Wednesday, April 14, 2021

"உன் பேர் என்ன?" - அனேக காரியங்களை வெளிப்படுத்தக் கூடிய ஒரு எளிய கேள்வி!

வாசிக்க: யோசுவா 21, 22; சங்கீதம் 104; லூக்கா 8: 26-56

வேதவசனம்: லூக்கா 8: 30. இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
31. தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.

கவனித்தல்: பிசாசினால் பீடிக்கப்பட்டு ஒரு பயங்கரமான நிலையில் இருந்த ஒரு மனிதனைப் பற்றி நாம் இங்கு வாசிக்கிறோம். பிசாசின்கட்டுப்பாட்டின் கீழ் அவன் இருந்த படியால், அவனைச் சங்கிலிகளால் கட்டுப்படுத்த முடியாதிருந்தது. அவன் உயிரோடு இருந்தாலும், கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆயினும், இயேசுவை அவன் கண்டபோது, இயேசுவின் பாதத்தில் அவன் மேல் இருந்த பிசாசின் ஆதிக்கம் அனைத்தும் நொறுங்கி விழ ஆரம்பித்தது. அவனுடைய பெயர் என்ன என்று இயேசு கேட்டபோது, அவனுக்குள் இருந்த பிசாசுகள் இயேசுவுக்கு பதில் சொல்லின.  அப்படிப்பட்ட ஒரு கட்டுப்பாட்டை அவன் மீது அப்பிசாசுகள் கொண்டிருந்தன. நிச்சயமாக அது தனியொரு பிசாசு அல்ல. அவனுக்குள் லேகியோன் பேய்கள் இருந்தன. ரோம இராணுவத்தில், லேகியோன் என்ற பதம் 6000ம் பேரைக் கொண்ட ஒரு பிரிவைக் குறிக்கிற ஒரு வார்த்தை ஆகும். அந்த மனிதன் மிக அதிக அளவிலான பிசாசுகளினால் பிடிக்கப்பட்டிருந்தான்.  அந்த பிசாசுகள் அனைத்தும் இயேசுவைப் பார்த்து மிகவும் பயம் அடைந்தன. ஆனால், இயேசுவோ அந்த மனிதனின் விடுதலை பற்றி கரிசனை உடையவராக இருந்தார். அந்தப் பகுதியில் உள்ள ஜனங்கள் என்ன நடந்தது என்பதைப் பார்க்க வந்த போது, பிசாசின் பிடியில் இருந்த அந்த மனிதன் “வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக்” கண்டார்கள் (வ.35). விடுதலைப் பெற்ற அந்த மனிதன் இயேசுவின் பின்செல்ல விரும்பினான். ஆனால் இயேசுவோ அவன் திரும்பிச் சென்று, தேவன் அவனுக்கு செய்தவைகளை அவனுடைய வீட்டாருக்கு அறிவிக்கச் சொன்னார். அந்த மனிதனோ முழு பட்டணத்திற்கும் இயேசு அவனுக்குச் செய்தவைகளைப் பற்றி சாட்சி கொடுத்தான் என்பது மிகவும் சுவராசியமானதாக இருக்கிறது.

பயன்பாடு: என் பெயர் என்னவென்று யாராவது கேட்கும்போது, எனக்குப் பதிலாக வேறு யாராவது ஒரு பதிலைச் சொன்னால் அது எப்படியிருக்கும்? அந்த அறியப்படாத நபர் எனக்குள் வசிக்கிறவராக, என் அனுமதியின்றி எனக்குப் பதிலாக பேசுவாரெனில், என் வாழ்க்கை நிச்சயமாக ஒரு குழப்பத்திற்குள் இருக்கும். அப்படித்தானே! லூக்கா 8ம் அதிகாரத்தில் நாம் பார்க்கிற அந்த மனிதன் தனக்குள் அனேக பிசாசுகளை உடையவனாக இருந்தான். நான் ஒருவேளை அந்தளவுக்கு பிசாசுகளினால் கட்டுப்படுத்தப்படுகிற ஒரு வாழ்க்கையை வாழாமல் இருக்கலாம். ஆயினும், சில நேரங்களில், குறிப்பாக எதையாவது செய்ய நான் தூண்டப்படும்போது, அல்லது பாவ சோதனைகளை எதிர்கொள்ளும்போது, எனக்குள் இருக்கிற சில காரியங்கள் அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி என்னைக் கட்டுப்படுத்தி, அடிமைப்படுத்த முயற்சிப்பதை நான் கவனிக்கிறேன். அது என்னுடைய கோபம் அல்லது என் கடந்தகால கசப்பான அனுபவங்கள், அல்லது என் பலவீனங்கள் என்பன போன்ற பல காரியங்களாக இருக்கலாம். காரியங்கள் என் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும்போது, நான் இயேசுவின் பாதத்தில் சரணடைய வேண்டும். என்னைப் பாதிக்கிற காரியங்களின் எண்ணிக்கை இயேசுவுக்கு ஒரு பொருட்டல்ல. இப்படிப்பட்ட காரியங்களை சரிசெய்ய இயேசுவின் பாதத்தை விட சிறந்த ஒரு இடம் எதுவும் கிடையாது. நான் இயேசுவுடன் அமரும்போது, நான் அமைதியையும் மனத் தெளிவையும் கண்டு கொள்கிறேன். நான் இயேசுவுடன் இருக்கிறேன். நான் இயேசுவுக்குச் சொந்தமானவன். நான் நடைபிணமாக வாழ மாட்டேன். மாறாக, இயேசுவுக்காக ஒரு உயிருள்ள சாட்சியாக நான் வாழ்வேன்.

ஜெபம்: இயேசுவே, பிசாசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஜனங்களை விடுவிப்பதற்காக உமக்கு நன்றி. நீர் என் இரட்சகர். நான் உம் பாதுகாப்பில் இருக்கிறேன். அறிந்த அல்லது அறியப்படாத காரியங்கள் என் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை எடுக்க முயற்சித்தால், அதை உமக்கு முன்பாக கொண்டு வர எனக்கு உதவும். எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்தை நீர் தருகிறதற்காக உமக்கு நன்றி. ஆண்டவராகிய இயேசுவே, என் இருதயத்தையும், என் சிந்தனைகளையும் காத்துக் கொள்ளும். ஆமென்.

-அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: