Wednesday, April 28, 2021

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

வாசிக்க:  1 சாமுவேல் 1,2; சங்கீதம் 118; லூக்கா 15: 11-32

வேதவசனம்: சங்கீதம் 118: 24. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
25. கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.

கவனித்தல்: சங்கீதம் 118க்கு அனேக விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆயினும், அவ்விளக்கங்களில் இருக்கிற ஒரு பொதுவாக காரியம் என்னவெனில், யூதர்களின் முக்கியமான பண்டிகை மற்றும் கூடுகைகளில் அவர்களுடைய ஜெபங்களில் இந்த சங்கீதமானது நன்றியறிதலின் பாடலாகப் பயன்படுத்தப்பட்ட ஒன்று என்பது ஆகும். யூதர்களின் ஆராதனை முறைமையில் ஆறு சங்கீதங்களை (சங்கீதம் 113-118) உள்ளடக்கிய "Egyptian Hallel" (எகிப்திய துதி) இல் இச்சங்கீதம் ஒரு பகுதி ஆகும். எதிரிகளிடம் இருந்து தேவன் விடுவித்ததை நினைவு கூர்ந்து, கர்த்தருக்கு தன் நன்றியறிதலை சங்கீதக்காரன் வெளிப்படுத்துகிறார். 24ம் வசனத்தில் வருகிற “நாள்” என்பது, தள்ளப்பட்ட கல்லை மூலைக்குத் தலைக்கல்லாக தேவன் மாற்றிய நாளைக் குறிக்கிறது. தகுதியற்றவர் என்று கருதப்படும் ஒருவரை தவிர்க்க முடியாத முக்கியமான ஒரு நபராக மாற்ற தேவனால் கூடும்.

அனுதினமும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு காரியம் என்னவெனில், ”இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்” என்பதாகும். நம் சூழ்நிலைகள், போராட்டங்கள், பிரச்சனைகள், வேலைகள், மற்றும் பதவிகள் ஆகியவை ஒருவருக்கொருவர் வித்தியாசமானவை. இன்றைய தினத்தில் மகிழ்ச்சியாக இருப்பது நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது ஆகும். நம் வாழ்க்கைச் சூழ்நிலைகள் எப்போதும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. நம் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், அனுதினமும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இன்று நாம் மகிழ்ச்சியாக இருப்பது என்பது நாளைய தினம் நாம் பெறப்போகிற விடுதலைக்கு முன்னோடியாக இருக்கிறது. நம் வாழ்க்கைச் சூழ்நிலைகள் அல்ல, நாம் தேவனைச் சார்ந்து இருப்பதுதான் நம்மை மகிழ்ச்சியாக வைக்கிறது. 

பயன்பாடு: என் வாழ்க்கையில் தேவன் அனேக ஆச்சரியமான காரியங்களைச் செய்திருக்கிறார்.  நான் இப்போது இருக்கிற நிலைக்கு வரும்படி என்னை உயர்த்தின தேவனுடைய உண்மைக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். சங்கீதக்காரன் சொல்வது போல,  “நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்” (வ.17). இந்த நாள், இந்த நிமிடம், நான் சுவாசிக்கும் இந்த நொடியும் கூட தேவனால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஈவு ஆகும். அதை நான் தவறவிடுவேனாகில், அதை ஒருக்காலும் நான் திரும்பப் பெறமுடியாது. என் கடந்தகாலத்தைக் குறித்து நான் மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கக் கூடும். ஆனால் இன்றைய தினத்திற்காக நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். என் நிகழ்கால சூழ்நிலையைப் பார்ப்பதற்குப் பதிலாக, நான் தேவனை நினைத்துப் பார்க்கையில், நான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே என் பெலன்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, நீர் தந்த விடுதலைக்காக நன்றி. உம் மாறாத கிருபைக்காக நன்றி. இன்று நான் மகிழ்ச்சியாக இருக்க எனக்கு உதவும். ஆண்டவரே, நீங்கள்தான் என் மகிழ்ச்சி மற்றும் பலத்திற்கான ஆதாரம். அனுதினமும் உம்மைச் சார்ந்து வாழ எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: