Friday, January 7, 2022

இயேசு சீக்கிரம் வரப்போகிறார்! மாரநாதா!

வாசிக்க:  மல்கியா 3-4; வெளிப்படுத்தின விசேஷம் 22

வேத வசனம்:  வெளிப்படுத்தல் 22: 7. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார் (இயேசு).

கவனித்தல்: ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமர் ஒரு இடத்திற்கு வரும்போது, அவர்கள் வருவதற்கு முன்னதாக, விரும்பத்தகாத அல்லது பாதுகாப்பு குறைவு சம்பந்தமாக ஏதேனும் நடந்துவிடாதபடிக்கு மிகவும் கவனமாக அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் ஆயத்த ஏற்பாடுகள் செய்யப்படும். உரிய நேரத்தில், அதிகாரிகள் தலைவர்களின் வருகை பற்றி மக்களுக்கு அறிவிப்பார்கள். பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டின் கடைசி வசனங்கள் மேசியாவின் வருகையைப் பற்றி தீர்க்கதரிசனமாகக் கூறுகின்றன. மல்கியா தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையை நினைவு கூர்ந்து, தேவனிடம் திரும்பும்படி ஜனங்களை அழைக்கிறார். வெளி.22:7இல், அப்போஸ்தலனாகிய யோவான் நாம் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதற்கு நம் கவனத்தைத் திருப்பி, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய நம்மை உற்சாகப் படுத்துகிறார். இங்கே, தங்கள் வாழ்வில் தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று இயேசு சொல்கிறார்.

வெளிப்படுத்தல் 22இல், ”சீக்கிரமாய் வருகிறேன்” என்று இயேசு மூன்று முறை கூறுகிறார் (வ.7, 17, 20). இது இயேசுவின் இரண்டாம் வருகையானது, வேதம் திரும்பத் திரும்பக் கூறுவது போல, மிகவும் நிச்சயமான ஒன்று என்பதை குறிக்கிறது. வெளிப்படுத்தல் 22:7ம் வசனம் வெறும் தீர்க்கதரிசன அறிவிப்பு மட்டுமல்ல.  இயேசுவை விசுவாசித்து, ஆவலுடன் அவருடைய வருகையை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான வாக்குத்தத்தமும் ஆகும்.  இயேசுவின் பிறப்பு, ஊழியம், சிலுவை மரணம், மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவை இயேசுவின் வாழ்க்கையில் நிறைவேறின. அது போல, இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனங்களும் இன்று உலகில் நிறைவேறி வருகிறதை நாம் காண்கிறோம். முதலாவதாக, இயேசு மனிதனுக்கும் தேவனுக்கும் இடையேயான உறவைப் புதுப்பித்து சிலுவையில் சிந்தின இரத்தத்தால் சமாதானத்தை உண்டு பண்ணும் இரட்சகராக வந்தார். அவர் இராஜாதி ராஜாவாக பூமியை நியாயந்தீர்க்கவும் உண்மையுள்ள விசுவாசிகளுக்கு பரிசளிக்கவும் மறுபடியும் வருவார்.

ஒவ்வொரு நாளுக்கான, வாரத்திற்கான, மாதத்திற்கான, மற்றும் வருடத்திற்கான வாக்குத்தத்த வசனத்தை வாசிக்க, கேட்க விரும்புகிற அனேக கிறிஸ்தவர்களை நாம் காண்கிறோம். ”நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” என்று வேதம் கூறுகிறது (யாக்.1:22). வேதாகமத்தில் ஆயிரக்கணக்கான வாக்குத்தத்தங்கள் உண்டு. ”தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே” ( 2 கொரி.1:20).  தங்களுடைய வாழ்வில் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கான ஆசீர்வாதங்கள் பற்றி அனேக வசனங்களை வேதாகமத்தில் நாம் வாசிக்கிறோம். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து அதற்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கானது ஆகும். இந்த கறைபட்ட உலகில், தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றபடி வாழ்வதற்கு நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், இயேசு சீக்கிரம் வரப் போகிறார்.

பயன்பாடு:  உலக ஆட்சியாளர்கள் வருகையில், அவர்களுடைய ஊழியக்காரர்கள் அவர்களுக்காக சகல ஆயத்தங்களையும் செய்வார்கள். ஆனால் இயேசுவோ, தம் வருகைக்கு முன்பாக, தம் சீடர்களுக்கு ஒரு இடத்தை  ஆயத்தம் பண்ணுகிறார் (யோவான் 14:1-3). கிறிஸ்துவின் வருகையும் சகல மனிதருக்கும் நற்செய்தியை அறிவித்தலும் ஒன்றோடொன்று தொடர்புடையது ஆகும் (மத்.24:14). அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற இயேசுவின் மாபெரும் கட்டளையை நிறைவேற்றுவதில் எனக்கும் பங்கும் பொறுப்பும் இருக்கிறது (மத்.28:18-20).  மனிதர்கள் இன்று சந்திக்கும் பல சவாலான கேள்விகளுக்கு இயேசுவின் சுவிசேஷம் பதிலளிக்கிறது.  நான் என் வாழ்வில் இயேசுவுக்கு உண்மையாக இருந்து, சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் திருவசனத்தை கவனத்துடன் பிரசங்கிக்க இருக்க வேண்டும். இயேசுவின் வருகை சமீபம். ”ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்” (வெளி.22:20).

 ஜெபம் தந்தையாகிய தெய்வமே, வேதாமகத்தில் நீர் எனக்குத் தந்திருக்கிற அனைத்து வாக்குத்தத்தங்களுக்காகவும் உமக்கு நன்றி. ஒருபோதும் மாறாத கர்த்தராகிய இயேசுவே, உம்மில் நிலைத்திருக்கவும், உம் முன்மாதிரியை உண்மையுடன் பின்பற்றவும் எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவின் சாட்சியாக இருக்க உம் பலம் எனக்குத் தேவை. பெந்தெகொஸ்தே நாளில் சீடர்களைப் பலப்படுத்தினது போல, இன்றும் என்றும் தேவனுடைய மகிமைக்காக நான் வாழ என்னை நிரப்பியருளும். மாரநாதா! ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 365

1 comment:

admin said...

Want to join a highly spiritual Tamil Christian fellowship group in whatsup? Join us
https://chat.whatsapp.com/BWM6twKXfC8LYsvTvMkzP0