Saturday, April 24, 2021

எத்தனை பேர் இரட்சிக்கப்படுவார்கள்?

வாசிக்க:  நியாயாதிபதிகள் 17,18; சங்கீதம் 114; லூக்கா 13: 18-35

வேதவசனம்: லூக்கா 13:23. அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
24. இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 

கவனித்தல்: இயேசுவைப் பின்பற்றுபவர் கேட்கிற ஒரு நல்ல கேள்வியை நாம் இங்கு காண்கிறோம். நாமும் கூட இந்தக் கேள்வியை பலமுறை வெவ்வேறு தருணங்களில் ஆண்டவரிடம் கேட்டிருக்கக் கூடும். எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவேண்டு என்று தேவன் விரும்புகிறார் என்ற வேத போதனையை நாம் அறிவோம். ஆயினும், இங்கே நாம் இயேசுவின் பதிலைப் பார்க்கும்போது, நேரடியான பதிலைச் சொல்வதற்குப் பதிலாக, அவர் வேறு ஒன்றைச் சொல்வதாகத் தோன்றுகிறது. இந்தக் கேள்வியை அது சொல்லப்பட்ட சூழ்நிலையில் வைத்துப் பார்க்கும்போது, இரட்சிக்கப்படுவது எப்படி என்று இயேசு சொல்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். தேவன் தம் ஜனங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைக் காட்டிலும் அவர்களின் தரம் பற்றி கரிசனை உள்ளவராக இருக்கிறார். இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசித்தல் என்று இயேசு சொல்வது அவர் மூலமாக பரலோக இராஜ்ஜியத்தில் நுழைவதைக் குறிக்கிறதாக இருக்கிறது. இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறார் (யோவான் 14:6).

இடுக்கமான வாசல் என்பது கொஞ்சம் பேர்தான் இரட்சிக்கப்படுவார்கள் என்பதைக் குறிக்கிறதா? கொஞ்சம் பேர்தான் இரட்சிக்கப்படுவார்கள் என்று யூதர்களிடையே அப்படிப்பட்ட ஒரு பொதுவான நம்பிக்கை இருந்தது. இந்தக் கேள்விக்கு சற்று முன்னர், இயேசு கடுகு விதை மற்றும் புளித்த மாவு பற்றிய உவமைகளை மக்களிடம் சொன்னதை நாம் காண்கிறோம். அதில் இயேசு பரலோக இராஜ்ஜியத்தை கடுகு மற்றும் புளித்த மா உண்டாக்கும் விளைவுகளுடன் ஒப்பிடுவதைக் காண்கிறோம் (லூக்கா 13:18-21).  இந்த உவமைகளானது பரலோக ராஜ்ஜியம் ஜனங்களிடையே உண்டாக்கும் மாற்றம் மற்றும் தாக்கம் பற்றிய ஒரு பார்வையை நமக்குத் தருகிறது. 29ம் வசனத்தில், தேவனுடைய இராஜ்ஜியத்தில் நடக்கும் விருந்துக்கு உலகில் எல்லா திசைகளிலும் இருந்து ஜனங்கள் வருவார்கள் என்று இயேசு சொல்கிறார். நிச்சயமாக அனேகர் இரட்சிக்கப்படுவார்கள். இங்கே கேட்கப்படுகிற கேள்வி என்னவெனில், இடுக்கமான வாசல் வழியாக நுழைந்து செல்ல ஆயத்தமுடையவனாக நான் இருக்கிறேனா?

பயன்பாடு: இயேசுவைப் பின்பற்றுபவனாகிய நான் இடுக்கமான வாசல் வழியாக பரலோக இராஜ்ஜியத்தில் நுழைவதில் என் கவனம் இருக்க வேண்டும், எத்தனை பேர் வருவார்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பதில் அல்ல. நான் இயேசுவைப் பின்பற்றுகையில், நான் என் சுயத்தை வெறுத்து, அனுதினமும் சிலுவையை எடுத்துக் கொண்டு இயேவைப் பின்பற்ற அர்ப்பணிப்பு உள்ளவனாக இருக்க வேண்டும். தேவனுடைய இராஜ்ஜியம் வளர்ந்து சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்த தேவனை என் வாழ்வில் நான் அனுமதிக்கும் போது, அனேகர் தேவனை அறிந்து, தேவ இராஜ்ஜியத்திற்குள் வருவார்கள். இயேசுவைக் கவனமாகப் பின்பற்ற நான் அனைத்து முயற்சிகளையும் செய்வேன். 

ஜெபம்: இயேசுவே என் இருதயத்தில் இருக்கிற கேள்விகளில் ஒன்றுக்கு நீர் பதில் தந்ததற்காக நன்றி. ஆண்டவரே, அழிவுக்கு வழிநடத்துகிற விசாலமான பாதையைத் தேர்வு செய்யாமல், நித்ய ஜீவனுக்குள் வழிநடத்தும் இடுக்கமான வழியை தெரிந்து கொள்ள எனக்கு உதவும். உம் வழியில் நடக்க உம் பரிசுத்த ஆவியானவர் எனக்கு பலம் தருவாராக. ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: