Wednesday, March 17, 2021

உங்களுக்கு என்ன வேண்டும்?

 வாசிக்க: எண்ணாகமம் 35, 36; சங்கீதம் 76,  மாற்கு 10:32-52

வேதவசனம்: மாற்கு 10: 51. இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
52. இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.

கவனித்தல்:   பார்வையற்ற பர்திமேயுவின் அற்புத சுகமானது மிகவும் சுவராசியத்தைத் தூண்டுகிற, நமக்கு அனேக காரியங்களைக் கற்றுத்தருகிற ஒரு அற்புதமாக இருக்கிறது. சுகமடைந்த நபரின் பெயரைக் காண்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் ஆகும். ஏனெனில், நற்செய்தி நூலானது சுகம் பெற்றவர்களின் பெயர்களைப் பொதுவாக தருவதில்லை. தன் சீடர்களான யாக்கோபு மற்றும் யோவானிடம் முன்பு கேட்ட அதே கேள்வியை இயேசு இங்கே கேட்கிறார்:  “நான் உனக்கு என்னசெய்ய வேண்டும் என்றிருக்கிறாய்.” இயேசு தன் சீடர்களிடம் கேள்வி கேட்பதற்கு முன்பு,  “நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை” (அது எதுவாயிருந்தாலும்) தரவேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரிடம் அவர்கள் வருவதை நாம் காண்கிறோம் (வசனம்.(35).  எவரேனும் உதவி செய்தாலொழிய, பார்வையற்ற பர்திமேயுவினால் இயேசுவிடம் வரமுடியாது.  ஆயினும், அவன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த வழியில் இயேசு செல்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட உடனே,  “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்” என பலத்த சத்தமாகக் கூப்பிட்டான். மாற்கு நற்செய்தி நூலில் பர்திமேயு மட்டுமே இயேசுவை “தாவீதின் குமாரன்” என்று அழைக்கிறார் என்பது ஆச்சரியமானதாக இருக்கிறது. அவருடைய பார்வையற்ற தன்மை, மேசியா, இரட்சகர் யார் என்பதை அறிந்து கொள்ள தடையாக இருக்கவில்லை! இயேசுவின் சீடர்களுக்கும், பர்த்திமேயுவுக்கும் இருந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். மேலும், அவர்களுடைய பதில்களில் உள்ள வித்தியாசத்தையும் கவனித்துப் பாருங்கள் (வசனம் 37,51). ஒரு உயர்ந்த பதவியை அல்லது நிலையை யாக்கோபும் யோவானும் ஆசைப்பட்டுக் கேட்கையில், பர்திமேயு, “ஆண்டவரே (மூல மொழியில், ரபி - என் ஆண்டவரே)  நான் பார்வையடையவேண்டும்” என்று பதிலளித்தான். பர்திமேயுவின் விசுவாசத்தை அங்கீகரித்து இயேசு அவனைப் பார்த்து “போ” என்று சொன்னார். இயேசு தன் சீடர்களிடம் கேட்டது போல, பர்திமேயுவிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. ஆச்சரியப்படும் விதமாக, தன் பார்வை கிடைத்த உடனே, பர்திமேயு இயேசுவின் பின் சென்றான். அவன் இயேசுவைத் தெளிவாக காணும் ஆன்மீக அல்லது ஆவிக்குரிய பார்வையைப் பெற்றிருக்க வேண்டும். 

பயன்பாடு: நாம் விரும்பும் எதையும் இயேசுவிடம் கேட்கமுடியும். ஆயினும், எல்லாம் தகுதியானதாக இராது. சில நேரங்களில் சரியான காரியங்களையே நாம் தவறான நேரங்களில் கேட்கக் கூடும். நாம் வேண்டிக் கொள்கிறதற்கு முன்னமே, நம் பரம பிதா நமக்குத் தேவையானது இன்ன என்று அறிந்திருக்கிறார் என இயேசு சொல்லியிருக்கிறார் (மத்தேயு.6:8). நான் தேவனை நாடி ஜெபிக்கும்போது, தேவன் முன்னமே எனக்காக ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறவைகளைக் காண்கிற ஒரு பார்வை எனக்குத் தேவை. நான் அன்புடன் தாழ்மையாகவும், இயேசுவை என் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டு  கேட்கும்போது, தேவன் என் விசுவாசத்தை கனப்படுத்துகிறார். எனக்குத் தேவையான பார்வையை நான் பெறும்போது, நான் மிக தெளிவாகவும், நெருக்கமாகவும்  இயேசுவைப் பின்பற்றுகிறேன்.  

ஜெபம்:  இயேசுவே, எங்கள் ஊக்கமான ஜெபங்களுக்கு நீர் பதில்தருகிறதற்காக உமக்கு நன்றி. ஆயினும், என் மன விருப்பங்களின் படி அல்லாமல், உம் சித்தத்தின் படி நான் ஜெபிக்க/கேட்க எனக்கு உதவும். என் ஆண்டவரே, உம்மைத் தெளிவாகக் காண என் கண்களைத் திறந்தருளும். என் வாழ்க்கையில் நான் உம்மைப் பின்பற்றி வாழ எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: