Friday, September 16, 2016

அற்புதங்களின் ஆரம்பம் - சகோ. N. ஜீவானந்தம்

நான் இரட்சிக்கப்பட்ட பின்பு காலையிலும், மாலையிலும் வெகுநேரம் ஜெபத்தில் இருந்தேன். வேதம் வாசிக்கவும் எனக்கிருந்த தாகம் சொல்லி முடியாது. அப்படியே ஆத்துமாக்களிடம் பேசி ஆதாயம் பண்ணினேன். ஒரு நபர்  கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் எனக்குண்டான மகிழ்ச்சி அளவில்லாதது. கர்த்தருடைய ஊழியத்திற்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் தாராளமாக தந்துவிடவும் தேவன் உதவினார். மாலை நேரங்கள், இரவு நேரங்களில் என் நண்பர்களுடன் கூடி வெகுநேரம் ஜெபித்து வந்தேன்.

முதல் முறையாக, பல்லாவரம் என்ற இடத்திற்கருகில் உள்ள பம்மல் என்ற இடத்திற்கு என் நண்பர்களுடன் சுவிசேஷ ஊழியத்திற்குச் சென்றேன். செய்தி கொடுத்தவர் என்னை சாட்சி பகர அழைத்தார். ஏதோ அங்கேயும் உளறினேன். கை கால்கள் நடுங்க, கண்ணீர் வடிய சாட்சி கூறின நினைவு உண்டு. வியாதியுள்ளோர் வந்து ஜெபிக்கும்படி அறிவித்தனர். முன் பின் அனுபவம் இல்லை. ஒரு தாய் தன் பிள்ளைக்கு, சீதபேதி என்று கொண்டு வந்தார்கள். தலையில் கைவைத்து ஜெபிக்கத் தெரியாது. ஆகவே குழந்தையை வாங்கி வானத்திற்கு நேரே உயர்த்தி கண்ணீருடன் ஜெபித்தேன். கூட்டத்தின் நடுவில் பிசாசு பிடித்திருந்த ஒரு இளம் பெண் கதறி அலற துவங்கினாள். எல்லோரும் பேய்! பேய் என்று கூக்குரலிட்டனர். இதுவே முதல்முறை பிசாசு பிடித்தவருக்கு ஜெபித்த அனுபவம். எனக்கு என்ன செய்வதென்று விளங்காத நிலையில், அப்பெண்ணுக்குள் இருந்த அசுத்த ஆவிகள் பேசத்துவங்கின. மூன்று பேர் உள்ளே இருப்பதாகவும், அப்பெண்ணுக்கு அவைகள் இழைத்த தீங்குகள், தந்த நோய்கள் எப்போது வந்தன என்று சொல்லி முடித்தன.
ஏன் இப்போது அழுகிறாய்? என்று நான் வினவியபோது, இவள் இயேசுவை ஏற்றுக் கொண்டு விட்டாளே! எங்களால் இருக்க முடியவில்லையே! என்று அலறினாள்.

இப்போது எனக்குக் கொஞ்சம் தெளிவு பிறந்தது. இப்பெண் தன் இதயத்தில் இயேசுவை இரடச்கராக ஏற்றதால், இவளுக்குள்ளே இருந்த பேய்களால் இருக்க முடியவில்லை என்றறிந்து கொண்டேன். உடனே இயேசுவின் நாமத்தில் வெளியேறும்படி கட்டளையிட்டேன். மூன்றும் ஒவ்வொன்றாக வெளியேறின. அப்பெண் பரிபூரண சுகமடைந்தாள். அல்லேலூயா! அவருக்கே மகிமை.

இதன் பின் பலருடைய வியாதியை அதே இடத்தில் சுகமாக்கினார். இன்றுவரை தேவன் தமது கிருபையை என்னை விட்டு விலக்காமல் காத்து வருகிறார். அவருக்கே மகிமை. இப்படித்தான் என் வியாதி குணமாக்கும் ஊழியங்கள் துவங்கியது.

1960 ஆம் ஆண்டு, மாதந் தெரிய வில்லை. நானும் என் சித்திரக்காரர் நண்பர் ஒருவரும் சேர்ந்து, கோடம்பாக்கம் ரயிலடியில் அருகில் உள்ள வீட்டில் குடிபுகுந்தோம். அந்த நண்பர் நல்ல சாட்சியுடன் விளங்கிய காலம். எப்போதும் ஜெபம் தான். கண்ணீருடன் ஜெபித்து வந்தோம். அந்தவீடு அந்நாட்களில் யாரும் குடிபுகாத வீடாக இருந்தது. உள்ளே நுழைந்தாலே சுகவீனமடைவார்களாம். எல்லாம் இடிந்து கிடந்தது. எல்லாப் பூச்சிகளுக்கும் உறைவிடம். சுற்றிலும் சேறும் சகதியும், இரவிலும் பகலிலும் கொசுக்கூட்டம் ஆளுகை செய்தன. ஆனால் ஒன்று எந்த நோயும் எங்களை அணுகவில்லை. இங்கே எத்தனையோ இரவுகள் பட்டினி, ஆனால் கடன் தொல்லை இல்லை. ஆனால் என் வருமானம் போதவில்லை. தினமும் கர்த்தருக்கு சாட்சி பகர தவறவில்லை. அந்நாட்களில் ரூபாய் 50க்கு விலையுள்ள பழைய சைக்கிள் எனக்கு பேருதவியாக இருந்தது.

ஒரு நாள் சரியான தேதி நினைவில்லை. ஞாயிறு ஆராதனைக்கு என் நண்பர் பிரசங்கிக்கப் புறப்பட்டார். அவருக்குத் துணையாக நானும் சென்றேன். அது பழைய அயன்புரம் பாப்டிஸ்ட் சபை. மறைந்து போன என் ஆத்தும நண்பர் பாஸ்டர் D. ஆசீர்வாதம் போதகராக இருந்தார். நாங்கள் போனபோது அவர் கிளைச்சபைக்குப் போயிருந்தார். ஆராதனையை நடத்திய மூப்பர் என்னை பத்து நிமிடங்கள் சாட்சி கூறும்படி கேட்டுக் கொண்டார்.  அன்று தேவ ஆவியானவர் வல்லமையுடன் கிரியை செய்தார். இந்த சாட்சியே எனக்கும் அந்த போதகருக்கும் மிக்க சிநேகத்தை உண்டாக்கினது.

அடுத்த வாரம் என்னை பிரசங்கிக்கும்படி அழைத்தனர். எனகு என்ன பிரசங்கிப்பது என்று தெரியாது. என் நண்பரைக் கேட்டேன். கர்த்தர் தருவார், ஜெபி என்றார். மூன்று தினங்கள் அழுது உபவாசத்துடன் ஜெபித்தேன். கர்த்தாவே செய்தியை அனுப்பும் என்று கதறினேன். துண்டு பிரதி ஒன்றை படித்து விட்டு, இரண்டாம் வருகையைப் பற்றிப் பிரசங்கித்தேன். ஆம்! ஏதோ சத்தமிட்டேன். பரிசுத்தாவியானவர் இறங்கினார். இதுவே நானும் ஒரு பிரசங்கிதான் என்று மக்கள் தீர்மானித்தனர். முதல் நடந்த நற்செய்தி கூட்டங்களைக் குறித்து பின்பு எழுதுவேன். அல்லேலூயா!

(சகோ. ஜீவானந்தம் அவர்கள், “நினைவில் வந்தவை...” என்ற தலைப்பில் வெளியிட்ட புத்தகமானது, மகிழ்ச்சி மாத இதழில் கர்த்தர் அவருடைய 36 ஆண்டுகால ஊழியத்தில் நடத்தி வந்ததை விளக்கி அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். அப்புத்தகத்தில் இருந்து ஒரு அத்தியாயத்தை மட்டும் இங்கே பதிவிட்டிருக்கிறேன். )

No comments: