). வேதாகமத்தின் முதல் ஐந்து ஆகமங்களில், அனேக பண்டிகைகளைக் குறித்து மோசேயின் நியாயப்பிரமாணத்தில் நாம் வாசிக்கிறோம். பாவ நிவாரணத்துக்காக மட்டுமே தவிர, மற்றபடி அவர்கள் உபவாசம் இருகக் வேண்டும் என்ற கட்டளை கிடையாது (லேவி.16: 29).

இங்கே, இயேசு உபவாசத்திற்கு எதிராக் இயேசு எதேனும் சொன்னாரா? நிச்சயமாக இல்லை. சொல்லப் போனால், அவரே தனித்திருந்து உபவாசமிருந்தார் (மத்.4) என்றும், தன் மலைப்பிரசங்கத்தில் உபவாசம் இருப்பதனால் உண்டாகும் ஆன்மீக நன்மைகளையும் பற்றி பேசினார். இயேசுவின் ஊழியத்திற்கும் மற்றவர்களுடைய ஊழியத்திற்குமிடையே உள்ள முக்கியமான வேறுபாடு என்னவெனில், இயேசு வாழ்வதற்கான ஒரு புதிய வழியைப் பற்றி பிரசங்கித்தார். அது வருகிற அனைவரையும் அரவணைத்து, இயேசுவை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் யாராக இருந்தாலும், நம்பிக்கையைக் கொடுக்கிறதாகவும் இருக்கிறது. இயேசு தன் சீடர்களைத் தெரிந்து கொண்ட விதம், பாவிகள் மற்றும் ஆயக்காரர்களையும் நேசித்தது, மற்றும் அவருடைய போதனை அனைத்தும் முற்றிலும் அக்கால வழக்கத்தில் இருந்து மாறுபட்டதாக இருந்தது. பரிசேயர்களும், யோவானின் சீடர்களும் இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வில்லை. ஆகவே இயேசு தன் ஊழியம் மற்றும் பிரசங்கத்தின் புதிய தன்மையை ஒரு இரட்டை உவமையின் மூலம் அவர்களுக்கு விளக்குகிறார். இயேசுவின் நற்செய்தியானது நம் வாழ்க்கைக்கான ஒரு புதிய தரிசனத்தைத் தருகிறது. அதை நம் பழைய பழக்க வழக்கங்களுடன் கலக்க முயற்சிக்கக் கூடாது. தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்த பரிசேயர்களைப் போல் அல்லாமல், நாம் இயேசுவின் போதனையை ஏற்றுக் கொள்ளவும், அதன் படி வாழவும் திறந்த மனதுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
 
பயன்பாடு: என் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய பார்வை உடையவனாக நான் இருக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார். நான் மற்றவர்களைப் பார்க்கும் விதத்தை அவர் மாற்ற விரும்புகிறார். நான் மற்றவகளை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, கிறிஸ்துவின் அன்பை அனைவரிடமும் நான் காண்பிக்க வேண்டும். சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் அருகில் செல்ல நான் தயங்கக் கூடாது. அவர்களுக்கும் தேவனுடைய அன்பும், நற்செய்தியும் தேவை. உலகப் பழக்க வழக்கங்களை அல்லை, இயேசுவையும் அவருடைய அடிச்சுவடுகளையும் பின்பற்ற ஆயத்தமுள்ளவனாக நான் இருக்க வேண்டும். 
 
ஜெபம்: இயேசுவே, நீர் பாவத்தை வெறுத்து, ஒரு பரிசுத்தமான வாழ்க்கையை இவ்வுலகில் வாழ்ந்த போதிலும் கூட, நீர் பாவிகளின் சிநேகிதராக இருந்து, அவர்களும் தேவனிடம்  வர வாய்ப்பு கொடுத்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றினீர். அனேக காரியங்களில் நீர் என்னை மாற்றியிருக்கிறீர். ஆயினும், தேவனுடைய பிள்ளையாகிய நான் உம்மைப் போல மாற வேண்டும். உம்மைப் போல வாழவும், பேசவும் எனக்கு உதவும். அனுதினமும் உம்மைப் பின்பற்றுகிற புதிய வாழ்க்கையை வாழ எனக்கு உதவும்.ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: