Friday, January 7, 2022

ஜீவ புத்தகத்தில் என் பெயர்!

வாசிக்க:  மல்கியா 1-2; நீதிமொழிகள் 31; வெளிப்படுத்தின விசேஷம் 21

வேத வசனம்:  வெளிப்படுத்தல் 21: தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

கவனித்தல்:  வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் இருக்கும் அனேகர் பல்வேறு காரணங்களுக்காக முன்னேறிய வளர்ந்த நாடுகளுக்கு போய் வாழ விரும்புகின்றனர். அதற்காக அவர்கள் தீவிரமான முயற்சிகளை எடுக்கின்றனர். ஆயினும், ஒருவர் நினைத்தவுடன் அப்படிப்பட்ட நாடுகளுக்கு நுழைவு சீட்டு அல்லது விசாவை துரிதமாகப் பெற முடியாது. எனினும், விசா அல்லது நுழைவு சீட்டு கிடைப்பதில் உள்ள கஷ்டங்களைக் கண்டு மக்கள் தங்கள் முயற்சிகளை கைவிட்டுவிடுவதில்லை. எவ்வளவு கடினமாக விதிகள் உள்ளதோ அந்தளவுக்கு விடா முயற்சியுடன் அவர்கள் அனுமதி பெற முயற்சிக்கிறார்கள். கடைசியில், அவர்கள் விரும்பின நாட்டின் குடியுரிமையை பெறும்போது, ஏதோ பெரிய காரியம் ஒன்றை சாதித்தது போல அவர்கள் உணர்கிறார்கள். வெளி.21இல், தேவனுடைய புதிய வானம், புதிய பூமி, மற்றும் புதிய பரம எருசலேம் குறித்த கவர்ந்திழுக்கும் ஒரு குறிப்பை நாம் காண்கிறோம். புதிய வானத்தில் உள்ள ஆசீர்வாதமான வாழ்க்கையானது உலகில் உள்ள எந்த நாட்டிலும் உள்ள ஐசுவரியத்துடன் ஒப்பிடத்தக்கது அல்ல.

ஜீவ புஸ்தகத்தில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே தேவனுடைய புதிய நகரத்திற்குள் பிரவேசிக்க முடியும். கிறிஸ்தவர்கள் பரலோகம் பற்றிப் பேசும்போது, யாரெல்லாம் பரலோகில் நுழைய மாட்டார்கள் என்பதைப் பற்றி அதிகம் பேசி, அதைக் குறித்து எச்சரிக்கிறதை நாம் காண்கிறோம். வெளி.3:5இல் ஜெயங்கொள்ளுகிறவனுடைய பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படும் என நாம் வாசிக்கிறோம். உண்மையுள்ள விசுவாசிகளின் பெயர் ஜீவ புத்தகத்தில் இருக்கும் என்று இயேசு வாக்குப் பண்ணுகிறார். பிலிப்பியில் உபத்திரவத்தின் மத்தியில் இருந்த விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகையில், “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று எழுதுகிறார் (பிலி.3:20). தேவனுடைய ராஜ்ஜியத்தின் வேலைக்காக இயேசு அனுப்பின 72 சீடர்களும்  தங்கள் ஊழியத்தில் அவருடைய நாமத்தின் வல்லமை பற்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பி வந்து சொல்லுகையில், இயேசு அவர்களிடம் “ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” என்று சொன்னார் (லூகா 10:17-20). ஜீவ அப்பமாகிய இயேசுவை விசுவாசிக்கிற அனைவரும், அவருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுத்து கீழ்ப்படிகிறவர்களும், மற்றும் பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டு, கர்த்தருக்கேற்றபடி வாழ்கிறவர்களும் நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வார்கள்.

 அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியானவர் ஜீவ புத்தகத்தைத் திறக்கும்போது, உண்மையுள்ள சீடர்கள் தங்களுக்குரிய பரிசை கர்த்தரிடம் இருந்து பெறுவார்கள். புதிய எருசலேமில் சொல்ல முடியாத மற்றும் விவரிக்க முடியாத மகிழ்ச்சி விசுவாசிகளின் மத்தியில் இருக்கும். கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று அவர்கள் பாடிக் கொண்டே இருப்பார்கள். இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் வீண் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்வோம். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு நாம் இரட்சிக்கப்பட்ட போது, இந்த உலகில் நாம் தேவனுக்கு உண்மையாக ஊழியம் செய்யும்படி ஒரு புதிய வாழ்க்கையை வாழத் துவங்குகிறோம். மேலும், இயேசுவுடன் நித்தியத்திலும் தொடர்ந்து வாழ்வோம்.  தேவனுடைய மாபெரும் இரட்சிப்புக்காக நாம் எவ்வளவு நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும்!

பயன்பாடு: இயேசுவின் மீது நான் வைத்திருக்கும் விசுவாசமானது இந்த உலக வாழ்க்கைக்கும், இனி வரும் வாழ்க்கைக்கும் வாக்குத்தத்தம் உடையதாக இருக்கிறது. தேவனுடைய கிருபையினாலேயன்றி, கிரியைகளினால் நான் தேவனுக்கு முன்பாக வர முடியாது! என்னில் ஏதோ நன்மை இருக்கிறது என்பதற்காக அல்ல, தேவன் தம் அன்பினாலேயே என்னை இரட்சிக்கிறார். எவ்வித பாகுபாடுமின்றி, தேவனுடைய அன்பு தேவைப்படுகிற அனைவருக்கும் நான் அதைப் பகிர்ந்து, இயேசுவை விசுவாசித்து ஜீவ புத்தகத்தில் அவர்களுடைய பெயர்களைப் பதிவு செய்யவும், நித்திய வாழ்க்கைக்கும் நான் அழைப்பு கொடுக்க வேண்டும்.

 ஜெபம்பரலோதப் பிதாவே, நித்திய வாழ்க்கைக்கான உம் வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் இரட்சிப்புக்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரே, கர்த்தருக்கேற்ற வாழ்க்கையை வாழவும், என் வாழ்வில் தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேற ஆவலுடன் காத்திருக்கவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 364

No comments: