Wednesday, September 14, 2016

பழசு ஆனாலும் புதுசு

துள்ளலான இசையில் மூச்சு விடாமல் மூன்றுவரிகளுக்கும் மேல் பாட...

நான் சிறுவனாக இருந்த காலத்தில் அன்று மிகவும் பிரபலமான சினிமா பாடல்களில் ஒன்று, திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் நீண்ட நேரம் மூச்சுவிடாமல் ஒரு சரணத்தைப் பாடிய பாடல் ஆகும். அதைக் கேட்டவர்கள் அனைவருமே தங்களால் முடியாதெனினும் முயன்று பார்த்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, பின்னாட்களில் சம்பந்தப் பட்ட பாடகரே அது மூச்சுவிடாமல் பாடியது போலத் தோன்றினாலும், உண்மை அதுவல்ல என்று சொல்ல கேட்டதாக ஞாபகம். இப்ப எதுக்கு இந்த ஞாபகக் கிளறல்கள் & உளறல்கள் என்று உங்களுக்கு நினைக்கத் தோன்றும்.

வீட்டில் அமர்ந்து பல விசயங்களைப் பற்றி எண்ணி மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கையில், திடீரென ஒரு கீர்த்தனைப் பாடலுக்கு நேராக என் மனம் சென்று என்னையுமறியாமல் பாட, என் மனம் பல நினைவுகளில் மூழ்கிவிட்டது. சரி. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த பாட்டு என்ன என்று சொல்லிவிடுகிறேன். “ஆதித் திருவார்த்தை திவ்விய  அற்புதப் பாலகனாகப் பிறந்தார்” என்ற பாடல்.

இந்தப் பாடலின் அனுபல்லவி மிக வித்தியாசமான முறையில் எழுதவும் இசைக்கவும் பட்டிருக்கும். பாடலைப் பாடிக்கொண்டே, கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் புத்தகத்தில் பாடலை யார் எழுதியது என்று பார்த்த போது, வே. சா எனக் கண்டு, வேதநாயகம் சாஸ்திரியார் எழுதியது என அறிந்து கொண்டேன். இந்தப் பாடலைத் தெரிந்தவர்கள் பாடலைப் பாடிப் பாருங்கள். பாடல் தெரியாதவர்களுக்கு கீழே உதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பாடல் சங்கராபரணம் இராகத்தில் திஸ்ர ஏகதாளத்தில் இருப்பதாக கீர்த்தனை புத்தகம் சொல்கிறது. இப்பாடல் பற்றிய என் நினைவுகள் பல, இங்கே அவற்றில் சில.

                                                        பல்லவி

ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

                                                      அனுபல்லவி

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரிய கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகி,
மின்னுச்சீர் வாசகி , மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம் , தாம் , தன்னர வன்னர
தீம் , தீம் , தீமையகற்றிட
சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட --- ஆதி

சரணங்கள்

1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செங்கோல்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார். --- ஆதி

2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் --- ஆதி

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் --- ஆதி
                                                                                                                       - வே.சா.

அனுபல்லவியில் “உன்னதகஞ்சீர்” என்பதில் துவங்கி “ரஞ்சிதனார்” முடியுமட்டும் மூச்சுவிடாமல் பாடும் வண்ணம் மிக அழகாக இயல்பான இராகத்தில் இப்பாடல் அமைந்திருப்பதைக் கண்டீர்களா!
அது மாத்திரமல்ல, மேற்கத்திய இசையும் கர்நாடக இசையும் மிக நயமாக ஒன்றொடொன்று குலைந்து குழாவி செல்வதையும் காண முடியும்.
“ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ” என்று அர்த்தம் புரியாமல் அல்ல, அர்த்தமே இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், வாத்திய இசைக்கருவி எழுப்பும் சத்தத்தையே பாடல் வரியாக “தாம் தாம் தன்னர வன்னர தீம் தீம் தீமையகற்றிட” எனும் வரிகளில் வேதாகம Theme இருப்பதையும் காண முடிகிறதா. இது கொஞ்சம் ஓவர் என்று உங்களுக்குச் சொல்லத் தோன்றும். ஓவரான ஒன்றையும் சொல்லி விடுகிறேன்.

இந்தப் பாடலை நான் பாடகர்குழுவில் இருக்கும்போது சிறுவயதில் பாடுகையில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வார்த்தை வரும்போது என்னையுமறியாமல் சிரிப்பேன் அல்லது அந்த வார்த்தையைச் சொல்ல மாட்டேன். ஏனெனில் “காதல்” என்ற வார்த்தையே ஒரு மாதிரியான வார்த்தையாக கற்பிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது யோசித்துப் பார்த்தாலும் சிரிப்புதான் வருகிறது.
இப்பாடலைப் பாடும் போதெல்லாம் மூச்சடக்கிப் பாட முயற்சி செய்தும் எப்பொழுதுமே அதில் வெற்றிக்கனி எட்டாக்கனியாகவே இருந்தது. இப்பொழுது அதன் காரணம் என்ன என்று புரிகிறது. சீரான மூச்சுப் பயிற்சி மற்றும் முன் பயிற்சி அப்போது இல்லை.
இந்தப் பாடலில் மற்றுமொரு taboo வார்த்தையாக “ஆதாம் சாதி ஏவினர்” என்ற வார்த்தையை கருதினேன். ஒரு காலத்தில் சாதி என்ற வார்த்தையைச் சொல்வது கூட தவறானதாக இருந்திருக்கிறது என்பது ஒரு நகை முரண். பலர் அவ்வரிகளை “ஓதி” என மாற்றிப் பாடுவர். ஆனால் சாதி என்று வரும்போதுதான் அது பாடலுக்கு பொருள் சேர்க்கிறது. ஏனெனில் வேதாகமத்தில் சாதி என்பது நாம் இப்போது காணும் நாடார், தேவர் போன்ற சாதி அல்ல, அது ஒவ்வொரு நாட்டைக் குறிப்பதாக அல்லவா இருக்கிறது. ஆதாம் மூலமாக அனைவரும் வந்ததையே அந்த பாடல் வரி சொல்கிறது.

இப்பாடல் இணையத்தில் லேட்டஸ்ட் வெர்ஷன் சில கிடைத்தாலும் எனக்கு ஜிக்கி அவர்கள் பாடிய பழைய ஸ்டைல்தான் மிகவும் பிடித்திருக்கிறது. Old is Gold என்று நீங்களும் நினைத்தால் இங்கே வந்து பாடலைக் கேட்கலாம்.

1 comment:

anpu said...

ஆதித் திருவார்த்தை திவ்விய என துவங்கும் ஞான கீர்த்தனை பாடலின் கீழ்கண்ட வரிகளின் அர்த்தம் தெரிந்தவர்கள் தயவுசெய்து ஆதாரத்துடன் சொல்லவும்

உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகி,
மின்னுச்சீர் வாசகி , மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்