Wednesday, August 24, 2016

பாடல் பிறந்த கதை - 2 கண்மணி போல் காக்கும் தேவன்

இந்த தொடரின் முந்தைய பகுதியில் நான் முதன் முதலாக ஒரு பேருந்து பயணத்தின் போது எழுதிய பாடலைப் பற்றிச் சொல்லி இருந்தேன். அடுத்து எழுதும் போது என்ன எழுதலாம் என்று யோசித்த போது கடைசியாக நான் எழுதிய பாடலின் கதையைச் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் கடைசியாக இயற்றிய பாடல் என்று நினைத்திருந்த பாடலுக்குப் பின் இன்னும் இரண்டு பாடல்களை எழுத தேவன் கிருபை செய்துவிட்டார். ஆகவே நான் எழுத நினைத்த பாடலைப் பற்றி எழுதிவிடுகிறேன்.

ஒரு நாள் என் ஒருவயது மகளை மடியில் கிடத்தி அவளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென அவள் தன் கண்களை கசக்க ஆரம்பித்தாள். ஏன் மகள் இப்படிச் செய்கிறாள் என நான் பார்க்க முயற்சித்தபோது, அவள் விடாமல் தொடர்ந்து கண்ணை விரல்களால் கசக்கிக் கொண்டே இருந்தாள். ஐயையோ குழந்தைக்கு ஏதும் ஆகிவிட்டதோ! அவள் கண்களுக்கு ஏதேனும் ஆகிவிடக் கூடாதே, இப்படி கண்களை கசக்குகிறாளே என்று பதைபதைத்து, அவள் கைகளை விலக்கி கண்களை உற்றுப் பார்க்கிறேன். கள்ள மில்லா அந்த கண்கள் எவ்வித பாதிப்புமின்றி இருந்ததைக் கண்டு மகிழ்ச்சி ஒரு பக்கம், நம் தேவனும் இது போலவே நம்மை கண்மணியைப் போல பாதுகாக்கிறாரல்லவா என்று நினைத்து மனதில் ஒரு கிளர்ச்சி! இப்படி நினைத்த உடனே, “கண்மணி போல காக்கும் தேவன்” என்ற பதம் மனதில் இன்னும் ஆழமாக அடிமனதில் இருந்து வருகிறது. அதையே ஆரம்பமாகக் கொண்டு ஒரு பாடலை கடகடவென எழுதியும் விட்டேன்.

தமிழின் பழைமையான இராகங்களில் ஒன்றாக ஹரிகாம்போஜி இராகம் கருதப்படுகிறது. அந்த இராகத்தில் இப்பாடல் வந்தது இயல்பான ஒன்று. எனக்கு மனதுக்கும் பிடித்தமானதாக பாடல் அமைந்தது கண்டு உடனே என் நண்பருக்கு போன் போட்டு இதைச் சொன்னதுடன், கணினியில் ஒலிப்பதிவு செய்து அவருக்கு அனுப்பி கருத்து கேட்டேன். அவரும் பாடலின் இராகம் மற்றும் தாளத்தை பாராட்டி பத்திரமாக வைக்கச் சொன்னார். உங்களிடம் சொல்லி விட்டேன். மீண்டும் மற்றுமொரு பாடல் பிறந்த கதையை பிறிதொரு சமயம் விளக்குகிறேன். இப்போதைக்கு “கண்மணி போல காக்கும் தேவன்” பாடலின் வரிகள் உங்களுக்காக.... பாடலின் வரிகளில் ஒரு பாணியை கடைபிடித்திருக்கிறேன். கண்டுபிடித்தவர்கள் சொல்லலாம்.


கண்மணி போல் காக்கும் தேவன்

கண்மணி போல் என்னை
காக்கும் தேவா
மதில்போல சூழ்ந்தென்னை
காத்துக் கொள்வீர்
என்னை அரவணைப்பீர்
நான் உந்தன் பிள்ளை




பிள்ளையை பெற்ற தாய்
மறந்திடுவாளோ
மறந்தாலும் நீர் என்னை
மறப்பதில்லை
எனை வரைந்திருக்கின்றீர்
உம் உள்ளங்கையில்

உள்ளங்கை மேகம் போல்
உம் ஆசீர்வாதம்
பெருமழை போல் பெய்து
பெருகச் செய்யும்
சர்வ வல்ல தேவன்
கிருபை உந்தன் அன்பு

அன்பை நீர் காண்பித்தீர்
அளவிலாமல்
அதற்காக சிலுவையில்
அடிக்கப்பட்டீர்
என் பாவம் எல்லாம்
முற்றும் கழுவினீரே

கழுவும் உம் இரத்தம்
என் பரிகாரமே
கறை நீக்கி உருமாற்றி
இரட்சிக்குமே
இனிநான் உந்தன் சொந்தம்
இனிமை தங்கும் பந்தம்

No comments: