Tuesday, April 20, 2021

உட்புறத்தையும் சுத்தமாக்குங்கள்

வாசிக்க:  நியாயாதிபதிகள் 9,10; சங்கீதம் 110; லூக்கா 11: 29-54

வேதவசனம்: லூக்கா 11:39. கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.
40. மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?

கவனித்தல்: இயேசு ஒரு பரிசேயனின் வீட்டில் இருந்த போது, அந்த பரிசேயன் அவருக்கு உணவு பரிமாறுவதற்கு முன்பு, பரிசேயர்களின் நடைமுறை குறித்த ஒரு முக்கியமான பாடத்தை அவனுக்குக் கற்றுக் கொடுக்க இயேசு விரும்பினார். இயேசு வேண்டுமென்றே தன் கைகளைக் கழுவாமல் இருந்தார் என நினைக்கத் தோன்றுகிறது. இயேசு தன் கைகளைக் கழுவாமல் உணவருந்த இருந்ததை ஆச்சரியத்துடன் அந்த பரிசேயர் பார்த்துக் கொண்டிருந்த போது, உட்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை இயேசு அவனுக்குச் சொன்னார்.  வெளிப்புறத்தில் மட்டும் கழுவப்பட்ட ஒரு கோப்பையானது பார்ப்பதற்கு நன்றாக இருக்கக் கூடும். ஆனால் அது உள்ளேயும் வெளியேயும் நன்றாகக் கழுவப்படவிலை என்றால், அது எவ்வளவு அழகானதாக இருந்தாலும், விலைமதிப்புள்ளதாக இருந்தாலும் பயன்படுத்தத் தகுதியற்றதாக இருக்கும். பொதுவாக, ஜனங்கள் வெளிப்புறத்தை மட்டுமே பார்ப்பார்கள். ஆகவே, உலகமெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் வெளிப்புறத் தூய்மைக்கு முக்கியத்துவம் தருகின்றன. ஆனால் இயேசுவோ, நம் புறம்பான சுத்தத்தைப் பார்க்கிலும், தேவன் நம் இருதயத்தைத் தான் முதலாவது பார்க்கிறார் என்று தெளிவுபடுத்தினார்.

பயன்பாடு: சுத்தமாக இருப்பது என்பது கடவுளுக்கு அருகில் இருப்பதற்குச் சமமானது என்று ஜனங்கள் சொல்கிறார்கள். ஆயினும், அவர்கள் பெரும்பாலும் வெளிப்புறத்தூய்மையைப் பற்றி பேசுகிறார்கள், அகத்தூய்மை பற்றி பேச தயங்குகிறார்கள். ஆனால், இயேசுவோ எப்பொழுதும் இருதயத்தில் சுத்தமாக இருப்பது பற்றி பேசுகிறார். இயேசுவைப் பொறுத்தவரையில், இருதயத்தில் இருந்து புறப்பட்டு வருபவைகள்தான் ஒரு மனிதனை அசுத்தப் படுத்தி, தீட்டுப்படுத்தும் (மாற்கு 7:20). ஆகவே, நான் வெளிப்புற சுத்தத்தைப் பார்க்கிலும், என் இருதயத்தைச் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஜெபம்: இயேசுவே, சுத்தம் பற்றிய இந்த முக்கியமான பாடத்திற்காக நன்றி. எல்லா பாவத்தில் இருந்தும் என்னைச் சுத்திகரிக்கும் உம் இரத்தத்திற்காக, ஆண்டவரே உமக்கு நன்றி. உம் வெளிச்சத்திலும் சத்தியத்திலும் நடக்க எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: