Friday, April 9, 2021

மன்னிக்கிற தேவன்

வாசிக்க: யோசுவா 11, 12; சங்கீதம் 99, லூக்கா 6:1-19

வேதவசனம்: சங்கீதம் 99: 8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர்.

கவனித்தல்: பரிசுத்தமான, நீதியுள்ள, மற்றும் அன்பு நிறைந்த தேவனைப் பற்றி சங்கீதம் 99 சொல்கிறது. நம் ஜெபங்களைக் கேட்டு, அவைகளுக்குப் பதில் கொடுப்பதன் மூலம் தேவன் தம் அன்பைக் காண்பிக்கிறார். இஸ்ரவேலர்களுக்காக ஜெபித்த, தேவனுடன் பேசின மூன்று பெரும் தேவ மனிதர்களின் பெயர்களை இந்த சங்கீதம் குறிப்பிடுகிறது. தேவன் அவர்கள் ஜெபங்களைக் கேட்டு பதில் கொடுத்தார். சங்கீதம் 99:8 ஐ வாசிக்கும்போது, மோசேக்கு முன்பாக கடந்து செல்லும்போது தேவன் தம்மைப் பற்றி வெளிப்படுத்தின வார்த்தைகளை இது நினைவுபடுத்துகிறது (யாத்.34:6,7). தங்க கன்றுக் குட்டி செய்து அதை வணங்கி இஸ்ரவேலர்கள் செய்த பாவங்களுக்காக மோசே ஜெபித்த நேரமாக அது இருந்தது. தேவன் நம்மை நேசிப்பதால், நம் ஜெபங்களுக்குப் பதில் தருகிறார். ஆயினும், நாம் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்த ஒரு காரியத்தில் மீண்டும் விழாதபடிக்கு அவர் நம்மை சிட்சிக்கவும் செய்கிறார். இது தங்கள் குழந்தைகள் அவர்களுடைய தவறான செயல்களில் இருந்து திருந்தவேண்டும் என்று விரும்புகிற அன்பான பெற்றோர் கொடுக்கிற தண்டனையைப் போன்றது ஆகும். நம்மை நேசிக்கும் பரிசுத்த தேவன்
தம் ஆளுகையின் மூலமாக ஜனங்கள் மத்தியில் நீதியை சரிக்கட்டுகிறார். சங்கீதம் 99ல் திரும்பத்திரும்ப வருகிற வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள். வானத்தையும் பூமியையும் ஆளுகை செய்கிற தேவன் தம் ஜனங்களுடனான உறவை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். 
  
பயன்பாடு: பழைய ஏற்பாட்டின் தேவன் கோபம் நிறைந்த, எரிச்சலுள்ள தேவன் என்று சில கிறிஸ்தவர்கள் தவறான புரிதலை உடையவர்களாக இருக்கிறார்கள். தேவன் எல்லா நேரங்களிலும் அன்பானவராக இருக்கவில்லை என்று அவர்கள் சொல்லக் கூடும்.  ஆனால், பரிசுத்த வேதாகமம் தேவன் பரிசுத்தர், நீதிபரர், மற்றும் அன்பானவர் என்பதை மிகத் தெளிவாக சொல்கிறது. தேவனுடைய இந்த மூன்று குணாதிசயங்களும் நித்தியமானவையும்  ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாதவையும் ஆகும். என் தேவன் யார் என்பதைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் உடையவனாக நான் இருக்க வேண்டும். பரிசுத்தமும், நீதியும் நிறைந்த தேவன் என்னை நேசிக்கிறார்! இது உண்மையிலேயே ஆச்சரியமான கிருபை!  என்னை மன்னிப்பதன் மூலம் அவருடைய கிருபையை என்மேல் பொழிந்தருள்கிறார். ஆயினும், நான் என் தவறுகளை உணர்ந்து அவைகளில் இருந்து மனம் திரும்ப வேண்டும் என அவர் விரும்புகிறார். அன்பான பரலோக தந்தையாகிய அவர் நான் வழிவிலகிப் போகும்போது என்னை உணர்த்தி சரி செய்கிறார். தேவனைப் பற்றியும், அவருடைய குணநலன்களைப் பற்றியும் புரிந்து கொண்டு, அவரைப் பிரியப்படுத்துகிற ஒரு வாழ்க்கையை நான் வாழ வேண்டும். எனக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேச இயேசு இருக்கிறார் (1 (யோவான் 2:1). அவர் என்னை எந்தப் பாவ ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்ற போதுமானவராக இருக்கிறார். 
 
ஜெபம்: பிதாவாகிய தேவனே, என்னை மன்னிக்கிற உம் அன்புக்காக, கிருபைக்காக நன்றி. உம்மையும், உம் அன்பையும் புரிந்து கொள்ள உதவுகிற வேத வசனங்களுகாக நன்றி. ஆண்டவரே, நான் உயிர்வாழ்கிற நாட்களெல்லாம் எப்பொழுதும் உம்முடனான என் உறவை உயிர்ப்புடன்  வைத்திருக்க எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: