Tuesday, April 27, 2021

தொலைந்து போனவைகளைத் கண்டடைவதில் உள்ள மகிழ்ச்சி

வாசிக்க:  ரூத் 3,4; சங்கீதம் 117; லூக்கா 15: 1-10

வேதவசனம்: லூக்கா 15: 1. சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
2. அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

கவனித்தல்: லூக்கா 15ம் அதிகாரத்தில், பரிசேயருக்கும் வேதபாரகருக்கும் சொன்ன மூன்று உவமைகளை நாம் காண்கிறோம். சில நேரங்களில், இந்த உவமைகளை இயேசு ஏன் சொன்னார் என்பதை மறந்து விடுகிறோம். இயேசுவின் போதனையைக் கேட்பதற்காக ஆயக்காரரும் பாவிகளும் அவரிடம் வந்தனர் என நாம் இங்கு வாசிக்கிறோம். இயேசு எப்பொழுதெல்லாம் ஆயக்காரருடனும் பாவிகளுடனும் நேரம் செலவழித்தாரோ,  அவர்களிடையே ஒரு தாக்கத்தை உண்டாக்கி, அவர்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். ஒரு போதும் இயேசு அவர்களால் பாதிக்கப்படவில்லை. பாவிகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட அப்படிப்பட்ட மாற்றத்தைப் பற்றி சம்பவங்களைப் பற்றி நற்செய்தி நூலில் பல இடங்களில் நாம் காண முடியும். ஆயினும், தங்களை நியாயப்பிரமாணத்தின் பாதுகாவலர்கள் என்று அழைத்துக் கொண்டவர்கள் இயேசு ஏன் பாவிகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டார் என்ற காரணத்தை புரிந்து கொள்ள வில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், அக்கால சமுதாய நடைமுறைக்கு எதிரான ஒன்றை இயேசு செய்து கொண்டிருந்தார். லூக்கா 15ல் நாம் வாசிக்கும் மூன்று உவமைகளும், இழந்து போனவைகளைத் தேடிக் கண்டடைவதில் உள்ள மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை வலியுறுத்துகிறது. தொலைந்து போனதின் மதிப்பும், அதைக் கண்டடைவதில் அல்லது திரும்பப் பெற்றுக் கொள்வதில் உள்ளா மகிழ்ச்சியும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டு செல்வதை நாம் காண முடிகிறது. ஒரு பாவி மனம் திரும்புகையில்  பரலோகத்தில் தூதர்களிடையே உண்டாகும் மகிழ்ச்சி பற்றி லூக்கா 15:7, 10  ஆகிய வசனங்கள் நமக்குச் சொல்கின்றன. கெட்ட குமாரனைப் பற்றிய உவமையானது தன் மகனுடைய (மனம்) திரும்பி வருவதற்காக காத்துக் கொண்டிருந்த தகப்பனின் மகிழ்ச்சியை படம் பிடித்துக் காட்டுகிறது.

சில நேரங்களில், ஒரு மோசமான அல்லது விரும்பத்தகாத நபர் கிறிஸ்துவிடம் வர விரும்பும்போது, நாம் எதையாகிலும் தொலைத்ததைக் கண்டுபிடிக்கும்போது காட்டுகிற அதே மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை அவரிடம் காட்டுகிறோமா? அவர்கள் ஆண்டவரிடம் வர விரும்புவதைக் குறித்த நம் மகிழ்ச்சியைக் காட்டுவதற்குப் பதிலாக, நாம் நம் பயங்களையும், தயக்கங்களையும் வெளிப்படுத்தக் கூடும். சமயங்களில், அவர்களுடைய நோக்கங்களையே நாம் சந்தேகப்படக் கூடும். ஆயினும், இயேசு ஒரு பாவியின் மனம் திரும்புதலில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். இயேசுவின் மூன்று உவமைகளில் நாம் காண்பது போல, பரலோகத்தின், தேவ தூதர்களின் மற்றும் தகப்பனின் மகிழ்ச்சியானது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்வது நாம் இழந்து போனவைகளைத் தேடவும் ஏற்றுக் கொள்ளவும் ஆயத்தமுள்ளவர்களாக இருகக் வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது.

பயன்பாடு: ஒரு பாவியின் மனம் திரும்புதல் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கும் எனில், நான் அதைக் குறித்து எவ்வளவு அதிக மகிழ்ச்சியுடன் இருகக வேண்டும்!  தொலைந்து போன ஆட்டைக் கண்டுபிடிக்க அந்த மேய்ப்பன் காட்டிய ஆர்வம், தொலைந்து போன நாணயத்தைக் கண்டுபிடிக்க அந்த பெண் காட்டிய கவனம், மற்றும் தொலைந்து போன தன் மகனை ஓடிச் சென்று அன்புடன் கட்டியணைத்து ஏற்றுக் கொண்ட தகப்பன், இவர்கள் அனைவரும் இழந்து போனவைகளைத் தேடி இரட்சித்தல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு நினைவுபடுத்துகிறார்கள். ஒரு பாவி மனந்திரும்புதலுள்ள இருதயத்துடன் தேவனிடம் வரும்போது, அது அவருடைய முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகையை உண்டாக்குகிறது. பின்பு அந்தப் பாவியின் மாற்றப்பட்ட வாழ்க்கையானது அவனுடைய குடும்பம் மற்றும் சமுதாயத்திற்கு அதிக மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது (உதாரணமாக, சகேயு). கிறிஸ்துவிடம் வரவிரும்புகிற ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் நான் அவரை ஏற்றுக் கொள்ள திறந்த மனதுடன் இருக்க வேண்டும். ”அனைத்து பரிசுத்தவான்களுக்கும் ஒரு கடந்த காலம் உண்டு, அனைத்து பாவிகளுக்கும் ஒரு எதிர்காலம் உண்டு” என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். நான் தொலைப்பதற்கு முன்பு என்னிடம் இருந்த போது கொடுத்த மகிழ்ச்சியை விட, அதைத் தேடிக் கண்டடைவது அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இப்பொதுள்ள ஒரே வித்தியாசம் என்னவெனில், நான் அதன் மதிப்பை அறிந்திருக்கிறேன்.

ஜெபம்: இயேசுவே, நான் உம்மிடம் வந்த போது என்னை ஏற்றுக் கொண்டு நீர் காண்பித்த அன்பிற்காக உமக்கு நன்றி. கிருபையால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவியாக, உம் இரட்சிப்பு தேவைப்படுகிற மற்றவர்களுக்கு அன்பையும் கனிவையும் காண்பிக்க எனக்கு உதவும். ஆண்டவரே, இழந்து போனவர்களைத் தேடும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவும், அவர்களைக் கண்டுபிடிப்பதில் உள்ள மகிழ்ச்சியை உம்முடன் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: