Sunday, April 4, 2021

தேவன் சிட்சிக்கும் மனிதன்

வாசிக்க: யோசுவா 1, 2; சங்கீதம் 94, லூக்கா 3:21-38

வேதவசனம்: சங்கீதம் 94: 13. சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.

கவனித்தல்: சங்கீதம் 94ல், நாம் இரண்டு விதமான மக்களைக் குறித்தும், ஆண்டவர் அவர்களை எப்படி ஒழுங்குபடுத்துகிறார் என்பதைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம். தேவனுக்குப் பயப்படாத துன்மார்க்கர், தீய செயல்களைச் செய்பவர்கள் கர்த்தரின் தண்டனை குறித்து  எச்சரிக்கப்படுகிறார்கள். மறுபுறம், தேவனால் சிட்சிக்கப்படுகிற (அ) ஒழுங்குபடுத்தப்படுகிற நீதிமானின் ஆசீர்வாதம் பற்றி இந்த சங்கீதம் கூறுகிறது (வ.12-19). தீய செயல்களைச் செய்பவர்கள் தேவனுடைய தண்டனை குறித்து எச்சரிக்கப்படுகையில்,  தேவன் தம் ஜனங்களை அவருடைய வார்த்தைக்கேற்றபடி வாழ சிட்சிக்கிறார். தேவன் தாம் சிட்சிக்கிற மனிதன் வேதத்தைச் சரியாக புரிந்து கொள்ளவேண்டும் என்றும், அவனுடைய/அவளுடைய வாழ்வில் தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்ளவும் அவர் சிட்சிக்கிறார்..நம் நன்மைக்காகவே தேவன் நம்மை சிட்சிக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் (எபி.12:10).  தேவனுடைய நோக்கம் இன்னதென்று நாம் அறிந்து கொள்கிற வரைக்கும், சிலகாலம் நாம் விரும்புகிற ஒன்றாக இல்லாமலிருக்கும். இங்கே நமக்கு ஒரு நினைவூட்டல் என்னவெனில், தேவன் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர் உதவி செய்கிறார், துணையாக இருந்து ஆதரிக்கிறார், தேற்றுகிறார், மற்றும் நமக்குத் தேவையானதைத் தருகிறார். “கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்” (வ.14).  

பயன்பாடு: தேவன் என்னைச் சிட்சிக்கும்போது, அதில் உள்ள க‌ஷ்டங்களைப் பற்றி குறைகூறுவதற்குப் பதிலாக, என்னிடத்தில் இருந்து தேவன் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக நான் என் கவனத்தை அவருடைய வார்த்தைக்கு நேராக திருப்ப வேண்டும். தேவன் சிட்சிக்கும்போது, அவர் சுத்தப்படுத்தி (வேண்டாதவைகளை நீக்கி), சுத்திகரிக்கிறார். தேவன் என்னை நேசிக்கிற காரணத்தினாலேயே, அவர் இதைச் செய்கிறார் என்பதை நான் புரிந்து கொள்ள வேண்டும். தேவன் என்னைச் சிட்சிக்க/ஒழுங்குபடுத்த நான் அனுமதிக்கும்போது, அது எவ்வளவு மேன்மையானதாக இருக்கும்! மிகச் சிறந்த போதகரை என் பக்கத்தில் நான் கொண்டிருப்பதுதான் கிறிஸ்தவ வாழ்வின் பாக்கியம் ஆகும். கர்த்தருடைய போதனையின்படி நான் என்னை நான் திருத்திக் கொள்ளும்போது, என் வாழ்க்கைக்கான அவருடைய சித்தம் குறித்த ஒரு தெளிவை நான் பெற்றுக் கொள்கிறேன். 

ஜெபம்: ஆண்டவரே, உம் பிள்ளைகள் உம் வழியில் நடக்க உதவி செய்யும் சிறந்த ஆசிரியராக நீர் இருக்கிறீர். நான் உம்மைப் போல பரிசுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புகிறீர். என் பரலோக போதகரே, உம் அன்பைப் புரிந்து கொள்ளவும் எனக்கு உதவும், உம் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியும் ஞானத்தைத் தாரும். ஆண்டவரே, நான் உம்மிடன் இருக்கவும், உம் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளவும் எனக்கு இன்று உதவி செய்யும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: