Saturday, April 11, 2009
தன் பிழைகளை உணருகிறவன் யார்?
அவர் மிகவும் பெரிய ஓவியர் என்ற புகழைப் பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மிகவும் பிரமாண்டமான அழகான ஓவியம் ஒன்றை வரைந்து ஊரின் மையப்பகுதியில் வைத்து அந்த ஓவியத்துக்கருகில் இந்த ஓவியத்தில் பிழை ஏதும் இருந்தால் பார்வையாளர்கள் அந்த இடத்தை வட்டமிடுங்கள் என்ற ஒரு சிறிய குறிப்பையும் வைத்தார். பின்பு அவர் தனது வீட்டிற்கு திரும்பினார். அடுத்த நாள் யாராவது தனது ஓவியத்தை குறை கூறியிருக்கிறார்களா என்று பார்க்க ஆவலுடன் விரைந்தார். வந்து கண்டு மயங்காத குறையாய் அதிர்ந்து போனார். அப்படி நடந்தது என்ன?
வர் வந்து பார்த்த போது அந்த ஓவியத்தில் ஒரு இடம் பாக்கியில்லாமல் எல்லா இடத்திலும் வட்டமிடப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பிழைகளைச் வட்டமிட்டு வட்டமிட்டு மொத்தத்தில் அந்தப் படத்தின் அழகே காணாமல் போய் விட்டது. மொத்தத்தில் வட்ட வட்டக் குறிகள் தான் கண்ணுக்கு தெரிந்தது. என்னச் செய்யலாம் என்று யோசித்த அந்த ஓவியர் பொறுமையாக அந்த வட்டக் குறிகள் எல்லாவற்றையும் அழித்த பின் இந்த ஓவியத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதை திருத்தவும் என்று எழுதிவைத்தார். பின்னர் வீடு திரும்பிய அவர் வழக்கம் போல அடுத்த நாள் வந்து பார்த்தபோது அவர் ஆச்சரியமடைந்தார். ஏனெனில் முந்தின நாள் பிழைகளைச் சுட்டிக் காட்டினவர்கள் எவரும் இன்று அந்த பிழைகளை திருத்த முன்வரவில்லை. இதுதான் பொதுவாக மனித குணாதிசயமாக இருக்கிறது.
ஒருவரின் குறையைக் கூற வேண்டுமாயின் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சொல்பவர்கள் அதிகம். ஆனால் அதே குறையை திருத்த முயல்பவர் மிக மிக சொறபமே. இன்னும் சொல்லப் போனால் எவருமிலர். பொதுவாக மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய பொன்மொழி என்னவெனில்......
நீ ஒரு விரலால் மற்றவர்களைச் சுட்டிக் காட்டும் போது
உன் விரல்கள் மூன்று உன்னைச் சுட்டிக் காட்டுகிறது என்பதை மறந்துவிடாதே! (கொஞ்சம் ட்ரை பண்ணிப் பாருங்கோ)
இன்று பொதுவாக நண்பர்கள் அல்லது யாரையாவது சந்தித்து கொஞ்ச நேரம் பேச ஆரம்பித்தால் தானாகவே பேச்சு எவருடைய குறையையாவது மையப்படுத்தி தொடர ஆரம்பித்துவிடுவது வழக்கமாகிவிட்டது. கிறிஸ்தவர்கள் நடுவில் இது ரொம்ப ரொம்ப அதிகம். அந்த சபை இந்த சபை என்று டினாமினேஷன் குழப்பங்களும் ஊழியர்களை மட்டம் தட்டி அவர்களைப் பேசுவதும் அல்லது சபை பழக்க வழக்க மாறுபாடுகளை பேசுவதும் தவிர்க்கமுடியா டாபிக்குகளாக கிறிஸ்தவர்களிடம் உள்ளது. இதற்கு உதாரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன். நானும் கூட நாம் மற்றவர்களின் தவறுகளைத்தானே சுட்டிக் காட்டுகிறோம் இதில் என்ன தவறு என்று நினைத்திருக்கிறேன். அப்படிப் பட்ட தருணங்களில் எல்லாம் எனது நினைவுக்கு வரும் திருவசனம் உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை( அதாவது உனது மலையளவு தவறை) உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன? (மத்தேயு.7:3-5).
அந்த ஊருக்கு ஒரு பெரிய மகான் ஒருவர் வந்திருந்தார். தனது சேட்டைக் கார மகனை அவரிடம் கூட்டிச் சென்று அறிவுரை கேட்க வைக்கலாம் என்று நினைத்த அந்த தாயார் தனது மகனை அவரிடம் கூட்டிச் சென்றார். அந்த மகான் முன்பாக பெரிய கூட்டம் நின்றது. தனது முறை வந்த போது அவள் அந்த மகானிடம்
"ஐயா எனது மகன் ரொம்ப சேட்டை பண்ணுகிறான். எப்போது பார்த்தாலும் இனிப்பு சாப்பிடுகிறான். நீங்கதான் பெரிய மனசு பண்ணி இவனுக்கு அறிவுறை கூறி திருந்தவும் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தவும் வழி சொல்லனும்" என்று கூறினாள்.
பொறுமையாக அதைக் கேட்ட அந்த மகான் கண்களை மூடி கொஞ்சம் யோசித்தார். பின்பு அந்த தாயாரிடம் " அம்மா நாளைக்கு உன் மகனை என்னிடம் கூட்டிக் கொண்டு வா. நான் அவனுக்கு அறிவுரை கூறுகிறேன், அவன் திருந்திவிடுவான் என்று கூறி அனுப்பினார். குழப்பத்துடன் வீடு திரும்பிய அந்த தாயார் வழி நெடுகிலும் ஏன் அந்த மகான் என்னை நாளை வரச் சொன்னார். நான் கேட்டது ரொம்ப எளிமையான காரியம் தானே என்ற அங்கலாய்ப்புடன் சென்றாள்.
அடுத்த நாள் அந்த மகான் முன்பு தனது மகனைக் கூட்டிக் கொண்டு நின்றாள். அப்போது அவளின் மனை அருகில் அழைத்த அம்மகான்
"தம்பி நீ ரொம்ப நல்லப் பையனாக இருக்கணும். இனிப்புகளை எல்லாம் அதிகம் சாப்பிடாதே! அது உடலுக்கு தீமையானது" என்று கூறி பலவாறு அறிவுரை கூறினார்.
இதைக் கேட்ட அந்த தாய் அடக்க முடியாமல்" ஐயா நீங்கள் இதை நேற்றே கூறியிருக்கலாமே! ஏன் இன்று என்னை வரச் சொன்னீர்கள்? என்று கேட்டாள். அப்போது அம்மகான் சிரித்துக் கொண்டே" அம்மா நானும் நேற்று வரை அதிகம் இனிப்பு சாப்பிடுகிறவனாய் இருந்தேன். அப்படிப் பட்ட நிலையில் நான் இவனுக்கு எப்படி நீ இனிப்பு சாப்பிடாதே என்று அறிவுரை கூற முடியும்? நான் முதலில் அதை நிறுத்த வேண்டுமே. ஆகையால் தான் நான் அப்பழக்கத்தை விட்ட பின் இன்று இவனுக்கு இனிப்பு சாப்பிடாதே என்று அறிவுரை கூற முடிந்தது என்று சொன்னார். இப்படிப்பட்டவர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
நான் இப்போது சொல்லப் போகிற நபர் ஒரு பெரிய ஊழியர். அவருடைய பிரதான ஊழியம் கிறிஸ்தவ சபைகளில் காணப்படும் குறைகளை எழுதுவதுதான். அவருடைய எழுத்துக்கள் பலருக்கும் (எனக்கும்தான்) பிரயோஜனமாக இருந்திருக்கின்றன. ஆனால் அவருடைய வாழ்வில் அவர் அடிக்கடி சுட்டிக் காட்டும் ஒரு பிழை நடந்து விட்டது. உடனே மக்கள் சும்மா இருப்பார்களா? என்ன ஐயா இது! உங்க வீட்டுலயே இப்படி ஆயிடுச்சே? என்று கேள்விக் குறி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதில் நேர்மையானதாக இல்லை. மற்றவர்களால்தான் அவ்வாறு நேர்ந்துவிட்டது. எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சால்ஜாப்பு வாங்கினார். நான் அவரை குறை கூறி இதை எழுதவில்லை. தாவீதின் சங்கீத வரிகளையே நினைவு கூறுகிறேன்.
தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேன்பை விலக்கிக் காரும்.அவைகள் என்னை ஆண்டு கொள்ள ஒட்டாதிரும். அப்பொழுது நான் உத்தமனாகி பெஉம் பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன். என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே! என் வாயின் வார்த்தைகளும் என் இருதயத்தின் தியானமும் உமது சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக (சங்கீதம்.19:12- 14)
ஆகவே தான் ஆண்டவர் இயேசு மற்றவர்களி குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள் என்று கூறினார். ஏனெனில் நீங்கள் எந்த அளவினால் குற்றவாளிகள் என்று தீர்க்கிறீர்களோ அந்த அளவின்படியே இம்மையிலும் மறுமையிலும் நீங்களும் தீர்க்கப்படுவீர்கள் என்றார். நாம் இந்த தலைப்பில் பேச ஆரம்பித்தால் நிறைய பேசலாம். எனினும் சுருக்கம் கருதி ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
விபசாரத்தில் கையும் களவுமாக பிடிபட்ட ஒரு பெண்ணை நியாயந்தீர்க்கும் படி இயேசு முன்பதாக யூதர்கள் அவளைக் கொண்டு வந்து நிறுத்தினர். யூதர்களுன் நியாயம் என்னவெனில் அப்படிப்பட்ட பெண்ணை கல் எறிந்து கொல்வதுதான். மன்னிப்பே கிடையாது. எல்லாருடைய கண்களும் இயேசுவின் வாய்மொழிக்காக காத்திருந்தன. இயேசுவோ ஒரே ஒரு வார்த்தையை மட்டும் கூறி தனது தலியை குனிந்து தரையில் எழுதலானார். அவர் கூறியது, உங்களில் பாவமில்லாதவன் முதலாவது இவள் மேல் கல்லெறியட்டும். எல்லாரும் ஒருவர் முகத்தை பார்த்தனர். எல்லாருடைய இருதயங்களும் குத்தப்பட்டது. ஆகவே அவர்கள் தலைகளைக் குனிந்து கொண்டு முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு கற்களை கீழே எறிந்து விட்டு வந்த வழியே திரும்பினர். கொஞ்ச நேரம் கழித்து இயேசு தலைதை தூக்கிப் பார்த்த போது அங்கே அந்தப் பெண்ணைத்தவிர ஒருவரும் காணப்படவில்லை. ஒரு பாவமும் செய்யாத இயேசு (யோவான்.8:46) அவளைப் பார்த்து நானும் உன்னை குற்றவாளி என்று தீர்க்கிறதில்லை. இனிமேல் பாவம் செய்யாதே போ என்று கூறி அவளை அனுப்பினார். (யோவான்.8:2௧1)
மேலே சொல்லப்பட்ட சம்பவம் கட்டுக் கதையல்ல. நாம் கடைபிடிக்கவேண்டிய உண்மைச் சம்பவம். இயேசுதாமே மனிதர்களாகிய நமக்கு நல்முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். நாம் மற்றவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்ட அரசியல் பண்ணிக் கொண்டிருக்க வில்லை. நாம் நமது வாழ்க்கையிலுள்ள பிழைகளை உணர்ந்து அதை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு சீர் பொருந்துவோமாகில் நாம் பாக்கியசாலிகளாயிருப்போம். நமக்குதவ இயேசுண்டு. நாம் இப்படி ஜெபம் செய்யலாமா?
தேவனே என்ன்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே நடத்தும். ஆமென்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment