வாசிக்க: சகரியா 13-14; நீதிமொழிகள் 30; வெளிப்படுத்தின விசேஷம் 20
வேத வசனம்: சகரியா 13: 1. அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு
ஊற்று உண்டாயிருக்கும்.
கவனித்தல்: புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று புனித நீராடுதல்
இந்தியாவில் புண்ணிய தீர்த்த யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. மத ரீதியான இப்படிப்பட்ட
புனித நீராடுதல் தங்கள் பாவங்களையும் கறைகளையும் நீக்க உதவும் பரிகாரமாக இருக்கிறது
என மக்கள் பாரம்பரியமாக நம்புகின்றனர். ஆயினும், புண்ணிய ஸ்தலங்களில் இருக்கும் தண்ணீரின்
தன்மை பற்றி நிபுணர்கள் எச்சரித்து, அவை நோய்களை உண்டாக்கக் கூடும் எனக் கூறுகின்றனர்.
இங்கு சகரியா 13:1 இல், எருசலேமில் உள்ளவர்கள் தங்கள் பாவத்தையும் அழுக்கையும் நீக்குவதற்காக
திறக்கப்பட்ட ஊற்று ஒன்றை நாம் பார்க்கிறோம். விக்கிரகாராதனை மற்றும் பாவ பழக்க வழக்கங்களை
விட்டுவிடும்படி எச்சரித்த தீர்க்கதரிசிகளுக்கு செவி கொடாமல் இருந்த மக்கள் மேசியாவிடம்
வந்து அவருக்காக அழுது புலம்புவார்கள். தேவனுடைய ஆவியானவர் தாமே அவர்களை மேசியாவிடம்
வரவழைப்பார். அவர்கள் தங்களுடைய பாவங்களில் இருந்து கழுவப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
ஆனால் அவர்களின் பாவங்களை எது கழுவி நீக்க முடியும்? தண்ணீரில் குளித்தல் வெளிப்பிரகாரமான
அசுத்தங்களைக் கழுவி சுத்தப்படுத்தும். ஆனால் அது நம் பாவங்களற கழுவி சுத்திகரிக்க
முடியாது. இங்கே, மனம் திரும்பி தன்னிடம் வரும் மக்களுக்கு தேவன் வைத்திருக்கும் முன்னேற்பாட்டை
நாம் காண்கிறோம்.
இந்த ஊற்று மேசியாவாகிய
இயேசுவைக் குறிக்கும் உருவகமாக இருக்கிறது. மேத்யு ஹென்றி என்பவர் சொல்வது என்னவெனில்,
“இயேசுவின் உருவக் குத்தப்பட்ட விலா பகுதியே இந்த ஊற்று ஆகும், அங்கிருந்துதான் தண்ணீரும் இரத்தமும் வந்தது
(யோவான் 19:34), அவை இரண்டுமே சுத்திகரிப்புக்கானவை.” நாம் தேவனின் மன்னிப்பைப் பெறுவதற்கான
தேவனுடைய “ஒரு போதும் வற்றாத” ஜீவ ஊற்று என ஸ்பர்ஜன் கூறுகிறார். தன் மக்களின் பாவங்களை
நீக்குவதற்கான தேவனுடைய வாக்குத்தத்தமானது இந்த திறக்கப்பட்ட ஊற்றில் நிறைவேற்றப்படும்
(சகரியா 3:9). தேவன் தன் ஜனங்களை மன்னித்து, எல்லா அசுத்தங்கள் மற்றும் விக்கிரக வணக்கத்தில்
இருந்து அவர்களை சுத்திகரிப்பார் என்பது புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் ஆகும்
(எரே.31:34; எசேக்.36:25; ரோமர் 11:27; எபி.10:16-18). இயேசு சிலுவையில் மரித்தபோது,
அந்நாளிலே, சுத்திகரிப்பின் மற்றும் மன்னிப்பின் ஊற்று அனைவருக்காகவும் திறக்கப்பட்டது.
நாம் நம் பாவங்களை அறிக்கை செய்யும்போது, ”அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும்
நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவான் 1:7,9). சகரியா 13:1ஆம் வசனத்தினால் ஈர்க்கப்பட்டு, வில்லியம் கௌபர்
என்பவர் கி.பி 1772 இல் பின்வரும் அர்த்தமுள்ள பாடலை எழுதினார். “இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே
எப்பாவத் தீங்கும் அதினால்
நிவிர்த்தியாகுமே.”
பயன்பாடு: என் பாவங்களுக்காக இயேசு மரித்த சிலுவையின் அருகில்
வரும்போது தேவனுடைய கிருபை, இரக்கம், மற்றும் இரட்சிப்பை நான் கண்டடைகிறேன். தேவனுக்கு
முன்பாக வருவதற்கு வேறு குறுக்கு வழி எதுவும் கிடையாது. என் பாவங்களை நான் அறிக்கை
செய்யும்போது, நான் பாவமன்னிப்பைப் பெற்று, தேவனுடன் ஒரு அன்பின் உறவைத் துவங்குகிறேன்.
நான் என் அக்கிரமங்களிலும் பாவங்களிலும் தேவனுக்கு மிகவும் தூரமாக இருந்தேன். ஆனால்
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக, நான் தேவனுக்கு அருகில் வருகிறேன். நான் தேவ
கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி. ”இது
தேவனுடைய ஈவு” (எபேசியர் 2:8,9). நான் கிறிஸ்துவில்
எப்பொழுதும் நிலைத்திருந்து, நல்ல மேய்ப்பராம் இயேசுவின் குரலுக்கு அனுதினமும் செவிகொடுத்துக்
கீழ்ப்படிய வேண்டும். கிறிஸ்துவில் நான் எனக்குத் தேவையான அனைத்தையும் உடையவனாக இருக்கிறேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் ஜனங்களின் பாவக் கறை
நீங்க நீர் உண்டு பண்ணி வைத்திருக்கிற ஏற்பாட்டிற்காக உமக்கு நன்றி. இயேசுவேம்
என்னை இரட்சிக்கும் உம் அன்பிற்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரே, உம் வழிநடத்துதலைப்
பின்பற்றவும், பாவங்களில் இருந்து என்னைக் கழுவி சுத்திகரிக்கவும், பாதுகாத்துக் கொள்ளவும்
உம் ஞானத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 363
No comments:
Post a Comment