Monday, April 5, 2021

தேவன் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக

வாசிக்க: யோசுவா 3, 4; சங்கீதம் 95, லூக்கா 4:1-30

வேதவசனம்: லூக்கா 4: 5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: 
6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
7. நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
8. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

கவனித்தல்: நாற்பது நாட்கள் உபவாசத்திற்குப் பின், இயேசு பசியாயிருந்தார். அவர் சரீரப்பிரகாரமாக பலவீனமாக, சோர்ந்து இருந்திருக்க வேண்டும். இயேசு மனிதனாக வந்த நோக்கத்தைக் குலைத்துப் போடும்படி சாத்தான் பலவிதங்களில் முயற்சி செய்ததைக் குறித்து நாம் இங்கு வாசிக்கிறோம். இயேசுவை சோதிக்கும் தன் முயற்சியில் முழு உலகத்தையும் சாத்தானால் உடனடியாகக் காண்பிக்க முடிந்தது. அது மனதளவிலான அல்லது ஆவி சார்ந்தஒரு தரிசனமாக இருந்திருக்கும். முழு உலகம் மீதும் தனக்குள்ள அதிகாரத்தை ஒரு நிபந்தனையுடன் இயேசுவுக்குத் தர சாத்தான் தயாராக இருந்தான். சாத்தானுடைய கவர்ச்சியான நிபந்தனை என்னவெனில், இயேசு அவனைப் பணிந்து கொள்ள வேண்டும். சிலுவை மரணம் அடையாமலே, பூமியில் இயேசு வல்லமையையையும் அதிகாரத்தையும் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்ய வில்லை. ஏனெனில், முழு உலகத்தையும் மீட்பதற்கான அவருடைய ஊழிய நோக்கத்திற்கு எதிரானதாக அது இருந்தது. இயேசு தேவனுடைய வார்த்தையிலிருந்து அவனுக்குச் சொன்ன பதில் என்னவெனில், “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக” என்பதாகும். மத்தேயு 4:10ல் இயேசுவின் உடனடிப் பதில் “அப்பாலே போ சாத்தானே” என்று வாசிக்கிறோம். இது போன்ற சோதனைகளைச் சந்தித்த எத்தனை கிறிஸ்தவர்கள் உலக உடைமைகள், உயர் பதவிகள், மற்றும் அதிகாரம் ஆகியவற்றைப் பின் தொடர்ந்து சென்று தங்கள் அழைப்பை இழந்து விட்டார்கள்! சில சிறிய சமரசங்கள் பெரிய பாவங்கள் அல்ல என்றும், தேவன் அவர்கள் சூழ்நிலையை புரிந்து கொள்வார் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். நாம் தேவனை ஆராதிக்க முடியாதபடி தடுக்கிற எதுவும், அல்லது வேறு எதையாவது ஆராதிக்க நம்மை கவர்ந்திழுக்கிற எதுவும் தேவனிடம் இருந்து வந்ததல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாத்தானுக்குப் பதில் சொல்லும்போது, இயேசு வேத வசனத்தை எப்படிப் பயன்படுத்தினார் என்பதைக் கவனித்துப் பாருங்கள். சிலுவை மரணம் பற்றி புரிந்து கொள்ளாமல் பேதுரு இயேசுவைக் கடிந்து கொண்டபோது, இயேசு அவனிடம் சொன்னதென்னவெனில்,  “தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என்பதாகும் (மத்.16:23). “இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்...உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்” (சங்.95:8).  
 
பயன்பாடு: மனிதர் எல்லோரும் தன்னையே வணங்க வேண்டும் என சாத்தான் விரும்புகிறான். தேவன் மீது உள்ள கவனத்தை திசை வேறு பக்கம் திருப்பும்படி  அவன் ஒவ்வொரு மனிதர்கள் முன்பும் சோதனைகளைப் போடுகிறான். உலக காரியங்களை சம்பாதிக்க வேண்டும் என்ற சோதனையை நான் எதிர்கொள்ள நேரிடும்போது, நான் செய்ய வேண்டிய முதலாவது காரியம் என்னவெனில், அது தேவனிடம் இருந்து வந்ததா  என்பதை சோதித்தறிய வேண்டும். ஏனெனில், ஒருவரையும் சோதிப்பவரல்ல (யாக்.1:13). சில நேரங்களில், சில காரியங்கள்ப் பெற வேண்டும் என்கிற என் இச்சையானது என்னை தவறாக வழிநடத்தக் கூடும். இரண்டாவதாக, பிசாசானவன் ”பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்” என்பதை நான் அறிந்திருக்க வேண்டும் (யோவான் 8:44). அதன் பின், சாத்தானுக்கு சற்றும் இடம் கொடுக்காது, நான் தைரியமாக தேவனுடைய வார்த்தை சொல்வதை சொல்ல வேண்டும். எபேசு சபைக்கு பவுல் எழுதும்போது, தேவனுடைய வார்த்தை ஆவியின் பட்டயம் என்று எழுதுகிறார் (எபே.6:17).
 
ஜெபம்: இயேசுவே, தீய சோதனைகளுக்கு எதிர்த்து நிற்கவும்,தேவன் மட்டுமே என் ஆராதனைக்குரியவர்  என்று போதிப்பதற்காகவும் உமக்கு நன்றி. நான் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. தேவனை ஆராதிப்பதற்கு தடையாக வரும் எதையும் நான் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ள எனக்கு உதவும். ஆண்டவரே, தேவனுக்கேற்ற காரியங்களுக்கு முதலிடம் கொடுத்து, அதன்படி வாழ உம் வல்லமையை எனக்கு இன்று தாரும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: