Monday, April 12, 2021

துயரப்படுகிறவனின் ஜெபம்

வாசிக்க: யோசுவா 17, 18; சங்கீதம் 102;  லூக்கா 7:36-50

வேதவசனம்: சங்கீதம் 102: 16. திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.

கவனித்தல்: 102ஆம் சங்கீதம் “ துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி, கர்த்தரிடத்தில் தன் வியாகுலத்தைத் தெரிவித்துச் செய்யும் விண்ணப்பம்” ஆகும். சங்கீதக்காரனின் வருந்தத்தக்க சூழ்நிலையின் வேதனை மற்றும் வருத்தம் பற்றி வ.3-11ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மரணத்தின் விளிம்பில்  இருப்பதாக சங்கீதக்காரன் நினைத்த போது, அவர் தேவனை நினைத்து, அவரில் உள்ள தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். மிகப் பெரிய தேவையில் இருக்கிற ஒருவர் செய்யும் ஜெபத்தை நித்திய தேவன் ஒருபோதும் நிராகரிப்பதில்லை. துன்பத்தில் இருக்கிற ஒருவர் செய்யும் ஜெபத்தை தேவன் கேட்டு, பதில் தருகிறார்.  துக்ககரமான நிலையில் இருந்த காலத்தில் சங்கீதக்காரன் தேவனைப் பார்த்தபோது, தேவன் என்றென்றைக்கும் இருக்கிறவர் என்பதைப் புரிந்து கொண்டார். வானமும் பூமியும் மாறினாலும், தேவன் மாறாதவராக நிலைத்திருக்கிறார். சங்கீதக்காரனைப் போல, துன்பத்தின் பாதையினூடாக நாம் செல்லும்போது, என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற, மாறாத நித்திய தேவனை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் நம் ஜெபங்களுக்குப் பதில்கொடுத்து, நம் துக்கங்களையும் துன்பங்களையும் மாற்றுவார். மாறாத தேவனை நாம் பார்க்கும்போது, நம்முடைய நிகழ்கால (துயர) சூழ்நிலையானது நிரந்தரமல்ல என்று புரிந்து கொள்வோம். ஏனெனில், ஆண்டவராகிய தேவன் நம் விண்ணப்பங்களை அலட்சியம் பண்ண மாட்டார். 
 
பயன்பாடு:  நிச்சயமற்ற தன்மை, மன அழுத்தம், தனிமை, சோகம், பயங்கள், மற்றும் நிந்தனைகளை எதிர்கொள்ள நேரிடும்போது, என் சூழ்நிலைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக நான் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட கடினமான தருணங்களில் தேவன் என் நம்பிக்கையாக இருக்கிறார். எவரும் எனக்கு உதவவில்லை எனினும், தேவன் என்னைக் கவனித்து விசாரிப்பார். அவர் என் ஜெபங்களுக்குப் பதில் தருகிறார். மாறிக்கொண்டே வருகிற இந்த உலகில், தேவன் ஒருபோதும் மாறுவதில்லை. நான் என் நம்பிக்கையை தேவனிடத்தில் வைக்கிறேன்.  துன்பத்தை நான் எதிர்கொள்ள நேரிடும்போது, நான் தேவனை நாடி அவர் உதவியைக் கேட்பேன்.
 
ஜெபம்: சதாகாலங்களிலும் இருக்கிற தேவனே, நீர் யார் என்பதை நான் புரிந்து கொள்ள உதவுவதற்காக நன்றி. நிச்சயமற்ற தன்மை நிறைந்த இந்த உலகில், ஆண்டவரே நீரே என் நம்பிக்கை. உம்மில் நிலைத்திருக்க எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: