Tuesday, January 4, 2022

தேவனுக்கு பயப்படுங்கள், வேறு எதற்கும் பயப்படத் தேவை இல்லை

வாசிக்க:  சகரியா 11-12; நீதிமொழிகள் 29; வெளிப்படுத்தின விசேஷம் 19

வேத வசனம்:  நீதிமொழிகள் 29: 25. மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

கவனித்தல்:   ஆபத்துகளை அல்லது பயமுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது மனிதர்கள் பயத்தை வெளிப்படுத்துகிறார்கள். மனிதன் பிறக்கும்போதே பயத்துடன் பிறக்கிறான் என்று சிலர் சொல்கிறார்கள். இன்றைய உலகில்,  நோய்கள், நிதி நிலைமைகள், அரசியல் காரணங்கள், தீவிரவாதம் போன்ற பல காரணங்களுக்காக நம் சமுதாயமானது பயத்தினால் பீடிக்கப்பட்டிருக்கிறது. நவீன விஞ்ஞானம் பலவிதமான பயங்களையும், பயத்தினால் உண்டாகும் நோய்களையும் பற்றி  நமக்குக் கூறுகிறது. பரிசுத்த வேதாகமம் இரண்டு விதமான பயங்களைப் பற்றிக் கூறுகிறது: மனிதனுக்கு பயப்படும் பயம் மற்றும் தேவனுக்குப் பயப்படுதல். நம் சமூகத்தில், குறிப்பாக இந்தியாவில், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ அல்லது என்ன சொல்வார்களோ என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களுக்காக பல பழக்க வழக்கங்களை  மற்றும் நடைமுறைகளை மக்கள் பின்பற்றுகிறதை  நாம் பார்க்கிறோம். ஆனால் வேதாகமமோ, “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்” என்று கூறுகிறது.

அனேக சபைகளில், மனிதரைப் பற்றிய பயமானது பிரசங்கங்களையும், கிறிஸ்தவ நற்பண்புகள் மற்றும் நடைமுறைகளையும் எப்படி பாதிக்கிறது என்பதை நாம்  காண்பது மிகவும் வருந்தக் தக்க விஷயம் ஆகும்.  மனிதரைப் பற்றிய பயமானது நம் கிறிஸ்தவ கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள வழிநடத்தக் கூடும். தேவனுடைய வார்த்தை மற்றும் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, மனிதருக்குப் பயப்படுகிறவர்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த முயற்சிப்பார்கள். மனிதரைப் பற்றிய பயத்தை உடையவர்களாக இருந்து, தவறான காரியங்களைச் செய்த பலரைப் பற்றி வேதாகமம்  சொல்கிறது. உதாரணமான, சவுல் ராஜா சாமுவேலிடம் சொன்னதைப் பாருங்கள், ”நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்” (1 சாமுவே.15:24). இப்படியாக, மனிதரைப் பற்றிய பயமானது அனேகருக்கு, தேவபக்தியுள்ளவர்களுக்கும் கூட ஒரு கண்ணியாக மாறிவிடுகிறது. பலரும் நினைப்பது போல, தேவனுக்குப் பயப்படுதல் என்பது தேவனுக்குப் பயந்து பயந்து பயத்தில் காரியங்களைச் செய்வது அல்ல; அது எல்லாவற்றிற்கும் தேவனை நம்பி, அன்பில் அவருக்குக் கீழ்ப்படிவது ஆகும். நீதிமொழிகள் புத்தகத்தில், கர்த்தருக்குப் பயப்படுதலினால் வரும் பல நன்மைகளைப் பற்றி நாம் வாசிக்கிறோம் (1:7; 9:10; 10:27; 14:27; 15:33; 18:10; 19:23; 22:4; 28:26).

கர்த்தருக்குப் பயப்படுதலை உடையவர்கள் தேவனுடைய பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் கண்டடைகிறார்கள். மனிதரைப் பற்றிய பயம் உடையவர்கள் தங்களைத் தாங்களே ஒரு கண்ணியில் சிக்க வைத்து விடுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று தங்களைப் பயமுறுத்தின யூதர்களிடம் அப்போஸ்தலர்கள் சொன்னதை நாம் நினைவுகொள்ள வேண்டும் (அப்.5:29). நாம் தேவனை நம்பத் துவங்கும்போது, நாம் ஒரு ஆண்டின் எந்த நாளில் இருந்தாலும் சரி, அல்லது நம் வயது என்னவாக இருந்தாலும் சரி, நாம் நம் வாழ்வில் பெரிய காரியங்களைக் காணத் துவங்குவோம்.

பயன்பாடு:  நான் யாருக்குப் பயப்பட வேண்டும் என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்குக் கற்பித்திருக்கிறார் ( மத்.10:28; லூக்கா 12:4,5). நான் தேவனுக்குப் பயப்படும்போது, நான் வேறு எதற்கும் பயப்படத் தேவை இல்லை. ”இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்?” என்று நான் அவ்வப்போது என்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவது போல, “நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே” (கலா.1:10).  கர்த்தருக்குப் பயப்படும் பயமானது என்னை மனிதரைப் பற்றிய பயத்தில் இருந்து விடுவிக்கிறது. தேவன் எனக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். (2 தீமோ.1:7).

 ஜெபம்தந்தையாகிய தெய்வமே, என்னை உம் பிள்ளையாக மாற்றுகிற, எந்த பயத்தையும் அகற்றுகிற உம் அன்பிற்காக உமக்கு நன்றி. இயேசுவே, நீர் எனக்கு தருகிற சமாதானத்திற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, எந்த பயத்தையும் ஜெயிக்கவும், தேவனுக்கு எப்பொழுதும் கீழ்ப்படியவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 362

No comments: