ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்கள் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவர். ஒரு முறை அவர் பேரூந்தில் பயணம் செய்யும்போது, டிக்கட் பரிசோதகர் ஒவ்வொருவரிடமாக பயணச் சீட்டை பரிசோதித்திக் கொண்டு வந்தார். இதைப் பார்த்த ஐன்ஸ்டைன் தன்னுடைய சட்டையில் உள்ள பாக்கெட்டில் கையை விட்டு டிக்கட்டைத் துழாவினார். அதன் பின்பு இடது பக்க பாக்கெட்டில் விட்டு துழாவியும் டிக்கட் இல்லை. ஐன்ஸ்டைன் அருகில் டிக்கட் பரிசோதகர் வந்தார், இவரோ ஒவ்வொரு பாக்கெட்டிலும் கையை விட்டு டிக்கட் கிடைக்காதா என்று துழாவிக் கொண்டிருந்தார். அருகில் வந்த பரிசோதகர் தன் முன் நிற்பது ஐன்ஸ்டைன் என அடையாளம் கண்டு, “ ஐயா, நீங்கள்தானே ஐன்ஸ்டைன்” என்றார். “ஆம்” என்ற பதில் உடனே வந்தது. “ஐயா மிகுந்த மரியாதைக்குரிய மற்றும் நபரான நீங்கள் கண்டிப்பாக டிக்கட் எடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஆகவே கவலைப் படவேண்டாம், உட்காருங்கள்” என்று சொல்லி அடுத்தவரிடம் டிக்கட் பரிசோதகர் சென்றார். சற்று நேரம் கழித்து அனவரையும் பரிசோதித்தபின் டிக்கட் பரிசோதகர் இறங்குகிற வேளையில் ஐன்ஸ்டைன் தன் இருக்கைக்கு அருகில் முழங்கால் படியிட்டு கையை தரையில் வைத்து தேடிக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனே அவர் அருகில் சென்று, “ ஐயா, நீங்கள் ஐன்ஸ்டைனாக இருக்கிற படியால், நான் தான் உங்களிடம் டிக்கட் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று சொல்லி விட்டேனே, பின்னே என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றுக் கேட்டாராம். “நான் ஐன்ஸ்டைன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் பிரச்சனை என்ன வெனில், நான் போகவேண்டிய இடம் என்ன என்பதை மறந்துவிட்டேன், டிக்கட்டைப் பார்த்தால் தான் அது தெரியும், ஆகவே தான் நான் டிக்கட்டைக் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று விஞ்ஞானி பதில் சொன்னாராம்.
நம்மில் அனேகர் கூட இப்படியே இருக்கிறோம். நாம் போய் சேரப் போகிற இடம் என்ன என்பதை அறிந்திருக்கிறோமா? நாம் ஒருவேளை எவ்வளவு பெரிய அறிவாளிகளாகவோ அல்லது ஒன்றுமே தெரியாதவர்களாகவோ இருந்தாலும் கூட போகும் இடம் தெரியவில்லை என்றால் நடுவழியில் திகைத்து நிற்க வேண்டியதாயிருக்கும். பரிசுத்த வேதாகமம் ”மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்” என்று சொல்கிறது. நாம் நம் விருப்பப்படி வாழ்ந்துகொண்டே தேவனைப் பிரியப்படுத்த முடியாது. நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் நாம் தேவனுடைய பிள்ளைகளாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பதையும் ரோமர் 8:13,14 வசனங்களில் வாசிக்கிறோம். வாழ்க்கை நம்மை இழுத்துச் செல்கிற இடங்களுக்கெல்லாம் செல்கிறோமா அல்லது கடவுளின் கட்டுப்பாட்டில் அவர் விரும்புகிறவைகளைச் செய்து அவர் நமக்கு நியமித்திருக்கிற பாதையில் இலக்கை நோக்கி பயணிக்கிறோமா என்பதை நாம் நிதானித்து அறிய வேண்டும். யாராவது உங்களிடம் வந்து நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்!
No comments:
Post a Comment