Sunday, April 11, 2021

தகுதி மற்றும் அதிகாரம் பற்றிய ஒரு புரிதல்

வாசிக்க: யோசுவா 15, 16; சங்கீதம் 101, லூக்கா 7: 1-35

வேதவசனம்: லூக்கா 7: 6. அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;
7. நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
8. நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.

கவனித்தல்: இயேசுவை ஆச்சரியப்படுத்தின மற்றுமொரு சம்பவத்தைப் பற்றி நாம் இங்கே பார்க்கிறோம். ஆனால் இச்சமயத்திலோ, நூற்றுக்கதிபதியின் விசுவாசம் இயேசுவை ஆச்சரியப்படுத்தியது. முந்தைய சம்பவத்தில், தன் ஊரைச் சேர்ந்தவர்களின் அவிசுவாசத்தைக் கண்டு இயேசு ஆச்சரியப்பட்டார் என நாம் வாசிக்கிறோம் (மத்.6:6). மத்தேயு தருகிற சுருக்கமான விவரங்களுடன் ஒப்பிடும்போது, நூற்றுக்கதிபதி பற்றிய சம்பவத்தைப் பற்றிய அதிக தகவல்களை லூக்கா தருகிறார். ஒருவருக்காக வேண்டி பேசும்படி மற்றவர்களை மத்தியஸ்தராக அனுப்புவது என்பது பண்டைய மத்திய கிழக்கு நாடுகளில் பொதுவாக காணப்பட்ட பழக்கமாக இருந்தது. அப்படி மத்தியஸ்தராகச் செல்பவர்கள் சொல்வது அவர்களை அனுப்பியவர்களின் வார்த்தைகளாக கருதப்பட்டது.  இங்கு நற்செய்தி நூல் தரும் விவரத்தில், குறிப்பாக இரண்டு காரியங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. முதலாவதாக, இயேசுவுக்கு முன்பாக வருவதற்கு தனக்கு உள்ள தகுதியைப் பற்றி நூற்றுக்கதிபதி ஒரு புரிதலை உடையவராக இருந்தார். அவர் இயேசு மீது கொண்டிருந்த மரியாதையையும் ஆண்டவர் முன் நிற்பதற்கு அவர் தகுதியற்றவராக இருந்தார் என்பதையும் அது விளக்குகிறது. இது அவருடைய நன்னெறி மற்றும் பாவ நிலைமையைக் குறித்த ஒரு குறிப்பாக இருக்கக் கூடும். ரோம ராணுவத்தில் தனக்கு இருந்த உயர்ந்த பதவி, நல்ல வசதியான பொருளாதார நிலைமை, மற்றும் சமுதாயத்தில் தன்னை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நிலை ஆகியவற்றை இயேசுவுக்கு முன் வருகிறதற்கான ஒரு தகுதியாக அவர் கருதவில்லை. இரண்டாவதாக, மற்றும் முக்கியமானது என்னவெனில்,  அதிகாரத்தில் உள்ள ஒரு மனிதராக அவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு உள்ள வல்லமை அல்லது சக்தியைப் பற்றி நன்றாக புரிந்து கொண்டிருந்தார். அவர் தன் வேலைக்காரனை இயேசு சுகமாக்கவேண்டும் என்று கூட கேட்கவில்லை. மாறாக, ஒரு வார்த்தை சொல்லும் என்று கேட்டுக் கொண்டான். இயேசுவின் வார்த்தை தன் வேலைக்காரனை சுகப்படுத்த வல்லமை உள்ளது என்று அவன் விசுவாசித்தான்.  இயேசுவை விட்டு தூரத்தில் இருந்த ஒரு நபர் அவருடைய வார்த்தையின் வல்லமையினால் சுகத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்த ஒரு அற்புதம் ஆகும். இது அசாதாரணமான ஒரு அற்புதம். நூற்றுக்கதிபதிக்கு தன் தகுதி மற்றும் அதிகாரமுடையவரின் வார்த்தைக்கு உள்ள வல்லமை பற்றிய புரிதல் ஆகியவை நாம் கவனிக்க வேண்டியவை ஆகும். இயேசுவின் வார்த்தையில் நமக்கு தேவையான அனைத்தும் உள்ளது.  இயேசுவின் வார்த்தை  வல்லமையுள்ளது! 

பயன்பாடு: இயேசுவுக்கு முன்பாக வருவதற்கு நான் தகுதி உடையவனா என்று எனக்கு நானே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ளும்போது, நான் சம்பாதித்த எந்த தகுதிகளினாலும் அல்ல,  இயேசுவின் கிருபை மற்றும் அன்பினால் மாத்திரமே அவர் முன் வந்து நிற்க முடியும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். என் பணம், சமுதாய அந்தஸ்து, மற்றும் சக்திவாய்ந்த பதவி ஆகியவை என்னை பரிசுத்த தேவனுக்கு முன்பாக நிற்கும் தகுதியை எனக்குத் தருவதில்லை. என்னை நான் தாழ்த்தி, தேவனுக்கு முன்பாக நிற்பதற்கு நான் தகுதியற்றவன் என்பதை அறிக்கையிடும்போது, அவர் அதைக் காண்கிறார். நான் இயேசுவின் வார்த்தைகளின் வல்லமையைப் புரிந்து கொள்ளும்போது, என் வாழ்வில் அற்புதங்களை நான் காண்பேன். என் விசுவாசம் அல்லது என் அவிசுவாசம், இரண்டுமே இயேசுவை ஆச்சரியப்படுத்த முடியும். நான் இயேசுவின் மீதும் அவருடைய வார்த்தைகள் மீதும் வைத்திருக்கிற விசுவாசத்தை அவர் காண வேண்டும் என விரும்புகிறேன். 
 
ஜெபம்: ஆண்டவராகிய இயேசுவே, என் உண்மையான நிலை இன்னதென்றும், உம் வார்த்தைகளின் வல்லமையையும் புரிந்து கொள்ள எனக்கு உதவுவதற்காக நன்றி. நீர் எவரிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை. நான் தாழ்மையுடன் இருக்கவும், என் வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கான உம் வார்த்தைகளைத் தேடவும் எனக்கு உதவும். கர்த்தாவே, என் வாழ்க்கைக்கான ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: