Monday, August 15, 2016

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (சுதந்திர தின கவிதை!)

நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம்
நாட்கள் பல ஆகியும் விடியவில்லை
விடியலைத் தேடி புறப்பட்டோர் பலர்
துடிப்புடன் ஆரம்பித்து முடிந்தது
நடிப்பில்

நடப்பு நிலவரங்கள்...பயங்கரம்!
பயம் அனைவரிடமும் நிரந்தரம்
வெளியேறியவர்கள் வெள்ளையர்கள்
வெளிப்பட்டவர்களோ கொள்ளையர்கள்
வெளியேறிக்கொண்டிருப்பதோ
வெள்ளையாக மானம், மனிதாபிமானம் என்றுபல
கறுப்பாக ஒன்றே ஒன்று... பணம்!

பண்பாடு நிறைந்த தேசம்
பணம் படுத்தும் பாடு
எல்லாமே வெளி வேஷம்
மாறவில்லை கோஷம்
மக்கள் மனதிலோ விஷம்
விதைத்துவிட்டனரே
மனம் பதைக்க வைத்துவிட்டனரே

விட்டலாச்சார்யா படங்களை விட மாயாஜாலம்
அனைத்தும் வெறும் வார்த்தைஜாலம்
மக்கள் மனதிலோ அழுகையின் ஓலம்
மறைந்த சூரியன் என்றாவது விடியும்?
மண்ணுக்குள் புதைந்தவை வெளிவரும்போது - இல்லை
விண்ணுக்கு சென்ற பின்பு - எப்படி இருந்தாலும்
பார்க்கத்தான் உயிர் இருக்காதே

எது சுதந்திரம் என்ற கேள்வி இயல்பு
அன்னியரிடம் இருந்து பெறுவதல்ல
என்பது நிதர்சனம் ஏனெனில்
அனைத்தும் வெறும் காட்சி மாற்றமே
அனைவருக்குள்ளும் விடுதலை
அவரவர் உள்ளத்தில் பெறவேண்டும்
ஆன்ம விடுதலை அது
ஆனந்தம் தரும் விடுதலை - மனதை
ஆனந்தக் கூத்தாட வைக்கும் - மனிதர்க்கு
உயிர் கொடுத்து உறவாட அழைக்கும்
உண்மையான இறைவன் தரும் அன்புப் பரிசு
வாரிசாக அழைக்கும் அன்பு அழைப்பு
இதிலேயே இருக்கு உண்மையான விடுதலை
மற்றதெல்லாம் வெறும் பிழைப்பு

No comments: