Monday, April 26, 2021

விலைக்கிரயம் இன்னதென்று சிந்தியுங்கள் - நீங்கள் இயேசுவின் சீடர்

வாசிக்க:  ரூத் 1,2; சங்கீதம் 116; லூக்கா 14: 25-35

வேதவசனம்: லூக்கா 14: 33. அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

கவனித்தல்: லூக்கா 14:25-35 ல், தன் சீடராக இருப்பதற்கு கொடுக்கவேண்டிய விலைக்கிரயம் பற்றி விளக்க இயேசு ஒரு உயர்வு நவிற்சி (hyperbole - தன் கருத்தை வலியுறுத்துவதற்காக, அதன் நேரடி அர்த்தத்தை எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை) ஒன்றைச் சொல்லி ஆரம்பிப்பதை நாம் பார்க்கிறோம். இந்த வேதபகுதியில், இயேசுவின் சீடராக இருப்பதற்குத் தேவையான மூன்று முக்கியமான காரியங்களை இயேசு அடிக்கோடிட்டு காட்டுகிறார்: 1) மற்ற எவரையும் விட இயேசுவை நேசித்தல், 2) (அனுதினமும்) சிலுவையை சுமந்து வாழ்தல், 3) கிறிஸ்துவின் நிமித்தம் அனைத்தையும் விட்டுவிட ஆயத்தமாக இருத்தல். ஒரு கோபுரம் கட்ட விரும்புகிறவன் முதலில் அதற்க்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கிடுவான் என்றும், போருக்கு தன் ராணுவத்தை தயார்படுத்துகிற ராஜா தன் ராணுவத்தின் வலிமை இன்னதென்றும் சிந்திப்பான் என இயேசு சொன்னார். இங்கே, ஒருவர் தன் சீடர் ஆகுவது கடினம் என்று சொல்ல வில்லை. மாறாக, அனைவரும் அவருடைய சீடர்கள் ஆக வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறார்.  போதிய பணம் இல்லாத மற்றும் வலிமையற்ற ஒருவர்,  முறையே கட்டிட வேலையை ஆரம்பிக்க மாட்டார், போருக்கும் செல்ல மாட்டார்.  “அப்படியே”, தங்கள் பலம், சக்தி ஆகியவற்றைக் கணக்கிடுபவர் இயேசுவின் சீடர் ஆக முடியாது. தன் சீடர் ஆக விரும்புகிறவர்கள் அவரைப் பின்பற்ற எல்லாவற்றையும் விட்டுவிட ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இங்கே விலைக்கிரயம் இன்னதென்று சிந்தித்தல் என்பது, கிறிஸ்துவைப் பின்பற்ற நாம் தகுதியானவர்களா அல்லது இயலுமா என்பதைக் குறிப்பது அல்ல. இது நமக்கு ஒரு சவாலை முன்வைக்கிறது: கிறிஸ்துவுக்கு ஒரு முழுமையான அர்ப்பணிப்பைச் செய்ய நாம் ஆயத்தமாக இருக்கிறோமா?

பயன்பாடு: இயேசுவின் சீடனாக, வேறெதைப்பார்க்கிலும் முதலாவது தேவனையும் தேவனுடைய ராஜ்ஜியத்தையும் நான் தேடவேண்டும். நான் என் குடும்பம் மற்றும் உறவினர்கள வெறுக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. மாறாக, தேவன் மேல் உள்ள என் விருப்பத்தை இது காட்டுகிறது. இயேசுவைப் பின்பற்றுவதற்கு, நான் சிலுவை சுமக்க, அதாவது அதற்கான் விலைக்கிரயத்தைச் செலுத்த ஆயத்தமுள்ளவனாக இருக்க வேண்டும். சிலுவை இல்லாத ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையானது கிறிஸ்து இல்லாத ஒரு வாழ்க்கை ஆகும். எனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், என் அனைத்தையும் இயேசுவுக்கு முன் வைக்க ஆயத்தமுள்ளவராக நான் இருக்க வேண்டும்.பவுலைப் போல, ”எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்” என்று நான் சொல்ல, வாழ விரும்புகிறேன்.

ஜெபம்: இயேசுவே, உம் சீடர் ஆவதை எளிமையாக்கினதற்காக நன்றி. ஒரு முழுமையான அர்ப்பணிப்புடன் உம்மை நேசிப்பதன் மூலம் நான் உம் சீடர் ஆக இருக்க முடியும். அன்புடனும், மனத்தாழ்மையுடனும் உம்மை அனுதினமும் பின்பற்ற எனக்கு உதவும். ஏனெனில், இயேசுவே, நீங்கள் தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறீர். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: