Wednesday, April 7, 2021

உம்மண்டை கர்த்தரே!

வாசிக்க: யோசுவா 7, 8; சங்கீதம் 97, லூக்கா 5:1-16

வேதவசனம்: லூக்கா 5: 8. சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.

கவனித்தல்: லூக்கா 5:8 ஐ நாம் வாசிக்கும்போது, பேதுரு அந்த நேரத்தில் பார்த்தது என்னவாக இருக்கும் என்று நாம் யோசிக்கலாம்! ஒரு தொழில்முறை மீனவனாகிய பேதுருவுக்கு ”ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று இயேசு சொன்னபோது, அவன் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். மீனவர்கள் பொதுவாக அதிகாலை நேரம் அல்லது இரவு நேரத்தில் மீன்பிடிக்க விரும்புவார்கள். ஏனெனில் அதுதான் மீன்பிடிக்க சிறந்த நேரம் ஆகும். இங்கே, இரவு முழுதும் பிரயாசப்பட்டும் பேதுருவும் அவன் கூடச் சென்றவர்களுக்கும் ஒரு மீனும் அகப்படவில்லை என்பது மிகவும் அரிய ஒரு நிகழ்வு ஆகும். ஆயினும், இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து அவன் வலைகளை இறக்கினபோது, அவன் இயேசுவைப் பற்றி புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு புதிய காரியத்தைப் பார்த்தான். இயேசுவை பேதுரு இதற்கு முன்னமே சந்தித்திருக்கிறார். இது முதல் முறை அல்ல என்பது வெளிப்படை. அதுவரைக்கும், இயேசுவை நாசரேத்தைச் சேர்ந்த ஒரு தச்சனின் மகனாக அல்லது ஒரு போதகராக, அல்லது அற்புதங்களைச் செய்யும் ஒருவர் என பேதுரு நினைத்திருக்கக் கூடும். தங்கள் வலைகளில் ஏராளமான மீன்களை அவன் கண்டபோது, இந்த உலகத்தில் உள்ள எவரையும் விட இயேசு மேலானவர் என்பதை அவன் கண்டு உணர்ந்திருக்க வேண்டும். ஜனங்கள் தேவன் அருகில் இருப்பதை உணர்ந்து கொள்ளும்போது, அவர்கள் தங்களுடைய உண்மையான பாவ நிலையையும், தேவனுக்கு அருகில் இருப்பதற்கான தகுதியற்ற நிலையையும் அறிந்து கொள்கிறார்கள். ஏசாயா தேவனைக் கண்டபோது, பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக தன்னுடைய உண்மையான நிலையைப் பற்றிய உணர்வடைந்தார் (ஏசாயா 6:5). பேதுரு செய்ததைக் கவனியுங்கள்:  ”இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே” என்று அவன் சொன்னான். வேறுவிதமாகச் சொல்வதானால், இயேசுவுக்கு முன் தன் அனைத்து திறமைகள் மற்றும் பெருமைகள் என எதுவும் சொல்லத்தக்கவை அல்ல என்று உணர்ந்தவுடனே, இயேசுவிடம் தன்னை ஒப்புக் கொடுத்தார். பேதுரு இயேசுவை அழைத்ததில் நிகழ்ந்த மாற்றத்தைக் கவனியுங்கள். ஐயரே என்று சொன்ன பேதுரு, ஆண்டவரே என்று இயேசுவைப் பார்த்து பேசுகிறார். அதன்பின்பு, இயேசு பேதுருவை மனிதர்களைப் பிடிக்கும் ஒருவராக மாற்றினார். இந்த நிகழ்விற்குப் பின்பு, பேதுருவும் அவருடைய நண்பர்களும் நிரந்தரமாக இயேசுவுடனே கூட இருக்கும்படி தங்கள் வலைகளை விட்டு விட்டுச் சென்றார்கள். அதன் பின்பு அவர்கள் இயேசுவை எப்பொழுதாவது பார்க்கிறவர்களாக இருக்கவில்லை. பின்பு, இயேசு எங்கு சென்றாலும், அவருடன் கூடச் செல்கிற மிகவும் நெருக்கமாக அவரைப் பின் தொடர்கிறவர்களாக அவர்கள் மாறினார்கள்.
 
பயன்பாடு: நான் இயேசுவுக்கு அருகில் வரும்போது, நான் இயேசுவை தனிப்பட்ட விதத்தில் நான் எதிர்கொள்ளும்போது, இயேசு யார் என்பதைப் பற்றியும், நான் யார் என்பதையும் பற்றிய ஒரு தெளிவான காட்சியை நான் பெறுகிறேன். இயேசுவைத் தூரத்தில் இருந்து பார்ப்பது, அல்லது எப்பொழுதாவது அவரைச் சந்திப்பது இயேசுவைப் பற்றிய ஒரு மரியாதையான புரிதலை எனக்குத் தரும். சிலர் தங்களுடைய உண்மையான நிலை வெளிப்படாதபடிக்கு, இயேசுவைத் தூர இருந்து பார்த்து ஆச்சரியப்பட்டு ரசிக்கவே விரும்புகிறார்கள். நான் அப்படி இருக்கக் கூடாது.   என் அருகில் வர இயேசுவை நான் அனுமதிக்கும் வரையிலும், அல்லது நான் அவர் அருகில் செல்லுகிற வரையிலும், அவரைச் சிறந்த முறையில் அறிந்து கொள்கிற மற்றும் என் உண்மையான நிலையை உணர்ந்து கொள்கிற மாபெரும் வாய்ப்பை தவறவிடுகிறவனாக நான் இருப்பேன்.  இயேசுவே என் ஆண்டவர் என்பதை நான் உணர்ந்து கொள்ளும்போது, என் வாழ்க்கை முற்றிலும் மாற்றப்படுகிறது. அதன் பின், இயேசுவுடன் கூட வாழ்கிற ஒரு புதிய நபராக நான் மாறுகிறேன்.
 
ஜெபம்: ஆண்டவராகிய இயேசுவே, நான் உமக்கு முன்பாக வரத் தகுதியற்றவன் என்றாலும் கூட,  உம் அருகில் நான் வருவதற்குத் தொடர்ந்து பல வாய்ப்புகளை எனக்குத் தருவதற்காக உமக்கு நன்றி.  உம்மைப் பின்பற்றுகிறவனாக, ஒரு சீடனாக என்னை மாற்றுகிற உம் அழைப்பிற்காக நன்றி. ஆண்டவரே, உமக்கு அருகில் நான் இருக்கவும், உம்மைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளவும் இன்று எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: