Wednesday, April 21, 2021

ஞானத்தின் இரகசியம்

வாசிக்க:  நியாயாதிபதிகள் 11,12; சங்கீதம் 111; லூக்கா 12: 1-34

வேதவசனம்: சங்கீதம் 111: 10. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

கவனித்தல்: இரண்டுவிதமான பயங்களைப் பற்றி பரிசுத்த வேதாகமம்  சொல்கிறது: தேவனுக்குப் பயப்படுதல், மனிதருக்குப் பயப்படுதல். கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது ஞானத்தின் ஆரம்பத்தைக் குறிப்பதாக இருக்கிறது. ஆனால், மனிதரைப் பற்றிய பயமோ ஒரு கண்ணியாக இருக்கிறது (நீதி.29:25). வாழ்க்கையின் தேவைகளுக்கேற்ற விதத்தில் ஒருவர் தன் அறிவை சரியான முறையில் பயன்படுத்த ஞானமானது உதவுகிறபடியால், ஜனங்கள் ஞானத்தைப் பெற ஆசைப்படுகிறார்கள். ஞானத்தைப் பெறுவதற்காக, அவர்கள் எந்த சாகசத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஞானம் தொடர்பாக ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டிருக்கின்றன. ஆனாலும், தங்கள் கல்வி, அனுபவம் மூலமாக ஞானத்தைப் பெற விரும்புகிற அனைவரும் அதைப் பெறுவதில்லை.

இங்கே ஞானத்தைப் பெறுவதற்கு நூறு சதவீத வெற்றிவீதம் கொண்ட மிக எளிமையான வழிகளில் ஒன்றைப் பற்றி, அதாவது “கர்த்தருக்குப் பயப்படுதல்” பற்றி  சங்கீதக்காரன் சொல்கிறார். கர்த்தருக்குப் பயப்படுதல் என்றால் நாம் எப்போதும் தேவனுக்கு பயந்துகொண்டே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. மாறாக, சங்கீதம் 19:7-9ல் வாசிப்பது போல, கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது, “கர்த்தருடைய வேதம்...கர்த்தருடைய சாட்சி...கர்த்தருடைய நியாயங்கள்...கர்த்தருடைய கற்பனை” ஆகியவற்றைக் குறிப்பதாகவும் இருக்கிறது. நாம் கர்த்தருக்குப் பயப்படுதல் உள்ளவர்களாக இருக்கும்போது,  நாம் நல்ல புத்தி உடையவர்களாகவும் இருப்போம். கர்த்தருக்குப் பயப்படுதல் பற்றி பல வித்தியாசமான காரியங்களை, பெரும்பாலும் எதிர்மறையான காரியங்களை ஜனங்கள் சொல்லக் கூடும். கர்த்தருக்குப் பயப்படுதல் நமக்கு ஞானத்தை தருவது மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் பெற அது நமக்கு உதவுகிறது. இந்த ஞானத்தைப் பற்றிய ஆச்சரியமான உண்மை என்னவெனில், வயது வித்தியாசமின்றி எவரும் கர்த்தரிடம் இருந்து இதைப் பெற முடியும். 

பயன்பாடு: ”நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்று எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் இயேசு சொன்னார் (லூக்கா 12:5). தேவனைத் தவிர, மனிதர்கள் எவருக்கும்  நான் பயப்படத் தேவை இல்லை. ஏனெனில், மனிதர்களுக்குப் பயப்படுதல் என்பது தாறுமாறுகளையும் குழப்பங்களையும் உண்டாக்குகிறதாக இருக்கிறது. அது பயங்களுடன் முடிந்துவிடுகிற ஒரு காரியம் அல்ல. மனிதருக்குப் பயப்படுதல் என்பது அனேக பிரச்சனைகளையும் சிக்கல்களையும் என் வாழ்வில் வரவழைக்கிற/உண்டாக்குகிறதாக இருக்கக் கூடும். மாறாக, நான் கர்த்தருக்குப் பயப்படுதல் உள்ளவனாக இருக்கும்போது, நான் ஞானத்தைப் பெறுகிறேன். அது எனக்கு எந்தச் சூழ்நிலையையும் சமாளிப்பதற்கான நல்ல புத்தியைத் தருகிறது. கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது என் பலவீனங்களையோ அல்லது வாழ்க்கையின் கவலைகளைக் குறிக்கிற ஒன்று அல்ல. மாறாக, என் வாழ்க்கைக்கு தேவையான ஞானத்த்தைப் பெற நான் எடுத்த என் விருப்பத் தேர்வை அது காண்பிக்கிறது. ஆகவே, என் இருதயத்தில் கர்த்தருக்குப் பயப்படுதல் உள்ளவனாக இருக்கிறேன். ஆண்டவர் எனக்கென வைத்திருக்கிற அனைத்து ஆசீர்வாதங்களையும் நான் பெற்று அனுபவிக்க என்னை வழிநடத்துவதாக இது இருக்கிறது.

ஜெபம்: பிதாவாகிய தேவனே, என் வாழ்க்கையில் தேவபக்திக்குரிய ஞானத்தைப் பெறுவதை மிகவும் எளிமையாக்கினதற்காக உமக்கு நன்றி. நீர் எனக்கு ஞானத்தைத் தருகிறீர். நீரே அந்த ஞானமாக இருக்கிறீர். ஆண்டவரே, உமக்குப் பயப்படுகிறவர்களுக்கு நீர் தருகிற நல்ல புத்திக்காக உமக்கு நன்றி. எனக்கு நீர் தருகிற ஞானத்தின் வெளிச்சத்தில் உண்மையுள்ளவனாக வாழ எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: