கிறிஸ்து வராதிருந்தால் என்ற தலைப்பிட்ட ஒரு கிறிஸ்மஸ் கார்டை கண்ட போதகர் சிந்தனையில் மூழ்கினார். அப்படியே தூங்கியும் விட்டார் (ரொம்ப சிந்தித்தால் இது நடப்பது வாடிக்கைதானே!) அப்போது.............
ஆலயத்திற்கு செல்ல புறப்பட்டார். தெருக்களைக் கடந்து சென்றார். ஆலயத்தைக் காணமுடியவில்லை. வழி தவறிவிட்டோமோ என்று பதறிப் போய் அங்குமிங்கும் அலைந்தார். ஆலயமில்லை. ஆலயமில்லையே என்று எண்ணினார். துக்கம் தொண்டையை அடைத்தது.
வீட்டிற்கு திரும்பினார். நூலகத்திற்குள் நுழைந்தார். இரடசகராகிய இயேசுவைக் குறித்த
புத்தகங்களைத்தேடினார். ஒரு புத்தகத்தையும் காணோம். மற்ற ஏதேதோ புத்தகங்கள் நிறைந்திருந்தது. ஏமாற்றமடைந்தார். ஒன்றுமே புரியாமல் திகைத்து நின்றார்.
வாசல்கதவு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தார். ஐயா எங்க அம்மா சாகும் தருவாயில் இருக்காங்க, சீக்கிரம் வந்து பாருங்க என்று ஒரு சிறுமி அழுதுகொண்டே சொன்னாள். துரிதமாக சிறுமியின் கையை பிடித்துக் கொண்டு அவளுடன் புறப்பட்டு சென்றார். அந்தத்தாயைப் பார்த்தார். அம்மா உங்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியை ஆண்டவர் தருவார் என்று சொல்லி வேதாகனத்தைப் புரட்டினார். மல்கியா கடைசிப் புத்தகமாயிருந்தது. அதற்குப் பின் வேதப்புத்தகத்தில் ஒன்றுமில்லை. சுவிசேஷத்தைக் காணோம். நிருபங்களைக் காணோம். ஜீவனைக் கொடுத்து இரட்சிப்பை அருளிய அவருடைய சுவிசேஷங்களைக் காணோமே! வாயில் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை. பதறினார்.
மறு நாள் அந்த தாயார் மரித்துவிட்ட செய்தியறிந்து அடக்க ஆராதனை நடத்திவைக்க சென்றார். சவப்பெட்டியின் அருகில் நின்று அவர் செய்தி கொடுக்கும் வேளை வந்தது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. கிறிஸ்து இல்லாததால் மகிமையான உயிர்த்தெழுதலைக் குறித்த நம்பிக்கை வரவில்லை. ஆகவே பரலோகத்தின் நித்திய வாழ்வைக் குறித்து பேச முடிய வில்லை. மண்ணுக்கு மண்ணாக ஒப்புக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆண்டவரே நீர் பிறக்கவில்லையோ என்று தன்னையும் அறியாமல் கதறி அழுதார். கட்டுப் படுத்த முடியாமல் கலறையில் சாய்ந்து அழுதார். திடீரென விழித்து எழுந்தார். கண்டது கனவுதான் என்று உணர்ந்தார். ஆண்டவரே நீர் வராதிருந்தால் எனக்கு இரட்சிப்பு ஏது? உயிர்த்தெழுதலின் நம்பிக்கை ஏது? நித்தியத்தில் உம்மோடிருப்போம் என்ற நம்பிக்கை ஏது? என்று எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். O come let us adore Him....O come let us adore Him Christ the Lord. என்ற இனிமையான பாடலின் ஒலி ஆலயத்திலிருந்து இனிமையாக ஒலிக்க ஆரம்பித்து செவிக்கின்பமாக தொனிக்க ஆரம்பித்தது.
நன்றி: பாலைவன நீரோடைகள்
No comments:
Post a Comment