Saturday, March 12, 2016

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஒரு ஊர்ல் ஒரு ராஜா இருந்தான் அவனுக்கு ஒரு மந்திரி இருந்தான் அப்படின்னு வழ வழன்னு பேசாம நேரடியா கதைக்கு வரேன்.


பாவம் செய்வதே சுபாவம் என்று சொல்லுகிற மக்கள் நிறைந்த ஒரு பட்டணம் தான் சொர்க்கபுரி(பெயரில் மட்டும் தான்). அந்த பட்டணத்தில் வாழ்கிறவர்களை பத்தி யாரும் சொல்ல வேண்டாம். ஏனெனில் தினமும் வருகிற செய்தித்தாள்களில் அவர்களின் அன்றாட அநியாயங்களை பக்கத்துக்கு பக்கம் பார்க்கலாம். அவ்வூர் வாசிகள் அவ்வளவு பொல்லாதவர்கள். ஒரு நாள் அந்த நகரின் தபால் அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. என்ன இதுல என்ன விசயம் இருக்கு என்று நீங்க கேள்வி கேக்கிறது கேக்குது. அந்த தபாலை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் அந்த அலுவலகத்துல உள்ள எல்லருமே தலைய பிச்சிக்கிட்டாங்க. அந்த தபாலில் பெறுநர் "மகா கொடிய பாவி" என்று குறிப்பிடப் பட்டு இருந்தது. கடைசியில் அதை யாரிடம் ஒப்படைப்பது என்ற பொறுப்பை அஞ்சல் காரரான(போஸ்ட்மேன்) அற்புதமிடம் ஒப்படைத்தார்கள்.
இப்போ அதை யாரிடம் ஒப்படைப்பது என்று அற்புதம் தலைய பிச்சுகிட்டு யோசித்துக் கொண்டு இருந்தார். பின்பு ஒரு முடிவுக்கு வந்தவராக தன் இருப்பிடத்தை விட்டு எழுந்தார். சரி நமக்கு தெரிந்த மகா பாவிகளை பார்த்து அவர்களிடம் இதை ஒப்படைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவரிடம் துளிர் விட்டதே அதற்குக் காரணம்.

முதலாவது அவர் நேராக சாராயக் கடை நடத்திக் கொண்டுவருபவரும் ஊரில் அமைதி என்பது மருந்துக்கு கூட வந்து விடக் கூடாது என்று நினைத்து அதற்கு என்ன என்ன செய்யணுமோ அத்தனையும் செய்து வருகிற மகாதேவன் (பெயரைப் பாருங்க) என்பவரிடம் போனார். அவரிடம் தான் வந்த நோக்கத்தைக் கூறி தன்னிடமிருந்த பார்சலையும் அற்புதம் அவரிடம் காண்பித்தார். அதிலிருந்த "மகா பாவிக்கு" என்ற மேல் விலாசத்தை பார்த்ததும் மகாதேவன் கோபதேவனாக மாறிவிட்டார். அவர் பேசின பேச்சுகளை கேட்க சகிக்காமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவரிடமிருந்து தலைதெறிக்க அற்புதம் ஓடி வந்தார். முதல் முயற்சியே பயங்கரமான பயத்தை அவரிடம் உண்டு பண்ணிவிட்டது. இனி இதை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த போது தான் அந்த ஊரின் அடுத்த கேடி நம்பர்- 1 கோடிஸ்வரன் நினைவுக்கு வந்தார்.

அவருடைய உண்மையான பெயர் அந்த ஊரில் யாருக்கும் தெரியாது. அவரை எல்லாருமே கேடி என்றுதான் கூப்பிட்டு வந்தாங்க. அவர் காட்டுல பெய்த மழை அவரை கோடிஸ்வரனாக கடந்த தேர்தல் மாற்றிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் பல கட்சிக் கொடிகள். இந்த கோடிஸ்வரன் மகாக் கேடியாக இருந்தாலும் யாரையும் காரணமில்லாம கொல்றதில்லை. எனவே சற்று தெம்புடன் அற்புதம் அவரை பார்க்கச் சென்றார். அவரிடம் விசயத்தைக் கூறி அந்த பார்சலை அவரிடம் காண்பித்தார். அந்த பார்சலில் யாருக்கு வந்திருக்கிறது என்று வாசிக்கும் படி அற்புதத்திடமே அவர் கேட்டார் (அவருக்கு வாசிக்கத் தெரியாது என்பதுதான் உண்மை) "மகா பாவிக்கு" என்று அற்புதம் சொன்ன உடனே கேடிஸ்வரன்... சாரி கோடிஸ்வரனுக்கு கொஞ்சம் கோபம் வந்தது. பின்பு சிரித்த முகத்துடன் இப்படி ஒரு தபாலை யாரு அனுப்பினா என்று கேட்டுவிட்டு சற்று தயங்கியவராக "அற்புதம் நீ நினைக்கிற மாதிரியான ஆளாக நான் இருந்தாலும், நான் இதை இப்ப உன்னிடமிருந்து வாங்கினால் எதிர் கட்சிக் காரங்க என்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க. லஞ்சமா ஏதாவது பெட்டி வாங்கினாலாவது பரவா இல்ல. இந்த 'மகா பாவி" பட்டத்த எல்லாம் வாங்க முடியாது, நீ போய் விடு" என்று சொல்லி விட்டார். வெளியே வந்த அற்புதம் இவர் பரவா இல்லை, அந்த மகாதேவன்தான் படு மோசம் என்று நினைத்துக் கொண்டார்.

மீண்டும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு யாரிடம் கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு பெயர்களும் அவர் நினைவுக்கு வரும் போது அவருக்குத் தன் கல்லறை தான் முன்னால இருக்கிற மாதிரி தோன்றியது.என்ன செய்வதென்றே அவருக்கு தெரிய வில்லை. திடீரென்று அவருக்கு ஒரு உணர்வு வந்தது. உண்மையில் மகா பாவிகள் எல்லாம் அதை ஒத்துகொள்ள முன் வர வில்லை. நாமும் கூட ஒரு பாவிதானே. எத்தனை தடவை மற்றவங்களுக்கு தெரியாம தவறுகள் செய்து உள்ளோம் என்று அவர் நினைத்தார். நானே அந்த "மகா பாவி" என்று பாவித்துக் கொண்டு பார்சலை நாமே பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தார். அது போலவே அவர் தன்னுடைய கையெழுத்தை போட்டு பார்சலை தன் வசமாக எடுத்துக் கொண்டார்.

பார்சலை தன் பெயரிட்டு எடுத்துக் கொண்டவுடனே அதினுள்ளே என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்வதில் அவருக்கு அதிக ஆவல் ஏற்பட்டது. உடனே பார்சல் உறையைக் கிழித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தார். உள்ளே ஒரு "விலையுயர்ந்த பரிசுப் பொருள்" இருந்தது. அத்துடன் ஒரு கடிதமும் இணைக்கப் பட்டிருந்தது. அந்த கடிதத்தில், "நீங்கள் உங்களை 'மகா பாவி' என்று ஒத்துக் கொண்டதால் இந்த பரிசு உங்களுக்கே என்று எழுதப் பட்டு இருந்தது. அதைப் பார்த்தவுடன் ஆச்சரியமும் சந்தோசத்துடனும் அவர் தன் பரிசை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடிப் போய் தான் பெற்ற பரிசை தன் வீட்டார், உற்றார் மற்றும் உறவினர்கள் எல்லாருக்கும் அதை தான் பெற்றுக் கொண்ட விதத்தைக் கூறினார். எல்லாரும் ஆச்சரியப் பட்டு தங்களுக்கு அப்படி ஒரு "பரிசு" கிடைக்க வில்லையே என்று நினைத்தனர்.


நீதிமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
சங்கீதம் 79:9 எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.
சங்கீதம் 25:18 என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
சங்கீதம் 51:9 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.

அன்போ சகல பாவங்களையும் மூடும்.
I யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்

No comments: