Saturday, January 1, 2022

கர்த்தரின் இரட்டிப்பான ஆசீர்வாதம் பெற வாருங்கள்

வாசிக்க:  சகரியா 9-10; நீதிமொழிகள் 28; வெளிப்படுத்தின விசேஷம் 18

வேத வசனம்:  சகரியா 9: 12. நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.

கவனித்தல்: பண்டைய காலத்தில், மக்கள் தங்கள் எதிரிகளையும் மற்றும் திரும்பத் திரும்ப தவறு செய்கிறவர்களையும் தண்ணீரற்ற வறண்ட மற்றும் பாழான கிணற்றில் அல்லது குழியில் வீசி  (உதாரணம்: யோசேப்பு, எரேமியா) தண்டிப்பார்கள். தண்ணீரற்ற குழிக்கொப்பான நிலையில் வாழும்படி கட்டாயப்படுத்தப் பட்ட நிலையில் தேவ ஜனங்கள் சிறைக்கைதிகளாக  இருந்த நிலைமையைப் பற்றி நாம் இங்கு வாசிக்கிறோம். அவர்கள் நம்பிக்கையின்றி, தேசத்தில் உயிர்தப்பி வாழ்வதற்கான உதவியின்றி இருந்தனர். ஆனால், தேவன் அவர்களை விடுவிப்பேன் என வாக்குப் பண்ணினார். தேவன் தம் ஜனங்களுடனான இரத்தத்தினாலாகிய உடன்படிக்கையை (யாத்.24:6-8) நினைவு கூர்கிறார்.  தேவன் தம் ஜனங்களை விடுவிக்கும்போது, அவர்கள் தன்னிடம் திரும்ப வேண்டும் என தேவன் அழைக்கிறார். நம் தேவன் தம் ஜனங்களுக்கான உறுதியான கோட்டை ஆவார். அவர் நம்பிக்கையில்லாத சிறையிருப்புவாசிகளை நம்பிக்கையுடைய சிறைகளே என அழைக்கிறார். ”எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம்” என இஸ்ரவேலர்கள் கூறினர் (எசேக்.37:!1). அவர்கள் தம்மிடம் திரும்ப வரும்போது தன்னிடம் நம்பிக்கையை மக்கள் கண்டு கொள்ள முடியும் என தேவன் சொல்கிறார்.  தன்னிடம் வருகிறவர்களுக்கு இரட்டிப்பான நன்மையைத் தருவதாக தேவன் வாக்குப் பண்ணி இருக்கிறார். தன் ஜனங்கள் எதிரியிடம் இழந்தவைகளை இரண்டத்தனையாக தருவேன் என்று தேவன் வாக்குப் பண்ணுகிறார்.

மேசியாவே இஸ்ரவேலரனைத்திற்கும், எல்லா மக்களுக்கும் நம்பிக்கையாக இருக்கிறார். சிலுவையில் தம் தியாக பலியின் மூலமாக, கர்த்தராகிய இயேசு அனைவரையும் இரட்சிப்பதற்கு இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையை செய்திருக்கிறார். அவர் அனைவரையும் தன்னிடம் வரும்படி அழைத்து, அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் கொடுக்கிறார் (மத்.11:28-30). ”உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்” என மேசியாவாகிய இயேசு வாக்குப் பண்ணுகிறார் (ஏசாயா 61:7).  நம் தற்போதையை சூழ்நிலை, காரியங்கள், மற்றும் நம்மைச் சுற்றிலும் இருக்கிறவர்கள் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தராமல் போகலாம். இஸ்ரவேலர்கள் அப்படிப்பட்ட ஒரு நிலையிலேயே இருந்தனர். ஆனால், நம் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், “இன்றைக்கே” நன்மையை தருவேன் என தேவன் சொல்கிறார்.  தாகமுள்ள அனைவரும் தம்மிடம் வந்து தாகத்தையும் பசியையும் “பணமுமின்றி விலையுமின்றி” தீர்த்துக் கொள்ளும்படி தேவன் அழைக்கிறார் (ஏசாயா 55:1-3). ”நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” என்று இயேசு தன்னிடம் வந்த சமாரியப் பெண்ணிடம் கூறினார் (யோவான் 4:14). தேவனுடைய விடுதலை, அவருக்குள் பாதுகாப்பாக வாழ்வதற்கான அழைப்பு, மற்றும் இழந்து போனவைகளை திரும்பவும் பெறுவதற்கான தேவனுடைய வாக்குத்தத்தம் ஆகியவை நம் முன்பாக இருக்கின்றன. நாம் விசுவாசித்து தேவனிடம் வரும்போது, அவர் தம் வார்த்தையை நிறைவேற்றுகிறார். தேவனின் இப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை  யார் தான் அசட்டை செய்ய முடியும்!

பயன்பாடு:  நான் சரீர மற்றும் ஆவிக்குரிய வறட்சியை எதிர்கொள்ள நேரிடும்போது, நான் தேவனிடம் வர முடியும். அவரே என் தேவைகள் அனைத்தையும் திருப்திப்படுத்த முடியும்.  நான் என் முன் இருக்கிற பிரச்சனைகள் அல்லது கவலைகள் எவ்வளவு பெரிது என்று பார்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக, என் தேவன் எவ்வளவு பெரியவர், வல்லமையுள்ளவர் என்பதை நான் பார்க்க வேண்டும்.  நான் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக மட்டுமல்ல, ஒரு அன்பின் உடன்படிக்கை உறவுக்காக நான் தேவனிடம் வருகிறேன்.  நான் தொடர்ந்து அவருடன் உறவாடுகையில் அவரைப் பற்றி நான் ஒவ்வொருநாளும் அதிகமதிகமாக அறிந்து கொள்கிறேன். நம்புகிறதற்கு ஏதுவில்லாத சூழ்நிலையிலும் தேவன் எனக்கு நம்பிக்கையளிக்கிறார். அவர் தன் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதற்கு ஒரு போதும் தவறுவதில்லை.

 ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, இன்று நீர் தருகிற நம்பிக்கை மற்றும் வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, என் மீதான உம் அன்பிற்காகவும் நீர் எனக்குத் தந்திருக்கிற வாக்குத்தத்தங்களை   நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராக இருப்பதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, இன்று நான் தேவனுடைய வார்த்தையை நினைவு கூரவும், என்றென்றைக்கும் தேவ அன்பில் நிலைத்திருக்கவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 361

No comments: