Monday, March 29, 2021

ஒரு தெய்வீக கட்டளை

வாசிக்க: உபாகமம் 23, 24; சங்கீதம் 88,  மாற்கு 16: 9-20

வேதவசனம்: மாற்கு 16: 15. பின்பு, அவர் (இயேசு) அவர்களை (தன் சீடர்களை) நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்...
20. அவர்கள்(இயேசுவின் சீடர்கள்) புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

கவனித்தல்: பலவீனமான, கல்வியறிவற்ற பதினொரு பேர் அடங்கிய ஒரு குழுவை முழு உலகத்தையும் சென்றடைய வேண்டிய ஒரு வேலைக்காக பணிக்கு அமர்த்துவது என்பது நவீன கால மனிதனுக்கு அபத்தமானதாக தோன்றும். அது செய்து முடிக்கப்படவே முடியாத ஒரு வேலையாக இருக்கும் என்று அவன் நினைக்கக் கூடும். ஆனால், இயேசுவோ நடைமுறையில் அசாத்தியமானவைகளை சாத்தியப்படுத்துகிறவராகவே (செய்யப்பட முடியாதவைகளை செய்கிறவராக) எப்போதும் இருக்கிறார். ஒரு பெரிய கூட்டத்திற்கு அற்புத உணவு அளிப்பதாக இருந்தாலும் சரி, அல்லது இதுவரை நடந்திராத ஒரு அற்புதமாக இருந்தாலும் சரி, அவர் நிகழ சாத்தியமானதாக மாற்றுகிறார். அனேகரின் தேவைகளைத் தீர்ப்பதற்கு இருக்கின்ற சொற்ப ஆதாரங்களை பயன்படுத்துவது எப்படி என்பதை இயேசு அறிந்திருக்கின்றார். ஜனங்களைச் சந்திப்பதில் இயேசு எவ்விதப் பாகுபாடும் காட்டுவதில்லை. அவர் தன் சீடர்களிடம் “உலகமெங்கும்”, “சர்வ சிருஷ்டி” களிடமும் செல்ல வேண்டும் என சொன்னார். அனைவரும் நற்செய்தியைக் கேட்கவேண்டியதாக இருக்கிறது. ஆனால், அது சாத்தியமானது தானா? எப்படி நடைபெறும்? இயேசு பரமேறிச் சென்ற பின், இயேசுவின் சீடர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் சொன்னாரோ அதையே செய்தார்கள். அவர்கள் நற்செய்தியை பிரசங்கித்த போது, ஆண்டவர் ”அவர்களுடனே கூட கிரியை நடப்பித்து,” அற்புத அடையாளங்களினாலே தம் வசனத்தை உறுதிப்படுத்தினார். அவர்கள் இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்த போது, அவர்கள் அதன் பலன்களைக் கண்டார்கள். நற்செய்தியைப் பிரசங்கிப்பது நம் பொறுப்பு; நற்செய்தியை நாம் பிரசங்கிக்கும்போது, கிறிஸ்து நம்முடன் இணைந்து செயல்படுகிறார் என்பது ஒரு மாபெரும் பாக்கியம்.

பயன்பாடு:  என் பலவீனங்களோ, தகுதிகளோ தேவன் என்னைப் பயன்படுத்துவதற்கு தடையாக இருக்க முடியாது. நான் அவருடைய தெய்வீக கட்டளையை ஏற்றுக் கொள்கிறேனா, இல்லையா என்பதுதான் காரியம். அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு சொல்வது போல, நான் நற்செய்தியைப் பிரசங்கிக்க எல்லா நேரங்களிலும் ஆயத்தத்துடன் கவனமாக இருக்க வேண்டும் (2 தீமோ.4:2). தேவையுள்ள ஜனங்களிடம் சென்று, தேவனின் வார்த்தையை நான் பிரசங்கிக்கும்போது, இயேசுகிறிஸ்து என்னுடனே கூட இருந்து நடப்பிக்கும் கிரியைகளை நான் காண முடியும்.  

ஜெபம்: பிதாவாகிய தேவனே, நற்செய்தியைப் பிரசங்கிக்க என்னை அழைப்பதற்காக நன்றி. என் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், மற்றும் நற்செய்தியின் தேவை உள்ள அனைவருக்கும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியை  பகிர்ந்து கொள்ள என்னைப் பயன்படுத்தும். இதைச் செய்வதற்கு, பரிசுத்த ஆவியின் பலத்தையும், ஞானத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: